

எனக்குத் தேசாபிமானமும் ஜீவகாருண்யமும் ஒன்றேதான். மனிதத்தன்மையுடனும் ஜீவகாருண்யத்துடனும் இருப்பதனாலேயே நான் தேசாபிமானத்துடனும் இருக்கிறேன். இந்தியாவுக்குச் சேவைபுரிவதற்காக இங்கிலாந்துக்கோ ஜெர்மனிக்கோ தீமை செய்ய மாட்டேன். வாழ்க்கையைப் பற்றிய என் முறையில் ஏகாதிபத்தியத்துக்கு இடமே இல்லை. தேசபக்தியின் நியதி, குடும்பத் தலைவனின் நியதிக்கு மாறானது அல்ல. ஜீவகாருண்யத்துடன் இருப்பதில் சிரத்தை இல்லாதவராக ஒருவர் இருப்பாராயின், அவர் சரியான தேசாபிமானியாக மாட்டார். தனிப்பட்டவர் சட்டத்திற்கும் ராஜீய சட்டத்திற்கும் முரண்பாடு இல்லை.
நிரந்தரமான சமாதானம் சாத்தியம் என்பதில் நம்பிக்கையில்லாமல் இருப்பது, மனித இயல்பின் தெய்வத்தன்மையில் நம்பிக்கையில்லாததே ஆகும். இதுவரையில் அனுசரித்த முறைகளெல்லாம் தோல்வியுற்றன என்றால், இதற்காக முயன்றவர்களிடம் அடிமட்டத்திலிருந்து மனபூர்வமான சிரத்தை இல்லாததுதான் காரணம். அழிக்கும் இயந்திரங்களை நிர்வகிக்கும் மனித வர்க்கத்தின் முக்கியமான தலைவர்கள், அவற்றின் விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அந்த அழிக்கும் இயந்திரங்களை முற்றிலும் துறந்துவிடுவார்களானால், நிரந்தரமான சமாதானத்தை அடைந்துவிட முடியும். இப்பூமியிலுள்ள பெரிய வல்லரசுகள் தங்களுடைய ஏகாதிபத்தியத் தந்திரங்களைக் கைவிட்டாலன்றி இது சாத்தியமே அல்ல.
ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையேயும் அகிம்சைத் தத்துவம் சிறந்ததுதான் என்று கூறுவேன். ஐரோப்பா தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்றால், என்றாவது ஒருநாள் அங்கே பொதுவான படைபலக் குறைப்பு ஏற்பட்டுத்தான் ஆக வேண்டும். இந்தப் படைக் குறைப்பு ஏற்படுவதற்கு முன்னால், ஏதாவது ஒரு நாடு துணிந்து படைக் குறைப்பைச் செய்து, அதனால் ஏற்படும் ஆபத்துக்கும் துணிய வேண்டும். அப்படி ஒரு நாடு செய்யத் துணியுமானால் அந்நாட்டின் அகிம்சை உன்னத நிலைக்கு உயர்ந்து பிரபஞ்சத்தின் மரியாதையைப் பெறும். இந்நாட்டின் தீர்ப்பில் தவறே இராது. இது செய்யும் முடிவுகள் உறுதியானவையாக இருக்கும்; வீர தன்னலத் தியாகத்துக்கான சக்தியும் இந்நாட்டிடம் மிகுந்திருக்கும். தனக்கென வாழ்வதே போன்று பிற நாடுகளுக்காகவும் இந்நாடு வாழ விரும்பும்!