Last Updated : 18 Apr, 2019 11:46 AM

 

Published : 18 Apr 2019 11:46 AM
Last Updated : 18 Apr 2019 11:46 AM

ஏன் வாக்களிக்கிறேன்? எப்படித் தேர்ந்தெடுக்கிறேன்?

தேர்தலில் வாக்களிப்பதைக் கடமையாகக் கருதுபவர்கள் எந்தத் தடைகள் இருந்தாலும் வாக்களிக்கத் தவறுவதில்லை. சோம்பேறித்தனத்தாலும் பொறுப்பின்மையாலும் வாக்களிக்கத் தவறுவோர் தன் முடிவை நியாயப்படுத்திக்கொள்ள ‘என் ஒரு ஓட்டால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப்போகிறது?’என்ற ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முற்படுவது வழக்கம். ஆனால், வாக்களிப்பின் உன்னதம் உணர்ந்தோர் என்னென்ன காரணங்களுக்காகவெல்லாம் வாக்களிக்கிறார்கள்? எப்படியெல்லாம் தங்களுக்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

அபிநயா, மென்பொருள் ஊழியர்

என்னுடைய ஓட்டும் மாற்றத்துக்கு வித்திடும் என்ற நம்பிக்கைதான் வாக்குச் சாவடிக்கு என்னை அழைத்துச் செல்கிறது. எனது அப்பா காலங்காலமாக ஒரே கட்சிக்குத்தான் வாக்களித்துவருகிறார். ஏன் என்று காரணம் கேட்டால் அவரிடம் பதில் இல்லை. எனது தேர்வு ஒவ்வொரு முறையும் புதியவர்கள் பக்கமே இருக்கிறது. மாற்று அரசியலை எதிர்நோக்கியே புதிய வேட்பாளருக்கு வாக்களிக்கிறேன்.

வித்யா, குடும்பத் தலைவி

ஒரு நல்லவர் தோல்வியுறுவதற்கு எனது ஒரு ஓட்டு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்கிறேன். ஆட்சியில் இல்லாதபோதும் தொகுதிக்காக உழைத்தவரே அதிர்ஷ்டவசமாக இந்த முறை என் தொகுதியில் களம் காண்கிறார். மக்கள் பணியில் அவரது பங்களிப்பை நேரில் பார்த்ததால் அவருக்கே வாக்களிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

தமிழ்ச்செல்வி, கூலித் தொழிலாளர்

ஒரு வேட்பாளர் பணம் கொடுத்து வாக்கு கேட்கிறார். இன்னொருவர் சாதியைச் சொல்லி வாக்கு கேட்கிறார். அப்படிப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக வாக்களிக்க மாட்டேன். கண்மாய் வேலைதான் எனக்குச் சோறு போடுகிறது. என் பிழைப்புக்கு வழிசெய்பவர்களையே ஆதரிப்பேன். விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருபவர்களுக்கே எனது ஓட்டு.

அருணா, மாடல்

குடும்பத் தலைவர் சரியில்லை என்றால் அந்தக் குடும்பம் பாதிப்பைச் சந்திக்கும் எனில், பல்வேறு குடும்பங்கள் அடங்கிய ஒரு சமூகத்தை ஆளப்போகும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? அந்த அடிப்படையில்தான் நான் வாக்களிக்கிறேன். மக்கள் பணியைச் செய்வதில் தீவிர முனைப்பு காட்டிவருபவரையே நான் தேர்ந்தெடுக்கவிருக்கிறேன்.

அருள் பிரகாஷ், முன்னாள் ராணுவ வீரர்

நாட்டை ஆளும் முக்கியமான பதவிகளில் இருக்கக்கூடிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்பதில் எனது பங்களிப்பும் இருக்கிறது என்பதற்காக வாக்களிக்கிறேன். சாதி, மத அடிப்படையில் ஒருபோதும் வாக்களிப்பதில்லை. அவர்கள் பதவியில் இருந்தபோது எனது தொகுதிக்காக என்னென்ன செய்திருக்கிறார்கள் - செய்யவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒப்பிட்டே சம்பந்தப்பட்ட கட்சியையோ வேட்பாளரையோ ஆதரிக்கிறேன்.

 

கே.ரமேஷ், விவசாயி

நானும் சேர்ந்துதான் இந்த நாடு என்பதை உணர்ந்திருப்பதால் வாக்களிக்கிறேன். எல்லா மாநிலங்களையும், எல்லா சமூகங்களையும் சமமாக பாவித்து ஆட்சி நிர்வாகம் செய்வோருக்குத்தான் எனது ஓட்டு. கூட்டணி ஆட்சி என்றால் அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, விவசாயத்துக்கு யார் முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதற்குக் கவனம் கொடுக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x