Last Updated : 23 Apr, 2019 09:50 AM

 

Published : 23 Apr 2019 09:50 AM
Last Updated : 23 Apr 2019 09:50 AM

இந்தியாவை அறிவோம்: மகாராஷ்டிரம்

இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம். தலைநகர் மும்பை. மெளரியப் பேரரசர்கள், சாதவாகனர்கள், வாகாடகப் பேரரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரி யாதவப் பேரரசர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலம். கி.பி.7-ம் நூற்றண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பில் மகாராஷ்டிரம் எனும் பெயர் முதலில் பதிவானது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி எனும் இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, மராத்தி, கொங்கணி பேசும் மக்கள் அடங்கிய பிராந்தியங்கள் மகாராஷ்டிரம் எனும் பெயரிலும் குஜராத்தி, கட்சி மொழி பேசும் பிராந்தியங்கள் குஜராத் எனும் பெயரிலும் 1960-ல் தனித் தனி மாநிலங்களாயின.

புவியியல் அமைப்பு

3,07,713 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட மகாராஷ்டிரம், பரப்பளவில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முக்கியமான மாநிலம். இந்தியாவின் பரப்பளவில் இது 9.3%. ஒரு சதுர கிமீ பரப்பில் 365 பேர் வாழும் மக்கள் அடர்த்தியைக் கொண்டது இம்மாநிலம் (தமிழ்நாட்டில் 555 பேர்). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தின் மக்கள்தொகை 11,23,74,333. இது நாட்டின் மக்கள்தொகையில் 9.28%. மக்கள்தொகையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தை வகிக்கும் மாநிலம். 79.8% பேர் இந்துக்கள். மகாராஷ்டிரத்தின் மக்கள்தொகையில் 30-32% வரை இருக்கும் மராத்தாக்கள்தான் இங்கு பெரும்பான்மையினர். குண்பி, தேஷ்முக், போன்ஸ்லே, ஷிர்கே உள்ளிட்ட சமூகத்தினர் மராத்தாக்களின் பட்டியலில் வருபவர்கள். பட்டியலின சமூகத்தினர் 11.8%, பழங்குடியினர் 8.9%, முஸ்லிம்கள் 11.5%, சீக்கியர்கள் 0.2%, கிறிஸ்தவர்கள் 1.0%, சமணர்கள், 1.2%, பெளத்தர்கள் 5.8%. இந்தியாவில் வசிக்கும் பெளத்தர்களில் 77.36% பேர் வசிப்பது இம்மாநிலத்தில்தான்.

சமூகங்கள்

மகாராஷ்டிர அரசியலில் மராத்தாக்கள் குண்பிக்களே தொடக்க காலம் முதல் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி தலைவர் கேஷவ்ராவ் ஜேதே, காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான யஷ்வந்த் ராவ் சவாண், முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் என்று பல முக்கியத் தலைவர்கள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை பதவிவகித்த முதல்வர்களில் 55% பேர் மராத்தாக்கள். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் 46% மராத்தாக்கள்தான். மராத்தி பேசும் மக்களே பிரதானம் என்று செயல்பட்டவரும் பெரும் செல்வாக்கு மிக்க தலைவருமான சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. சந்திரசேனிய காயஸ்த பிரபு சமூகத்தில் பிறந்தவர். ஆனால், சிவ சேனையின் செயல்பாடுகளுக்கு மராத்தாக்களின் முழு ஆதரவு உண்டு.

ஆறுகள்

கோதாவரி, கிருஷ்ணா, தபதி ஆகியவை மகாராஷ்டிரத்தின் பிரதான ஆறுகள். இம்மாநிலத்தின் நாசிக் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் கோதாவரி ஆற்றின் சமவெளி மேட்டுப் பகுதி முழுவதும், இம்மாநிலத்துக்குள்ளேயே அமைந்திருக்கிறது. கோதாவரியின் வடிநிலம் மகாராஷ்டிரத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி அளவு (1,52,199 சதுர கிமீ). மற்றொரு முக்கிய நதியான கிருஷ்ணா உற்பத்தியாவதும் இம்மாநிலத்தில்தான். நர்மதை, தபதி ஆகிய நதிகள் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுக்கு அருகே பாய்கின்றன. பிமா போன்ற நதிகளும், கோதாவரி ஆற்றின் பர்வாரா, மாஞ்சரா, வைநங்கங்கா போன்ற கிளை நதிகளும், தபதி ஆற்றின் பூர்ணா போன்ற கிளை நதிகளும் மாநிலத்துக்கு வளம்சேர்க்கின்றன.

