Last Updated : 13 Mar, 2019 09:48 AM

Published : 13 Mar 2019 09:48 AM
Last Updated : 13 Mar 2019 09:48 AM

பெண்ணின் உடல்: ஏன் இல்லை பொதுப் புரிதல்

பெண்ணின் உடலையும் மனதையும் பற்றிய புரிதல்களும் குழப்பங்களும் கற்பனைகளும் நாம் வாழும் சமூகத்தில் மிகுந்து கிடக்கின்றன. ‘ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும்’, ‘பெண்ணின் மனது கடலைப் போல ஆழமானது’, ‘பெண்ணின் உடல் கோயில் போன்றது..’, ‘பெண் உடுத்தும் உடையைப் பார்த்தால், கை எடுத்துக் கும்பிடுவது மாதிரி இருக்க வேண்டும்’… இன்னும் இத்தியாதி இத்தியாதிகள்.

என் மகனுக்கு ஐந்து வயதிருக்கும்போது, மழலையர் பள்ளியில் தன்னுடன் பயிலும் சிறுமியைப் பற்றி ஒரு முறை குறிப்பிட்டான். “அம்மா, அந்தப் பொண்ணுக்கு ‘உச்சா’வே இல்ல” என்றான் ஆச்சரியத்துடன். முதலில் சிரிப்பு வந்தாலும், அவனது கேள்விக்குச் சரியான விளக்கமளிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஓர் ஆணின் உடலில் இன்னின்ன உறுப்புகள் இருக்கும். ஓர் பெண்ணின் உடலில் இன்னின்ன உறுப்புகள் இருக்கும் என்று எடுத்துச் சொன்னேன். “இந்த வேறுபாடுகள்தான் உன்னை ஆணாகவும்,என்னைப் பெண்ணாகவும் வைத்திருக்கின்றன” என்று தெளிவுபடுத்தவும், சட்டென விளங்கிக்கொண்டான்.

ஐந்து வயது சிறுவனுக்கு விளங்கும் உண்மை 'முதிர்ந்தவர்கள்' என்று தங்களைக் கருதிக்கொள்ளும் பலருக்கு இல்லை என்பதுதான் வேதனை. பெண்ணுடலைப் புதிராகவும், புனிதமாகவும் பார்ப்பவர்கள் நம்மில் ஏராளமாக இருக்கிறார்கள். மாதவிடாயைத் தீட்டாகப் பார்க்கும் பார்வை, பெண்கள் உடைமாற்றும் இடத்திலும், கழிப்பிடத்திலும் ரகசிய கேமிரா வைத்துக் கண்காணிக்கும் குரூரம், அதையும் காசாக்கும் வக்கிரம் என பெண்ணுடலை மையப்படுத்தும் தவறான புரிதல்களும், அதைச் சாதகமாகப் பயன்படுத்தும் மறைமுக வணிகநோக்கங்களும் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன.

ஷேம்... ஷேம்!

‘வெறும் உள்ளாடையுடன் வீட்டுக்குள் சுற்றாதே, ஷேம் ..ஷேம்!’ என்று சொல்லித்தர நம்மால் முடிகிறது ஆனால், வணிக வளாகத்தினுள் நுழைந்தவுடன் ஆறடி உயரத்துக்கு உள்ளாடை விளம்பரத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பதாகையில், வெறும் உள்ளாடைகளுடன் புன்னகைக்கும் பெண் பிம்பங்களைப் பார்த்து வெட்கத்துடன் சிரிக்கும் குழந்தைகளுக்கு விளக்குவதற்கு நம்மிடம் வார்த்தைகளில்லை.

பெண்ணைப் பண்டமாக்குவது.. பெண்ணுடலைப் பண்டமாக்குவது என்பது மேலை நாட்டிலிருந்து கீழை நாடுகள் வரை நடக்கும் ஓர் மடை திறந்த வணிகம். அதிலும் உலகமயமாக்கலுக்கு பிறகு, அதாவது தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்திய பெண்கள் 'உலக அழகிக’ளாக ஆன பிறகு வணிக ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களைக் கண் முன்னே பார்த்திருக்கிறோம்.

'எஸ், எம், எல்' அளவீடுகள்!

பெண்கள் மிகச் சுதந்திரமாக வாழ்வதாய் தோன்றும் மேலை நாடுகளில் இத்தகைய பாலின ரீதியான பாகுபாடுகளை என்னால் இன்னும் அதிகமாகத்தான் உணர முடிகிறது. உதாரணத்துக்குச் சொன்னால், ஓர் ஆணின் உள்ளாடைகள் விலை மலிவாகவும், எளிமையான வேலைப்பாட்டுடனும் கிடைக்கின்றன. அதுவே, ஒரு பெண்ணுக்கு விலை கூடுதலாகவும், எளிமையான வடிவமைப்புகளுக்கு வாய்ப்பே இல்லாமலும் போகிறது. அதாவது ஒரு பெண்ணால் எளிமையாகவும், சிக்கனமாகவும் தனக்கான செலவுகளைச் செய்ய முடியாது என்ற பிம்பத்தை உருவாக்குவதாக உள்ளது இங்கே உள்ள நுகர்வு வணிக உத்திகள்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய, ஆடையின் அளவீடு 'சிறிய (எஸ்) அளவிலிருந்து ‘எம்’ அல்லது ‘எல்’ ஆக மாறும்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். இந்த ