Published : 09 Sep 2014 08:42 AM
Last Updated : 09 Sep 2014 08:42 AM

தேர்தல் எப்போதோ முடிந்துவிட்டது மோடி!

மன்மோகனை இயக்கிய அதே பெருநிறுவன சக்திகள்தான் மோடியையும் இயக்குகின்றன!

ஹரியாணாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம்வரைக்குமான நெடுஞ்சாலைக்கு அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சுதந்திர தின உரைக்குப் பின் இந்த விழாவிலும் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தியுள்ளார் நம் பிரதமர். தேர்தல் உரையை இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர் குழாம் முன்னின்று தயாரித்தது. இந்தக் குழாம் மோடியைத் தன் சொல்லுக்கேற்ப ஆடவைத்திருக்கலாம் என்று இப்போது லேசான ஒரு ஐயம் உண்டாகிறது. ஏனெனில், அதில் இடம்பெற்றவர்கள் இந்த ‘வளர்ச்சி’ யுகத்தில் அதிமுன்னேற்றம் கண்டவர்கள்; மேலும் வளர்வதற்கு ஆவலாக இருந்தவர்கள்.

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை

மோடியும் இளைஞர்கள் என்ன எழுதிக்கொடுத்தாலும் அதை அப்படியே மேடையில் ஒரு நாடக பாங்கில் உரையாற்றி மக்களைக் கவர்ந்தார். அதற்கான வெற்றியும் அவருக்குக் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு வெற்றியை எவரும் பெறவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த வெற்றி எதனால் சாத்தியப்பட்டது என்பதை பிரதமர் மோடி இன்னும் புரிந்துகொள்ளவில்லை; இந்த சேதி மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியும் அளப்பரிய பங்கை ஆற்றியதாக அத்வானியும் தெளிவுபடக் கூறியுள்ளார். காங்கிரஸின் அந்த அளப்பரிய பங்கில் முக்கியமானது ஊழல்களின் அணிவகுப்பு. வேளாண்மையின் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங் களைவிட மோடி வாக்காளர்களை எளிதாகக் கவரும் வகையில் ஊழல் ஒழிப்பையே முன்வைத்து அவர்களின் கோபங்களைத் திரட்டினார்; அதை வாக்குகளாகவும் மாற்றினார்.

நெடுஞ்சாலை அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் பேசியிருக்கும் விதத்தைப் பார்த்தால், அவர் ஊழல் ஒழிப்புக்கான ஒப்பனையைப் புதிதாகப் போட ஆரம்பித் திருப்பது தெரிகிறது. அதாவது, மறுபடியும் ‘முதல் லேர்ந்து’! ஊழல் ஒழிப்புக்கான கடுமையான நடவடிக் கைகளை எடுக்கலாமா என்று மக்களிடம் கேள்வி எழுப்பி யிருக்கிறார். மக்களின் ஆசியை ஊழல் ஒழிப்புக்காக வேண்டி நிற்கிறார். மக்கள் தங்களின் ஆசிர்வாதத்தை வழங்கினால் ஊழலை ஒழித்துக் கட்டிவிடுவேன் என்றும் உறுதி கூறுகிறார்.

பழைய சினிமாவின் புதுப் பிரதி!

பழைய சினிமாவுக்குப் புதுப் பிரதி எடுத்துப் பார்ப்பதைப் போல இருக்கிறது. மக்கள் வாக்களித்தது எதன் பேரில்? அந்த வாக்குகள் மனதளவில் வழங்கப்பட்ட ஆசிகள் இல்லையா? ஒரு தேர்தல் வெற்றியை எப்படித்தான் புரிந்துகொள்வது? ஒருவேளை, அவருக்கான உரையைத் தயாரித்துக்கொடுத்தவர்கள் தேர்தல் கால மனப்பாங்கிலிருந்து இன்னும் விலகி வராமல்கூட இருக்கலாம்; பழைய கதைகளைப் பேசுவதற்கான வாய்ப்புகள் இன்னும் நிறையவே இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். தங்கள் வசனங்களைப் பேசிய நாயகர் இப்போது நாட்டின் பிரதமர் என்கிற யதார்த்த உலகுக்கு அவர்கள் வந்துசேரவில்லை; மோடிக்கும் இன்ப அதிர்ச்சி நீங்காமல் இருக்கலாம்.

