

உரிய அனுமதியில்லாமல் காடுகளில் வசிக்கும் பழங்குடிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 13- ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாடெங்கிலும் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக, அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து; வழக்கை ஜூலை 10-க்குத் தள்ளிவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கும் என்று தற்போது எவராலும் கணிக்க முடியாது. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என சமூக அக்கறையாளர்கள் பதறியபடி இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், சில நாட்களுக்கு முன்னால் கடற்கரைப் பழங்குடிகளுள் ஒன்றான கடையர் சமூக மக்கள் முன்னெடுத்த கலந்துரையாடல் ஒன்றில் பங்குகொள்ளச் சென்றிருந்தேன். நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர் முதல் பெரியவர்கள் வரை ஒருவகையான அதிர்ச்சியிலிருந்து மீளாதவர்களாகவே இருந்தார்கள். கடற்கரையோரங்களில் வாழும் கடையர் சமூக மக்களை அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே, சமவெளி சார்ந்த தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைப்பதற்கான முயற்சியில் சில மாற்றுச் சமுகத் தலைவர்கள் முயல்வதாகவும், அவர்களது சிபாரிசின் பேரில் அரசும் இந்த இணைப்பைப் பரிசீலனை செய்து வருவதாகவும் சமீபகாலமாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவர்களின் அச்சத்துக்குக் காரணம் இதுதான்.
பலவீனப்படுத்தும் உத்தி
தங்களது உள்ளுணர்வுகளைப் பாதித்து, தனித்த தமது கலாச்சார வாழ்வை வேரோடுப் பிடுங்கி எறியும் இந்த இணைப்பை தங்களைக் கலந்தாலோசிக்காமல் எப்படி முடிவு செய்ய முடியும் என்பதே உரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் ஒட்டுமொத்தக் குமுறலாய் இருந்தது. வெளிப்படையாக நடந்த கலந்துரையாடலில், பங்கெடுத்தவர்களில் ஒருவர்கூட சமூகநீதியற்ற இந்த இணைப்பு முயற்சிக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனித்தேன்.
பழமையான தனித்துவப் பண்பாடுகளோடு, பிற சமூகங்களோடும், அரசு நிர்வாகத்தோடும் தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கமும் உள்ளவர்கள்தான் தமிழகக் கடலோரப் பழங்குடிகள். இவர்களது இந்தக் குணநலன்களையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக, அவர்களைத் தங்களோடு இணைத்து, பெரும் எண்ணிக்கைச் சமூகமாகக் காட்டிக்கொள்ள முயல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது உரிய அரசியல் பிரதிநிதித்துவமில்லாமல் அல்லல்படும் கடலோரச் சமூகங்களின் வாழ்வைப் புறவாசல் வழியே நுழைந்து பலவீனப்படுத்தும் நவீன உத்தி.
கடையர் சமூகம் என்பது, பெரிய பட்டினவர், சிறிய பட்டினவர், செம்படவர், ஓடக்காரர், வருணகுல முதலி, பர்வத ராஜன், நாட்டார், பள்ளி, கடையர், கரையர், முத்திரையர், பரவர், முக்குவர், வலையர், வலைஞர், பரதர், அம்பலக்காரர், நுழையர் போன்ற கடலோரச் சமூகங்களை உள்ளடக்கிய பரதவர் என்று சங்ககாலத்திலிருந்தே பதிவுபெற்ற தமிழ்த் தொல்குடியின் அசைக்க முடியாத அங்கம். தமிழின் தொன்மையான இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் கடையர், கடைசியர், கடசர், கடைஞர் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு பட்டங்கட்டியர் என்ற குலப்பெயரும் உண்டு. இவர்கள், மருத நிலப்பகுதியிலிருந்து நெய்தலுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று நிலவும் கருத்து ஆய்வுக்குறியது. மருத நிலத்திலும், ஆறுகளின் கடைமடைப் பகுதிகளில் மீன்பிடித்தே வாழ்ந்திருந்த இவர்கள், தங்கள் நாடோடிப் பண்பால் கடற்புரம் நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், இன்று தமிழகத்திலும் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் கரைக்கடல், அண்மைக்கடல் பகுதியில் பாரம்பரியமாகத் தொழில் செய்யும் இவர்களது நெய்தல் வாழ்வு, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. வாழிடமும் தொழில்முறையும் பழக்கவழக்கமும் பண்பாடும்
மாறாத இத்தொல்குடியை, கடலோர வாழ்வுக்குச் சம்பந்தமே இல்லாத மற்றொரு சமூகம் தங்களோடு இணைத்துத் தங்களுக்கான இடத்தை தக்கவைக்க முயல்வது, எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.
திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து, கடலைத் தங்கள் தாயாய், கடற்கரையை தங்கள் தாய்மடியாய் மதித்துத் தொழில் செய்யும் இம்மக்கள், கடலோரப் பழங்குடிகள் என்பது மறுக்க முடியாத வரலாற்றுச் சான்று. கரையோர மீன்பிடித்தலோடு, முத்துக் குளித்தல், சங்கு குளித்தல், கடற்பாசி சேகரித்தல், சுண்ணாம்பு நீற்றல், கடலோர விவசாயம் போன்ற தொழில்களில் சுற்றுச்சூழல் அக்கறையோடு பல்லாயிரம் ஆண்டுகளாய் கடையர் சமூக மக்கள் வாழ்கிறார்கள். தனித்த கலாச்சார அடையாளங்களோடு வாழும் இந்த மக்களைத் தங்களது பாரம்பரியப் பெயரை, கலாச்சாரத்தை இழக்கச் செய்வது சுதந்திரமாய் வாழ்தல் என்ற மனிதப் பண்புக்கு எதிரானது.
பலிகடாக்களாக வேண்டுமா?
தலைமுறைத் தலைமுறையாய் வாழ்தலின் மூலம் கடற்கரை எல்லைகளைப் பாதுகாத்து, இயற்கையான கடல்வளங்களையும் அக்கறையோடு பேணும் இப்பழங்குடி மக்களை வல்லாதிக்கத்தோடு அணுகுவது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சமூகம், பண்பாடு, தொழில்முறை, திருமண உறவுகள் போன்ற அம்சங்கள் எதிலும் ஒட்டோ, உறவோ இல்லாத இருவேறு சமூகங்களை, ஒருசாராரின் விருப்பத்துக்கு மாறாக மற்றவரோடு இணைப்பது என்பது பாரம்பரியமான கடலோர வாழ்வில் அமைதிச் சீர்குலைவை ஏற்படுத்திவிடும்.
‘ஏதோ ஒரு சமவெளிச் சமூகத்தின் அரசியல் லாபங்களுக்காக நாங்கள் ஏன் பலியாக்கப்படவேண்டும்?’ என்று கேள்வி எழுப்பும் இம்மக்கள், “ஏற்கெனவே கல்வி, பொருளாதாரம், தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவருகிறோம். இந்நிலையில், எங்களது விருப்பத்துக்கு மாறாக, எண்ணிக்கையில் பெரும்பான்மை உள்ள ஒரு சமூகத்தோடு வலிந்து இணைக்கப்பட்டால், இதுவரையிலும் கனவாகவே இருக்கும் ஆட்சி, அதிகாரப் பகிர்வில் பங்கு பெறுவது என்பது நிறைவேறாமலேயே போய்விடும். தொன்மையும் தனித்தன்மையும் வாய்ந்த கடையர் என்ற சமூக அந்தஸ்தையும் கடலோரத்தில் நாங்கள் இழந்துவிடுவோம்’ என்று அழுத்திச் சொல்கிறார்கள் களத்தில் நான் சந்தித்த மக்கள்.
காலனிய மனப்பான்மையின் தொடர்ச்சி
காலனிய ஆட்சிமுறையின் நிர்வாக அமைப்பையே உள்வாங்கிய நமது ஆட்சியாளர்களும் பெரும் சமூகங்களும் பழங்குடிகளைப் பலவீனப்படுத்தும் அதே மனநிலையில் இன்னமும் தொடர்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், பூர்வீக பழங்குடி மக்களின் வாழ்வுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். காடுகளில் பூர்வீகமான பழங்குடிகளை வெளியேற்றி வளங்களைச் சூறையாடினார்கள். பழங்குடிகள் வாழவே கூடாது என்பதுதான் அவர்கள் கொள்கை. அதே நுகர்வு மனநிலையை, நிர்வாக உத்தியை உள்வாங்கியுள்ள இன்றைய நிர்வாக அமைப்பும், ஆதிக்க சமூகங்களும் நுகர்வு மனப்பான்மையோடு செயல்பட்டு நாட்டைப் பலவீனப்படுத்துவதை ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது.
இந்தச் சமூகக் கடத்தல், உடனடி களஅய்வு செய்யப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடையர் சமூக மக்கள், நெய்தலின் கடலோரப் பழங்குடி இனத்தின் அங்கம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
- ஜோ டி குருஸ்,
எழுத்தாளர்,
‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com