அம்பேத்கர் தொடங்கிய அரசியல் இயக்கம்

அம்பேத்கர் தொடங்கிய அரசியல் இயக்கம்
Updated on
1 min read

இந்தியக் குடியரசுக் கட்சி, பி.ஆர்.அம்பேத்கரால் 1956-ல் தொடங்கப்பட்டது. குடியரசுக் கட்சியில் சேரும் உறுப்பினர்கள் அரசியலில் நுழைய பயிற்சிப் பள்ளியையும் அவர் ஏற்படுத்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது. முதல் அணியில் 15 மாணவர்கள் சேர்ந்தனர்.

குடியரசுக் கட்சி அமைப்புக்கு இரண்டு முன்னோடிகள் உள்ளன. சுதந்திரத் தொழிலாளர் கட்சி  (ஐஎல்பி) என்ற அமைப்பை அம்பேத்கர் 1936-ல் தொடங்கினார். இந்தியாவின் பிராமணிய, முதலாளித்துவ அமைப்புகளை அந்த அமைப்பு எதிர்த்தது. சாதி அமைப்புகளைக் களைந்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, இந்திய உழைக்கும் வர்க்கத்தை ஆதரித்தது. ஐஎல்பி அமைக்கப்பட்டதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரிக்கவோ வரவேற்கவோ இல்லை. ‘இது உழைக்கும் வர்க்கத்தின் வாக்குகளைப் பிளந்துவிடும்’ என்று அவர்கள் கருதினர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைக்கிறார்களே தவிர ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மனித உரிமைகளுக்காகப் பாடுபடவில்லை என்று அம்பேத்கர் அதற்குப் பதிலளித்தார்.

சுதந்திரத் தொழிலாளர் கட்சியை அடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ‘பட்டியல் சாதிகளின் சம்மேளனம்’ (எஸ்சிஎஃப்) என்ற அமைப்பை

1942-ல் தொடங்கினார் அம்பேத்கர். மதறாஸ் மாகாணத்தைச் சேர்ந்த என். சிவராஜ் அதன் தலைவராகவும் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த பி.என்.ராஜ்போஜ் அதன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர். ஐஎல்பி, 1930-ல் தொடங்கிய டிசிஎஃப்பில் எது இந்திய குடியரசுக் கட்சியாக மலர்ந்தது என்பதில் சர்ச்சை உண்டு.

குடியரசுக் கட்சி, பலமுறை பிளவுபட்டிருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் ‘குடியரசுக் கட்சி’ என்ற பொதுப் பெயருடன் ஒரு நேரத்தில் இருந்தன. பிரகாஷ் அம்பேத்கரின் ‘படிபா பகுஜன் மகாசங்’ என்ற அமைப்பைத் தவிர பிற குடியரசுக் கட்சிகள், இந்தியக் குடியரசுக் கட்சி (ஐக்கியம்) என்ற பெயரில்  இணைந்தன. அதிலிருந்து கவாய் தலைமையில் ஒரு பிரிவும் ராம்தாஸ் அதாவாலே தலைமையில் ஒரு பிரிவும் பிறகு பிரிந்துவிட்டன. பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கிய கான்சி ராம், இந்தியக் குடியரசுக் கட்சியில் எட்டு ஆண்டுகள் செயல்பட்டவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in