நாட்டைக் காக்கவே காங்கிரஸுடன் கூட்டணி - சி. மகேந்திரன் பேட்டி

நாட்டைக் காக்கவே காங்கிரஸுடன் கூட்டணி - சி. மகேந்திரன் பேட்டி
Updated on
2 min read

தேசியக் கட்சி அங்கீகாரத்தை இந்தத் தேர்தலில் எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கூட்டணி, வெற்றி வாய்ப்பு என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் அவருடனான பேட்டி:

பாஜகவின் ஐந்தாண்டுகால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பல்வேறு மதம், மொழி, இனப் பிரிவுகளைக் கொண்ட இந்த நாட்டில் மன்னராட்சிக் காலத்தில்கூட ஒற்றுமைக்கான சாத்தியங்கள் இருந்தன. அந்த ஒற்றுமையைச் சிதைத்தால், இந்தியா மீண்டெழ பல நூறு ஆண்டுகள் ஆகும் என்ற புரிதல் இல்லாமல், அதில் கைவைத்திருக்கிறது பாஜக. இந்தியாவின் பொருளாதாரச் சுயசார்புத்தன்மையையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறிய மோசமான ஆட்சி இது.

ஆனால், ‘மறுபடியும் மோடிதான் வெல்வார்’ என்று கருத்துக்கணிப்புகள் வருகின்றனவே?

விளம்பரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள், அதே பாணியில் ஆட்சியைத் தக்கவைக்கப் பார்க்கிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்கு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களே சாட்சி. மோடி அலை வீசியபோதே, பல மாநிலங்களில் அவர்களால் வெல்ல முடியவில்லை. இப்போது எதிர்ப்பலை வீசுகிறது. எப்படி வெல்வார்கள்?

தமிழகத்தில், ‘தாமரை மலரவே மலராது’ என்பது வறட்டுத்தனமான வாதம் இல்லையா? இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும்விட வலுவான நிலையில்தானே பாஜக இருக்கிறது?

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் சார்பில் ஒருவர் கூட இருக்கக் கூடாது என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டம். அதை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி வலுவிழந்துவிட்டது என்ற சொல்லக் கூடாது. தனியாகப் போட்டியிட்டால் பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது தமிழகத்தில் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்கள் எவ்வளவு குறைவான வாக்குகளை வாங்கினார்கள் என்பது நமக்குத் தெரியும்!

பாஜகவை எதிர்க்கிறீர்கள் சரி. எந்த அடிப்படையில் காங்கிரஸை ஆதரிக்கிறீர்கள்?

நாட்டை முட்டுச்சந்துக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறார் மோடி. இந்த அபாயத்திலிருந்து இந்தியாவை மீட்கவே நாங்கள் காங்கிரஸோடு கை கோத்திருக்கிறோம். இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாத அளவுக்கு ஹிட்லரின் கை பெரிய அளவில் ஓங்கியபோது, தன் வாழ்நாள் எதிரி என்று ஒன்றையொன்று கருதிய ரஷ்யாவும், அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து கூட்டணி அமைத்துத்தான் ஹிட்லரை வீழ்த்தினார்கள். வீடு இருந்தால்தானே கூரையை மாற்ற முடியும்?

இந்தத் தேர்தலில் பண விநியோகம் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்களே, பணநாயகத்தை ஜனநாயகம் வென்றுவிடுமா?

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேட்பாளர்களிடையே சம போட்டியை உருவாக்குவதற்காக தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்கிற திட்டம் ஒன்றைப் பரிந்துரைத்தார். அதன் தேவை இன்றைக்கும் இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் கேடு தமிழகத்தில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. தேர்தல் முறையையே மாற்றினால்தான் இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியும். அந்த மாற்றங்கள் இந்தத் தேர்தலில் சாத்தியமில்லை. என்றாலும், பணப் பட்டுவாடாவையும் மீறி வெற்றிபெற முடியும் என்று சொல்வது எங்கள் அரசியல் மீதிருக்கும் நம்பிக்கையில்தான். அரசியல் போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்தினால், பணம் தோற்றுப்போகும் என்பதுதான் கடந்த கால வரலாறு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in