

அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களின் தொடர்ச்சியாக, ஓ.பன்னீர்செல்வம் ‘தர்ம யுத்தம்’ நடத்தியபோது, அவருக்கு ஆதரவு கொடுத்த 10 எம்.பி.க்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மைத்ரேயன், ஜெயகுமார் ஆகியோர் பேச மறுத்துவிட்ட நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் ஒரு பேட்டி:
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனக் குமுறலோடு இருக்கிறார்கள் என்று பேசப்படுகிறது. பேஸ்புக்கில் மைத்ரேயன் வருத்தத்துடன் ஒரு பதிவை எழுதியிருந்தார். என்ன நடக்கிறது?
மைத்ரேயன் அதிமுகவில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. மற்றவர்களுக்கும் வாய்ப்புத் தர வேண்டும் இல்லையா? கடந்த முறை 40 தொகுதிகளிலும் நாம் போட்டியிட்டோம். இப்போது கூட்டணிக் கட்சிகளுக்குப் போக 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். பன்னீர்செல்வம் அணியினர் புறக்கணிப்படுவதாகச் சொல்ல முடியாது. இன்னும் மாநிலங்களவை, உள்ளாட்சி, வாரியத் தலைவர், சட்டமன்றத் தேர்தல் எல்லாம் இருக்கிறது. அதிமுகவை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை; நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு.
ஏற்கெனவே உங்கள் அணியை மதவாதக் கூட்டணி என்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்காததால் அந்தக் குற்றச்சாட்டு வலுவாகியிருக்கிறதே?
சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சிதான் அதிமுக. மதரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ யாரையும் இந்தக் கட்சி புறக்கணிக்காது. சில தொகுதிகளின் வெற்றிவாய்ப்புக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே சொன்னபடி இன்னும் தேர்தல்கள் இருக்கின்றன, வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சாமானியர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதுதானே ஜெயலலிதா பாணி. இப்போது பெரும் புள்ளிகளுக்கும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும்தான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்று விமர்சனம் எழுந்திருக்கிறதே?
அம்மா காலத்தில் வாரிசுகளுக்கு வாய்ப்பு தரவேயில்லை என்று சொல்லப்படுவதை நான் மறுக்கிறேன். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜெயவர்தனுக்கு முதலில் தொகுதி ஒதுக்கியது ஜெயலலிதாதானே? முன்னாள் எம்பியின் மகனான அமைச்சர் சி.வி.சண்முகம், பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போன்றோருக்கு ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லையா? இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். திமுகவில்தான் திடீரென்று பெரிய வீட்டுப் பிள்ளைகள் வேட்பாளர்களாவார்கள். அதிமுகவிலோ இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர்களுக்குத்தான் வாய்ப்பு தந்திருக்கிறோம்.