நடக்கும் என்பார்…

ஆனால், நமக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியும். மோடி எவரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை; அவருக்கு கால் விலங்கில்லை-அதாவது ஊழல் ஒழிப்பில்! அவர் செயல்பட்டுப் பல காத தூரத்துக்கு இந்நேரம் ஓடிவந்திருக்க வேண்டும். பலருக்கும் கைவிலங்குகள் பூட்டப்பட்ட ஓசையை இந்நேரம் நாம் கேட்டிருக்க வேண்டும்; சிறைக் கதவுகள் திறந்து இந்நேரம் பல பேரை உள்வாங்கியிருக்க வேண்டும். நிர்வாகத் திறமையும் தேசப் பற்றும் துடிப்பும் மிக்க கதாநாயகனாகத் திரைக்கு முன்னே தோன்றியவர்; திரைகளில் நம் கதாநாயகர்கள் இன்னமும் அதிரடியான காட்சிகளில்தான் முதல் தரிசனம் கொடுக்கிறார்கள். ஆனால், மோடி உருவாக்கப்பட்ட பிம்பத்துக்கு மாற்றான தோற்றத்தில் இருக்கிறார். நம் மனப்பாங்கில் ஊறிய அந்தத் தோற்றத்துக்காக மட்டும் பல ஊழல் ஒழிப்பு சாகசங்களைப் புரிந்திருக்க வேண்டியவர் மோடி. ஆனால், மாற்றுடை தரித்து அடுத்ததாக ஒரு வேஷம் கட்ட வந்திருப்பவரைப் போல இன்னொரு அவதாரத்துக்கு அவகாசம் கோருகிறார். ஊழல் ஒழிப் பில் உண்மையான அக்கறை இருந்திருக்கும் பட்சத்தில் நம் கண்முன்னே ஊழல்வாதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் போயிருக்க வேண்டும். ‘நடக்கும் என்பார் நடக்காது’ என்ற பாடல் வரி ஞாபகத்துக்கு வருகிறது.

மன்மோடி சிங்

பிரதமர் இவ்வாறு பேசுவது ஒன்றும் புதிய விஷயமில்லை; இவர் ஏன் சொன்னபடி செய்யவில்லை? இது மக்களின் கேள்வி. அவர்கள்தான் அவரிடம் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார்கள். மோடியின் தேர்தல் உரைகளைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கும், அவருடைய அரசியல் பூர்வாசிரமத்தை அறிந்தவர் களுக்கும் மோடி இன்னொரு சாதாரணப் பிரதமராகத்தான் செயல்படுவார் என்பது தெரியும்; ஊழல் கறைபட்ட மன்மோகன் சிங் இனி செயல்பட முடியாது என்கிற நிலையில், மோடியை முன்னிறுத்தியவர்கள் மக்களல்ல! மன்மோகனைப் பயன்படுத்திக்கொண்ட அதே சக்திகள் தான் மோடியைக் களத்துக்கு அழைத்துவந்தன.

மோடி ‘வித்தியாசமான’ ஒரு கட்சியின் வேட்பாளராகத் தேர்வுசெய்யப்படுவது, வேட்புமனு தாக்கல்செய்வது, ஊழல் ஒழிப்பு முழக்கமிடுவது போன்ற அனைத்தும் நாம் அனுபவித்த ‘ஜனநாயக மாயைகள்’. இதற்குப் பின்னிருந்த திரைகளை நீக்கிப் பார்க்க மனமில்லாமல் ஒருவித உத்வேக எழுச்சியுடன் வாக்காளர்கள் நின்றது நின்றபடியே தம் தேர்வைச் செய்துமுடித்துவிட்டார்கள். மக்களின் நலம் கருதாமல் வணிகரீதியான நிறுவன நலன்களைக் கருதியவர்கள் செயல்படும் தளத்தில் ‘ஊழல் ஒழிப்பு’ என்கிற அத்தியாயம் இருக்காது. அதனால்தான், தன் ஆட்சியின் முதல் அடியை அவரால் எடுத்துவைக்க முடியவில்லை.

மலைமுகடுகள்

காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்கள் சின்னஞ்சிறு அளவிலானவை அல்ல. அது நம்மை இடறும் கல் அல்ல; நம் பார்வையையே மறைக்கும் மலைமுகடுகள். நம்மை அந்த ஊழல்கள் எவ்வளவு கலவரப்படுத்தின என்பதைக் கூடிநின்று வேடிக்கை பார்த்தது உலகம். ஆகவே, ஊழல்களைத் தேடியலைய வேண்டிய நெருக்கடியும் கிடையாது. பின் என்னதான் நடக்கிறது இங்கே?

நம்மை நாமே ஆறுதல்படுத்திக்கொள்வோமாக! பொதுவாக, ஊழல்களுக்கு எதிரான நம் நாட்டின் அணுகுமுறைகள் சிறப்பானவை. சிறிய ஊழல்கள் நம் கண்களில் விழுந்த ஊசிகள்; அதிரடி நடவடிக்கைகளால் கலங்கடிப்போம். பெரிய ஊழல்கள் காற்றில் பறக்கும் துரும்புகள். அன்னவர்கள் நம் அரசியல் உலகின் பாக்கியவான்கள். ஊழல் எப்போதும் தன் வெற்றியின் மகா சரித்திரத்தைப் பிறர் எழுத வாய்ப்பளிக்காமல் தனக்குத்தானே எழுதிக்கொள்ளும்.

பிரதமர் மோடிக்கு இந்த விஷயம் தெளிவாகிவிட்டது, ஊழலை ஒழிக்க நம்மிடம் ஆசிகளைக் கோரியதன் மூலம் அவர் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லை என்கிற உண்மை நமக்கும் விளங்கிவிட்டது. இனி நமக்குச் சொல்ல இருக்கும் வார்த்தை வழக்கம்போல ஒன்றே ஒன்றுதான் ‘சத்ய மேவ ஜெயதே’.

- களந்தை பீர்முகம்மது, எழுத்தாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x