

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் ஏறக்குறைய அறிவிக்கப்பட்டாகிவிட்டது. தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த, எழுத்திலிருந்து தங்கள் பயணத்தைப் பொதுவாழ்க்கையை நோக்கி நகர்த்திய சிலர் தேர்தல் களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது.
பல ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றுபவர்கள் இருக்க, எழுத்தாளர்களை முன்னிறுத்துகிறார்களே என்று கட்சிகளுக்குள்ளேயும் முணுமுணுப்புகளைக் கேட்க முடிகிறது. யாரையும் எப்போதும் எதற்காகவும் ஏற்றுக்கொள்ளாத இலக்கிய உலகமும் இவர்கள் அப்படியென்ன இலக்கியச் சாதனை செய்துவிட்டார்கள் என்று மனம் பொருமுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. போட்டியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
தமிழச்சி தங்கபாண்டியன்
தென்சென்னை தொகுதிக்கு திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2000-களில் ‘கணையாழி’ உள்ளிட்ட இலக்கிய இதழ்களில் த.சுமதி என்ற இயற்பெயரில் தமிழச்சியின் கவிதைகள் வெளியாகத் தொடங்கின. ஈழ எழுத்தாளர் எஸ்.பொ.வின் ‘மித்ர’ பதிப்பகம்தான் அவரது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற தமிழச்சி, தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நாடகங்களையும் அவர்களது அலைந்துழல்வு வாழ்க்கையையும் ஆய்வுத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததும் தற்செயலானது அல்ல. ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரைக் கண்டித்துக் கொட்டும் மழையில் நடந்த மனிதச் சங்கிலி பேரணியில் பரிதவிப்போடு நின்றிருந்த தமிழச்சியை அருகிருந்தவர்கள் அறிவார்கள்.
ராணிமேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய தமிழச்சி, கட்சிப் பணிகளுக்காகவே அந்தப் பணியிலிருந்து விலகினார். ஒருவேளை அந்தப் பணியில் தொடர்ந்திருந்தால், துணைவேந்தர் போன்ற பதவிகளுக்கும்கூட அவர் உயர்ந்திருக்க முடியும். அவர் ஒரு கவிஞராகவே பெருமளவு அறியப்பட்டிருக்கிறார். சமகாலத்து கவிஞர்களின் படைப்புகளைக் குறித்து நவீன இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் விரிவான விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர் அவர். கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் நடந்த இலக்கியக் கூட்டங்களையெல்லாம் கருத்தரங்குகளாக மாற்றினார் என்றும் சொல்லலாம். ‘பூனைகள் சொர்க்கத்துக்குச் செல்வதில்லை’ என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரைத் தொகுப்பு தமிழ் நவீனக் கவிதைகள் குறித்த முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. அரசியல் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்றாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் தமிழச்சி.
து.ரவிக்குமார்
விசிக சார்பில் விழுப்புரத்தில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் து.ரவிக்குமார் ஏற்கெனவே காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். அப்போது சட்டமன்ற விவாதங்களில் அவர் எவ்வளவு காத்திரமாகச் செயலாற்றியிருக்கிறார் என்பதற்கு அவரது சட்டமன்ற உரைத் தொகுப்பே சாட்சியாக நிற்கிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டவர் இவர்.
தமிழக அறிவுலகின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் ரவிக்குமார். கல்லூரி மாணவப் பருவத்திலேயே அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோருடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழில் பங்கெடுத்தவர். உலகச் சிந்தனையாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். வழக்கறிஞராக, மனித உரிமைச் செயற்பாட்டாளராக அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் முக்கியமானவை. ‘தலித்’ சிற்றிதழை நடத்தியவர், தற்போது ‘மணற்கேணி’ ஆய்விதழை நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ் உயராய்வு மையங்களுடன் இணைந்து பங்காற்றியவர். இலக்கிய உலகத்துக்கும் ஆய்வுலகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் தீவிர முனைப்பு காட்டிவருபவர். கலை இலக்கிய அரசியல் விமர்சகராக மட்டுமின்றி மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் தொடர்ந்து இயங்கிவருபவர்.
சு.வெங்கடேசன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ நாவலாசிரியராகத்தான் சு.வெங்கடேசனைத் தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. ‘காவல் கோட்ட’த்தின் இடத்தில், இப்போது ‘வேள்பாரி’. ஆனால், கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருபவர் அவர். ஏறக்குறைய 25 ஆண்டுகள். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழுநேர உறுப்பினர்களுக்கே உரிய வயிற்றுப் புண்ணும் முதுகுவலியும் இவருக்கும் உண்டு. தொடர் பட்டினியும் இடைவிடாத இருசக்கர வாகனப் பயணங்களும் ஒரு முழுநேர கட்சி ஊழியருக்குக் கொடுக்கும் பரிசுகள் அவை. மதிய வேளைகளில் நண்பர்கள் பிரியாணி சாப்பிட, தயிர் சாதத்தோடு பசியாற்றிக்கொள்பவர். இரவு நேரங்களில் தங்கும் அறைகளில் முதுகுவலியைத் தவிர்ப்பதற்காக வெறுந்தரையில் தலையணை இல்லாமல் உறங்கும் பழக்கம்கொண்டவர். தமுஎகச மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தவர். தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றவர்.
ஜோதிமணி
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என்று தெரிகிறது. எழுத்தாளராக மட்டுமின்றி முன்னணி வார இதழ்களில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் அவர். இந்திரா என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள், 15 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் முன்னணி வார இதழ்களில் வெளிவந்தவை. மறைந்த பத்திரிகையாளர் ஞாநியால் வழிநடத்தப்பட்ட இளம் தலைமுறை பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
இப்படி எழுத்தாளர்கள், அதுவும் மக்கள் பணியிலும் எழுத்துப் பணியிலும் ஒருசேரப் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் தேர்தல் களத்துக்கு வந்திருப்பது, அறுபதுகளின் அரசியல் சூழலை நினைவுபடுத்துகிறது. அப்போது தேர்தலில் போட்டியிட்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர்களாகவும் இருந்தார்கள். தேர்தலில் போட்டியிடாத எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் மேலவையில் இடங்கள் காத்திருந்தன. நாளடைவில், அந்தக் காட்சிகள் மாறிப்போயின.
தேர்தல் களங்களைக் கட்சி ஊழியர்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள். என்றாலும், இப்போது அதிக அளவில் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமைகள் தேர்தல் களத்துக்கு வந்திருப்பது முக்கியமான முன்னகர்வுகள். தமிழகத்தைத் தாண்டியும் ஒலிக்க வேண்டிய தமிழ் அறிவுலகின் குரல்கள் இவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்களின் ஆதரவைப் பெறுவது அவர்களது கைகளில்தான் இருக்கிறது.
இலக்கியவாதிகளையும் அறிவுஜீவிகளையும் கௌரவிப்பதில் அதிமுகவும் பின்தங்கிவிடவில்லை என்பதையும்கூட இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளர் வலம்புரி ஜானை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் மேலவை உறுப்பினராகவும் இடம்பெறச் செய்தவர் எம்ஜிஆர். மேலவையைக் கலைத்தபிறகு மபொசியை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக்கியவர், தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்களுக்கு நூற்றாண்டு விழாக்களை நடத்தியவர், மதுரையில் நடந்த உலகத் தமிழ்மாநாட்டின் அறிஞர் குழுவில் மு.கருணாநிதியையும் ஒருவராக இடம்பெறச் செய்தவர் என்பது போன்ற பெருமைகளும் எம்ஜிஆருக்கு உண்டு. அதிமுக அதையெல்லாம் மறந்துபோய்விட்டது என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது!