

திமுகவின் முதல் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார் மு.கருணாநிதி. தமிழ்நாட்டில் 1971-ல் தமிழக சட்டமன்றத்துக்கும் மக்களவைக்கும் சேர்ந்தே தேர்தல் நடந்தது. அப்போதெல்லாம் வாக்குக் கணிப்பு, கருத்துக் கணிப்புகள் வரவில்லை. இருந்தாலும் பத்திரிகையாளர்களும் அரசியல் தலைவர்களும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்துவிட்டு காமராஜரும் ராஜாஜியும் ஒரே அணியில் இருப்பதால் இம்முறை ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும், காமராஜர் ஆட்சி அமைப்பார் என்று கூறினர். ஆனால், அவர்களது கணிப்பு பொய்த்தது. தேர்தல் முடிவுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே சாதகமாக இருந்தன.
அப்போது காமராஜரின் காதுபட, தேர்தல் முடிவுகள் குறித்து சிலர் விவாதித்துக்கொண்டனர். ‘இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் ரஷ்யாவிலிருந்து வந்த மை பயன்படுத்தப்பட்டதாம், அந்த மை வேலைதான் இது’ என்று பேசினர். காமராஜருக்கு வந்ததே கோபம். ‘‘தோத்துட்டம்னு ஒத்துக்கிட்டு, ஏன் தோத்தம்னு யோசிங்க, பலன் இருக்கும். இப்படிக் கட்டுக்கதையெல்லாம் பேசாதீங்க போங்க’’ என்று விரட்டிவிட்டார்.