Last Updated : 29 Sep, 2014 08:58 AM

 

Published : 29 Sep 2014 08:58 AM
Last Updated : 29 Sep 2014 08:58 AM

பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்

கல்வியும் தொழில்நுட்பமும் பார்வையற்றோருக்கு இரண்டு கண்களாக இருக்க முடியும்.

சுகன்யா. இந்தியாவின் லட்சக்கணக்கான பார்வையற்ற பெண்களில் ஒருவர். மழை பொய்த்த ராமநாதபுர மாவட்டத்தில் இன்னும் பேருந்துகள் போகத் தொடங்கியிராத ஒரு குக்கிராமம் அவரது ஊர். எளிய விவசாயக் குடும்பம். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் முன்னால் இவை எதுவும் தடையாக இல்லை. பக்கத்து ஊர்களில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன. பி.எட். கலந்தாய்வில் முதல் சுற்றிலேயே தெரிவுபெற்றார்.

ஆனால், தொலைவில் உள்ள நகரத்தில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். குடும்பத்தின் நிதி நிலைமை ஒத்துழைக்காது என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியும். அப்போதுதான் ஹாங் காங்கின் ‘ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷ’னைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அந்த நிறுவனத்திடம் உதவி கேட்டதன் விளைவாக, அந்த நிறுவனம் அவரது கல்லூரி - விடுதிக் கட்டணங்களைச் செலுத்த முன்வந்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் பார்வையற்றவர்கள் தமது வாழ்நாள் முழுக்க சுகன்யா போலத்தான் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறது.

ஹாங்காங்கில் எப்படி?

ஹாங்காங் போன்ற வளர்ந்த நாடுகளில் பார்வையற்றவர்கள் சுயேச்சையாக இயங்க முடிகிறது. நடைபாதைகளில் அவர்கள் யார் உதவியும் இன்றி நடந்து செல்ல முடியும். சாலையைக் கடக்க வேண்டிய இடங்களில் பிரத் யேகத் தட்டை ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும். அவற்றைத் தங்களுடைய கோல்களால் தட்டி உணர்ந்துகொள்வார்கள்.

பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கிக் கட்டணக் கதவுகள், மின் ஏணிகள், நடைமேடைகள், கட்டிடங்களின் படிக்கட்டுகள், திருப்பங்கள்-ஒவ்வொன்றையும் அவர்கள் அறிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டிருக்கும். மின்தூக்கிகளில் தளங்களின் எண்கள் பிரெயிலில் எழுதப்பட்டிருக்கும்.

அலுவலகத்திலும் வீட்டிலும் கணினிகளில் உள்ள மென்பொருட்கள் எண்ணையும் எழுத்தையும் படித்து அவர்களது செவிகளில் சொல்லும். கணினியின் விசைப்பலகையில் அவர்கள் விரல்கள் விளையாடும். சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாலும், கல்வியில் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருப்பதாலும் பார்வையற்றவர்களால் யாரையும் போல் இயங்க முடிகிறது.

இந்தியாவில் எப்படி?

உலகில் உள்ள பார்வையற்றவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தியா நெடுகிலும் சுமார் ஒரு கோடிப் பேருக்குப் பார்வையில்லை. இவர்களில் பலரும் வறுமையும் கல்வியின்மையும் கவிந்திருக்கும் குடும்பங்களில் பிறந்தவர்கள். இன்னும் சுமை யாகவும், சாபமாகவும், முற்பிறப்பின் தீவினையாகவும் பார்க்கப்படுகிறவர்கள். பார்வையற்றவர் களில் ஒரு பகுதியினர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு இவைதான் காரணங்கள்.

தாங்கள் வசிக்கும் நாடுகளில் பார்வையற்றவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக வாழ்வதைப் பார்க்கும் வெளிநாட்டு இந்தியர்கள் தாய்நாட்டில் உள்ள பார்வையற்றவர்களை எதிர்கொள்ளும்போது அதிர்ந்துபோகிறார்கள். அரசும் சமூகமும் பார்வை யற்றவர்களை இந்த அளவுக்கா புறக்கணிக்கும் என்ற கேள்வி அவர்களுக்குள் எழுகிறது.

வெளிநாட்டு இந்தியர்களின் கொடை

ஹாங்காங்கில் வசிக்கும் சில இந்தியர்கள் இவற்றைத் தாண்டிச் சிந்தித்தார்கள். அவர்கள் மேலும் சில வெளிநாட்டு இந்தியர்களுடன் ஓர் அமைப்பை நிறுவியிருக்கிறார்கள். இதை முன்னெடுத்துச் செல்பவர் ஹாங்காங்கில் வசிக்கும் டி.கே. பட்டேல். ஹாங்காங் வங்கி ஒன்றில் உயர் பதவி வகித்து ஓய்வுபெற்ற பட்டேல், ‘பார்வையற்றவர்களின் பிரதான எதிரி கல்வியின்மைதான்’ என்கிறார்.

