Published : 05 Apr 2019 09:57 AM
Last Updated : 05 Apr 2019 09:57 AM

இதுதான் இந்தத் தொகுதி: பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரம்பலூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குளித்தலை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லால்குடி, முசிறி, மணச்சநல்லூர், துறையூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அமைந்துள்ளன. கி.பி 10-ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட வாலீஸ்வரர் கோயில், ஆங்கிலேயர் படைக்கும் பிரெஞ்சு படைக்கும் இடையே வாலிகண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடிகோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்கள் இத்தொகுதிக்குள் அமைந்துள்ளன.

பொருளாதாரத்தின் திசை: இத்தொகுதி மக்களின் பிரதானத் தொழில் விவசாயம். சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளனர். வாழை, கரும்பு, பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயப் பொருட்களின் விலை நிரந்தரமானதாக இல்லை என்பதால் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. விவசாயம் லாபகரமான தொழிலாகப் இல்லையாததால் பலர் விவசாயத் தொழிலை விட்டு வேலை தேடி பெரு நகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் இடம்பெயர்கின்றனர்.

தீர்மானிக்கும் பிரச்சனைகள்: விளைவிக்கும் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கவில்லை என்கிற அதிருப்தி இப்பகுதி விவசாயிகளிடம் உள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்கியதால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை ஒருவருக்கும் வந்து சேரவில்லை. மேலும், நடப்பு ஆண்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.5-க்கு வாங்குவதற்குக்கூட ஆள் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: சின்ன வெங்காயம், வாழை ஆகிய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும், பெருமளவில் ஏற்றுமதி செய்யவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் பாதை வசதி இல்லாத இம்மாவட்டத்தில் பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருமாந்துறை அருகே தனியார் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னமும் தரிசாகக் கிடக்கிறது. இரூர் அருகே சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் 5 ஆண்டுகளாகவும், அரசு மருத்துவக் கல்லூரித் திட்டம் 9 ஆண்டுகளாகவும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன. இத்தொகுதியில் 4 சட்டமன்றத் தொகுதிகளின் வழியே காவிரி ஆறு பாய்கிறது. ஆனாலும், கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளது. முசிறி அருகே காவிரியிலிருந்து கால்வாய் வெட்டி தாத்தையங்கார்பேட்டை, துறையூர், பெரம்பலூர், அரியலூர் வழியாக மழைக்காலத்தில் காவிரியில் பெருக்கெடுத்து  ஓடும் உபரி நீரைக் கொண்டுசெல்ல வேண்டும். இதன்மூலம் 400-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி இப்பகுதிகளில் பாசன வசதியும், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். பல ஆண்டுகளாகப் பேச்சளவில் உள்ள இந்தத் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்:  இத்தொகுதியில் சுமார் 27% முத்தரையர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து ஆதிதிராவிடர் இனத்தவர்களும், ரெட்டியார், உடையார் சமூகத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

அதிக முறை வெற்றியை ருசித்தவர்கள்: மிகவும் பின்தங்கிய தொகுதி என்றாலும்கூட இத்தொகுதியில் அதிக முறை விஐபி வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். சிறந்த நாடாளுமன்றவாதியாகப் புகழ்பெற்ற

இரா.செழியன், தொழிற்சங்கத்  தலைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த பழனியாண்டி, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, நடிகர் நெப்போலியன் ஆகிய பிரபலங்கள் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர். திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளன.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 13,76,499

ஆண்கள் 6,72,146

பெண்கள் 7,04,273

மூன்றாம் பாலினத்தவர்கள் 80

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 95.0%

முஸ்லிம்கள்: 3.5%

கிறிஸ்தவர்கள்: 1.2%

பிற சமயத்தவர் 0.3%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x