

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் குலாம் முஹம்மத் மஹ்மூத் பனாத்வாலா (1933-2008). இப்ராஹிம் சுலைமான் சேட்டைப் போலவே நாடாளுமன்றத்தில் இந்திய முஸ்லிம்களின் குரலை எதிரொலித்தவர்.
குஜராத்தின் கட்ச் பகுதியிலிருந்து மகாராஷ்டிரத் தலைநகர் மும்பைக்குக் குடிபெயர்ந்தது அவர்களுடைய குடும்பம். கல்லூரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் அரசியலுக்காக அந்த வேலையை உதறினார். ஆங்கிலம், உருது இரண்டிலும் அழகாகப் பேசக்கூடியவர் ஜி.எம்.பனாத்வாலா.
1962-ல் மகாராஷ்டிரத்தின் உமர்காடி சட்டமன்றத் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டார். 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1972-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று, சட்டமன்றத்தின் முதல் முஸ்லிம் லீக் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார். 1973-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த பனாத்வாலா, 1993-ல் அக்கட்சியின் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.
கேரளத்தின் பொன்னானி மக்களவைத் தொகுதியில் 1977-ம் ஆண்டிலிருந்து ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்தால் போதும், தொகுதிக்குக்கூடப் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டியதில்லை என்ற அளவுக்கு மாப்பிளா முஸ்லிம்கள் அவரிடம் பெரு மதிப்பு வைத்திருந்தனர்.
மணமுறிவுச் சட்டத்தில் முஸ்லிம் மகளிரின் உரிமைகளைப் பாதுகாக்க அவர் கொண்டுவந்த தனிநபர் மசோதாவைச் சட்டமாக்க ராஜீவ் காந்தி அரசு உதவியது. ஷா பானு வழக்கு, பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட விவாதங்களில் முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வாதாடிவந்தார்.