குஜராத்தியான பட்டேல் வள்ளுவரைப் படித்திருப்பாரா என்று தெரிய வில்லை. ‘கற்றவரே கண் உடையவர்’ என்கிறார் வள்ளுவர். அது மட்டுமல்லாமல், ‘எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றவை’ என்கிறார். பார்வையற்றவர்களின் கண்களாய்க் கல்விதான் விளங்கும் என்று பட்டேலும் சொல்கிறார்.

2005-ல் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள புனித லூயி பார்வையற்றோர்-காது கேளாதோர் பள்ளிக்குத் தன் சொந்தச் செலவில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் வகுப்பறைகளும் விடுதிகளும் கட்டிக் கொடுத்தார் பட்டேல். அதன் தொடர்ச்சியாக இதயத்தோடு தங்கள் பணப்பெட்டியையும் திறக்கத் தயாராயிருந்த வெளிநாட்டு இந்தியர்களோடு சேர்ந்து ‘ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷ’னைத் தொடங்கினார். 2012-ல் இந்த நிறுவனம் மதுரை சுந்தரராஜன்பட்டியில், இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (ஐ.ஏ.பி) நடத்திவரும் மேல்நிலைப் பள்ளிக்கு நவீனக் கட்டிடம் ஒன்றை வழங்கியது.

பார்வையற்றோருக்கான வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளும் அலுவலகமும் பிரெயில் நூலகமும் கணினி மையமும் மாணவியர் விடுதியும் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தைக் கட்ட மூன்று கோடி ரூபாய் செலவாகியது. இந்த நிறுவனம் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள அமலாற்கினி சிறப்புப் பள்ளிக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் விடுதிகளும் விளையாட்டுத் திடலும் கட்டிக்கொண்டிருக்கிறது.

உதவித்தொகை

சிறப்புப் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தாலும் நிறுவனத்தின் முக்கியமான பணி அதுவல்ல. பார்வையற்ற மாணவர்களில் கணிசமானோர் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிறார்கள். நகரங்களில் இருக்கும் கல்லூரிகளின் விடுதிக் கட்டணம் அவர்கள் கைக்கு எட்டுவதில்லை. அதனால், நிறுவனம் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிவருகிறது.

இந்தத் திட்டம் 2008-ல் சென்னை புனித லூயி பள்ளியிலிருந்து கல் லூரிக்குப் போகிற மாணவர்களுக்கான உதவி என்கிற அளவில் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை, சாத்தூர், விருதுநகர், தூத்துக்குடி என்று 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விரிவடைந்திருக்கிறது. நிறுவனம் கல்லூரி-விடுதிக் கட்டணங்களை நிர் வாகத்திடம் நேரடியாகச் செலுத்திவிடுகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்குச் சராசரியாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.

இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ் 143 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இப்போது 175 மாணவர்கள் உதவி பெற்றுவருகிறார்கள். கல்லூரியில் இளங் கலை பயிலும் பார்வையற்ற மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறார் நிறுவனத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர் ஜே.வி. ரமணி.

கல்வியும் கணினியும்

பார்வையற்றவர்கள் மீது அக்கறையுள்ள சில அமைப்புகள் அவர்களுக்குக் கைவினைக் கலைகளில் பயிற்சி அளிக்கின்றன. காலம் மாறிவிட்டது என்கிறார் பட்டேல். இது கணினி யுகம். பார்வையற்றவர்கள் கணினியில் விற்பன்னர்களாக வேண்டும், அது அவர்களால் முடியும். பார்வையில் உள்ள குறைபாட்டை இயற்கை வேறு திறன்களால் இட்டு நிரப்புகிறது.

பொதுவாக, பார்வையற்றவர்கள் அபார நினைவுத் திறன் உடையவர்களாக இருப்பார்கள்; அவர்களது மற்ற புலன்கள் கூர்மையாக இயங்கும். அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் கல்வியும் கணினியும் அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்கிறார் பட்டேல். ஹாங்காங்கைப் போல பார்வையற்றவர் களுக்கான உள்கட்டமைப்புகள் வருவதற்கு இந்தியாவில் இன்னும் சில காலம் பிடிக்கலாம். அதுவரை சுகன்யா, இருக்கிற வசதிகளுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்வார்.

இன்னும் ஓராண்டில் பி.எட். முடித்துவிடுவார். நல்லதோர் ஆசிரியையும் ஆகிவிடுவார். அதுமட்டுமல்லாமல், கணினியின் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய அனுபவத்தையும் அறிவையும் தன்னுடைய மாணவர்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பார். இந்தியாவில் இன்னும் பல சுயசார்புள்ள சுகன்யாக்கள் உருவாக வேண்டும். அந்த உருவாக்கத்தில் பட்டேல் போன்றவர்கள் தங்களது எளிய பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

- மு.இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்;
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x