

வரலாற்றைச் செதுக்கியவர்களில் ஒருவர் அண்ணா. உலக அறிஞர்கள் வரிசையில் இடம்பெறத்தக்க அற்புதமான சிந்தனையாளர் பெரியாரைப் போலவே அண்ணாவின் செயல்பாடுகளின் எல்லை தென்னிந்தியாவுக்குள்ளேயே அடங்கிவிட்டது என்பதாலும், அவரது நோக்கங்கள் பிராந்திய அளவில் குறுகியவை என்று ஒற்றைத் துணைக் கண்டத்தின் பாரம்பரியமான வரலாற்றாசிரியர்கள் கருதியதாலும் அவர் போதிய கவனம் பெறவில்லை.
உண்மையில், தேசக் கட்டுமானத்தில் மொழியின் பிரதான சக்தியைப் பிரதிபலித்தவர் அண்ணா. மொழிப் பிரச்சினையில் தொடக்கம் முதலே இந்தியாவின் நிலைப்பாடு தவறாகவே இருந்தது. பொதுவாழ்வில் மொழி அரசியலின் வளர்ச்சி என்பது தவறானதாகக் கருதப்பட்டது அதனால்தான். சரியான சூழலில் வித்தியாசமான அணுகுமுறை மேற்கொள்ளப்பட் டிருந்தால், ஒன்றிணைக்கும் சக்தியாக மொழியைப் பயன்படுத்தியிருக்க முடியும். இந்தோனேஷியா ஓர் உதாரணம்.
அண்ணாவைப் பொறுத்தவரை மொழி என்பது மக்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் சாரம். நிறுவன எதிர்ப்பாளரான பெரியாருடனும் சக திரைக்கதை ஆசிரியரான கருணாநிதியுடனும் தனது நம்பிக்கையை அவர் பகிர்ந்துகொண்டார். திரிமூர்த்திகளான பெரியார், அண்ணா, கருணாநிதி மூவரும் இதற்கு முன்னர் பேசப்பட்டிராத திராவிடப் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்தனர். இதன்மூலம், இந்தியாவின் சமூக அரசியல் முதிர்ச்சிக்கு நீடித்த பங்காற்றினர்.
இந்திக்கு எதிரான நீண்ட யுத்தம்
தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இடையிலான வேறுபாட்டை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதை அண்ணா தவறாகக் கருதவில்லை. இந்த வேறுபாடு ஆழமாக வேரூன்றியது என்று கருதிய அவர், திராவிடப் பிராந்தியம் இந்தியாவிலிருந்து பிரிந்துசெல்ல வேண்டும் என்றே விரும்பினார். இந்த நோக்கத்தின் தீவிரத்தன்மை சுட்டிக்காட்டப்பட்டபோது, தனது நிலைப்பாட்டை உடனடியாகக் கைவிட்டார். இந்திக்கு எதிராக நீண்ட யுத்தம் நடத்தியவர் அண்ணா. சர்வாதிகார முறையில் பிறர் மீது இந்தி திணிக்கப்படுவதை அவர்
எதிர்த்தார். 1938-ல், பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார் ராஜாஜி. மிகப் பெருமளவில் நடந்த போராட்டங்கள், போலீஸ் தடியடியில் இருவர் மரணம் ஆகியவை, 1940-ல் இந்த ஆணையை ராஜாஜி திரும்பப் பெறவைத்தன. அதுதான், அன்றைய காலகட்டத்தின் பொதுவுணர்வாக இருந்தது. இதை அண்ணா மறக்க முடியாத வகையில் குறிப்பிட்டிருந்தார்: “நாட்டின் பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி என்பதற்காக இந்தி பொதுமொழியாக இருக்க வேண்டும் என்றால், நாட்டில் எண்ணற்ற எலிகள் இருக்கும்போது, புலியை ஏன் தேசிய விலங்காகக் கருதுகிறோம்?” அதே ராஜாஜி, பின்னாட்களில் இந்தி அரசியலின் தீவிர எதிர்ப்பாளரானது வரலாற்றின் முரண்களில் ஒன்று.