காடுகள்

மாநிலப் பரப்பளவில் 17% வனப் பகுதிகள். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளிலும் காடுகள் அதிகம். மக்கள்தொகை அதிகரிப்பு, வேகமான வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக வனப் பகுதிகள் வேகமாகக் குறைந்துவருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 1984-85 காலகட்டத்தில், சுமார் 62,971 சதுர கிமீ பரப்பளவில் விரிந்திருந்த வனப் பகுதிகள், நகர்மயமாதல், திட்டமிடப்படாத வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக 61,361 சதுர கிமீ ஆகக் குறைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, சாந்தோலி தேசியப் பூங்கா உள்ளிட்ட ஆறு தேசியப் பூங்காக்களும், 35 சரணாலயங்களும் இங்கு உண்டு.

நீராதாரம்

2016 கணக்கின்படி, 49.57 லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்பை மகாராஷ்டிர அரசின் நீராதாரத் துறை உருவாக்கியிருக்கிறது. 77 நீர் மின்னுற்பத்தித் திட்டங்களையும் உருவாக்கியிருக்கிறது. இதன் திறன் 3,682 மெகாவாட். மாநிலத்தில் 3,267 அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றில் 1,800-க்கும் மேற்பட்டவை பெரிய அளவிலானவை. அணைக்கட்டுகளில் சராசரியாக 40%-க்கும் மேற்பட்ட நீர் சேமிப்பில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் மழைநீர் அணைகளில் சேமிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலத்தின்போது, ஒழுங்கற்ற மழைப்பொழிவு, அதைத் தொடர்ந்து நிலவிய வறட்சி ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு அணைக்கட்டுகளில் 32.88% நீர் மட்டுமே பயன்பாட்டுக்கு எஞ்சியிருக்கிறது.

கனிம வளம்

நாட்டின் கனிம உற்பத்தியில் மகாராஷ்டிரத்தின் பங்கு 2.85%. மகாராஷ்டிரத்தின் சராசரி ஆண்டு உற்பத்தி மதிப்பு ரூ.5,000 கோடி. நிலக்கரி, சுண்ணாம்புக்கல், பாக்ஸைட், கிரானைட், மாங்கனீசு போன்றவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. நாக்பூர், சந்திராபூர், யவத்மால், வர்தா ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி உற்பத்தி அதிகம்.

பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் பங்களிக்கும் மாநிலம். இந்திய ஜிடிபியில் மகாராஷ்டிரத்தின் பங்கு 15% என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தொழில் துறையில் 13% இம்மாநிலத்தின் பங்களிப்பு. வளர்ச்சி விகிதம் 9.4%. தலைநகர் மும்பை, இந்தியாவின் நிதித் துறை மற்றும் வர்த்தகத் துறையின் தலைநகராகக் கருதப்படுகிறது. மருந்துப் பொருட்கள் - மருத்துவச் சாதனங்கள் தயாரிப்பு, மென்பொருள் தயாரிப்பு, மின்னணுப் பொருட்கள், பொறியியல் துறை, எண்ணெய், எரிவாயு, உணவுப் பொருட்கள், வங்கித் துறை, நிதித் துறை, காப்பீட்டுத் துறை, ஜவுளித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் இது. விவசாயமும் பிரதானம்.

அரசியல் சூழல்

தொடக்கம் முதல் இங்கு ஆதிக்கம் செலுத்தியது காங்கிரஸ். 1995-ல் நிலைமை மாறியது. பாஜக, சிவ சேனை கூட்டணி அரசு அமைத்தது. காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் சேர்ந்த சரத் பவார், 1999-ல் மீண்டும் விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை, அனைத்து இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன், இந்திய விவசாயிகள் உழைப்பாளர்கள் கட்சி போன்ற கட்சிகள் இருந்தாலும், தேசியக் கட்சிகளும் சிவ சேனையும்தான் தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றன. கடுமையாக விமர்சித்த சிவ சேனையைச் சகித்துக்கொண்டு கூட்டணியைத் தொடர்கிறது பாஜக. தேசியவாத காங்கிரஸை இழப்பது ஆபத்து என்பதை உணர்ந்து சமரசம் செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ்.

முக்கியப் பிரச்சினைகள்

விவசாயிகள் தற்கொலை விகிதம் அதிகம் உள்ள மாநிலம். 2018-ல் நாசிக்கிலிருந்து மும்பை வரை விவசாயிகள் நடத்திய பிரம்மாண்டப் பேரணி, அரசை உலுக்கியது. 42% தாலுகாக்கள் வறட்சியை எதிர்கொண்டிருக்கின்றன. மராத்தாக்களுக்கு 16% இடஒதுக்கீடு மகாராஷ்டிர பாஜக அரசு வழங்கியது, இது மராத்தாக்களின் வாக்குகளைப் பெற்றுத் தரலாம். எனினும், இது இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி நீண்ட காலமாகப் போராடிவரும் தங்கர் சமூகத்தினர் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். வன உரிமைச் சட்டம் (2006) தங்களுக்குத் தீங்கிழைத்திருப்பதாகப் பழங்குடியினர் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள். பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக தலித், இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்ட விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளும் தேர்தலில் எதிரொலிக்கும்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x