

அசுர வளர்ச்சி பெற்ற தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது தென் சென்னை. மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மறைந்த முதல்வர் அண்ணா, முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் என மிகப் பெரிய ஆளுமைகள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி இது. 1951-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் ‘மெட்ராஸ்’ தொகுதியில் தென் சென்னையும் அடங்கியிருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் இணைக்கப்பட்டன. இதில், தமிழகத்தின் அதிக வாக்காளர்களைக் கொண்டது சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தின் திசை: மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும்
இத்தொகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பழமை வாய்ந்த கோயில்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி
நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது இந்தத் தொகுதி. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட தொகுதி. வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சென்னை மாநகராட்சி மற்றும், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளைக் கொண்ட தென் சென்னைத் தொகுதியில், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்னும் குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. மேடவாக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் இணைப்புகள் இதுவரையிலும் வழங்கப்படாதது பெரும் சிக்கலாக உள்ளது. மேலும், தொகுதிகளில் சில இடங்களில் மழைநீர் வடிகால்கள், கழிவுநீர்ப் பாதைகளுக்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்துவருகின்றன.
நீண்ட காலக் கோரிக்கைகள்: வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த தொகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இத்தொகுதியின் நீண்ட காலக் கோரிக்கை.
ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1991 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதரன் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை. அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் எனப் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தத் தொகுதியில் அதிகம். எனவே, வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என எதிர்பார்க்க முடியாது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.
அதிகம் வெற்றி பெற்றவர்கள்: தென் சென்னை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது. திமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
களம் காணும் வேட்பாளர்கள்:
தமிழச்சி தங்கபாண்டியன் – திமுக
ஜெ.ஜெயவர்தன் – அதிமுக
ஆர்.ரங்கராஜன் – மக்கள் நீதி மய்யம்
இசக்கி சுப்பையா – அமமுக.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 19,73,315
ஆண்கள் 9,79,480
பெண்கள் 9,93,446
மூன்றாம் பாலினத்தவர்கள் 389