பத்தாவது உலக அதிசயம்
அண்ணா ஒரு சாமானிய மனிதராகவே வாழ்ந்தார். தன்னைச் சுற்றியுள்ள சாமானிய மனிதர்களின் வாழ்க்கை, தேவைகள் குறித்து அக்கறை கொண்டிருந்த அவர், தனக்கென்று எதையும் விரும்பவில்லை. ஒரு முதல்வர் எனும் முறையில் கிடைக்கும் அரசு வசதிகளையும் அவர் ஏற்க மறுத்தார். தனது ஆதர்ச நாயகர்களான லிங்கன், கரிபால்டி, மாஜினி ஆகியோரின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டார்.
சினிமா எனும் ஊடகத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வது என்பது அண்ணாவின் உத்தி. அவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர் மட்டுமல்லாமல் சில சமயம் நடிகராகவும் இருந்தவர் என்பதால், இது அவருக்கு இயல்பாகவே வந்திருக்கலாம். அதேசமயம், எந்த மாதிரியான கொள்கைகளைப் பின்பற்றுவது என்பதில் தெளிவான சிந்தனையுடன்கூடிய ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தார். மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட சுரண்டலுக்கு எதிராகப் போராடினார் அண்ணா. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை நீக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் முழக்கத்தை முன்வைத்தார். திருநீறு பூசாத இந்து, சிலுவை அணியாத கிறிஸ்தவர், குல்லா அணியாத முஸ்லிம் என்று தன்னைக் குறிப்பிட்டார். மதறாஸ் மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெருமையுடன் மாற்றினார்.
அவரது எளிமை, தன்னலமற்ற தன்மை, திராவிட இயக்கத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆகியவை அண்ணாவைக் கற்பனைக்கெட்டா புகழ்கொண்ட மக்கள் தலைவராக்கின. 1969-ல் அவர் மறைந்தபோது, பத்தாவது உலக அதிசயம் நிகழ்ந்தது. அவரது இறுதி நிகழ்ச்சியில் 1.5 கோடிப் பேர் கலந்துகொண்டனர். இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கலந்துகொண்ட நிகழ்வு அது. காந்தியின் இறுதி நிகழ்ச்சியில் 20 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
அண்ணா அத்தனை விஷயங்கள் கொண்டவர். அவருடைய சிந்தனைகள் எண்ணற்றவை. நமது காலகட்டத்தில் திராவிட அடையாளம் உயிர்பெற்று, வரலாற்றில் தனது இடத்தைக் கோரியது என்றால், அறிஞரும் செயற்பாட்டாளருமான அண்ணாவின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியக் காரணம். தென்னிந்தியாவின் அற்புதமான கோயில்
கட்டிடக் கலையை உருவாக்கியது மட்டும் அல்லாமல், கெமர், தாய், சாவகம் ஆகிய மொழிகளின் மேம்பாட்டில் தாக்கம் செலுத்திய ஒரு அறிவுப் பாரம்பரியத்தின் உண்மையான வழித்தோன்றல் என்பதை நிரூபித்தவர் அண்ணா. அந்தப் புத்தாக்கச் சிந்தனையின் மகத்தான சாதனைகள், இந்தியாவை மூழ்கடித்த சம்ஸ்கிருத சக்தியின் அலையில்
மூழ்கிப்போயின. அந்த சம்ஸ்கிருத கோலியாத்தை ஒரு எளிய டேவிட் எதிர்கொள்ளக் காலம் பிடித்தது. அந்த டேவிட்தான் அண்ணா. அவர் காலத்தைக் கடந்த மனிதர்!
- டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
மூத்த ஊடகவியலாளர்
அரசியல் ஆய்வாளர்
(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...)
புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications