

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, அண்ணாவைப் பற்றி எழுதியது இது: “1965-ல் இந்தியை தேசிய மொழி மற்றும் அலுவல் மொழியாக்குவதற்கு எதிராக தமிழ்நாட்டிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. வட இந்தியாவைச் சேர்ந்த சிலர் இந்தியை ஆதரித்தார்கள். தென் இந்தியாவைச் சேர்ந்த சிலர் அதை எதிர்த்தார்கள். இவர்கள் மேற்கொண்ட பிடிவாதமான நிலைப்பாடு, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்துதலை உண்டாக்கிவிடுமோ என்கிற அளவுக்கு வளர்ந்தது. இந்தியுடன், ஆங்கிலமும் மத்திய அரசின் ஆட்சிமொழியாகத் தொடரும் என்று அரசு அறிவித்த பிறகே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தணிந்தது.
இந்தச் சிக்கலான விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்பது எங்கள் ஜனசங்கத்துக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்தச் சங்கடமான சூழலில் தீன் தயாள்ஜி கட்சிக்கு வழிகாட்டினார். ஒரே சமயத்தில் இந்தி மொழியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவது, மற்ற எல்லா இந்திய மொழிகளையும் மதிப்பது; ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் மதிப்பது என்ற கொள்கைரீதியான பாதையை அவர் வகுத்துக்கொடுத்தார். ஜனசங்கத்தின் சம பார்வை கொண்ட இந்த மொழிக்கொள்கை உருவாக வாஜ்பாயின் நண்பரும், தமிழ் நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்றவருமான அண்ணாதுரையும் காரணமாக இருந்தார். ஜனசங்கம் பாஜக ஆன பின் அதே மொழிக் கொள்கை தொடர்கிறது.”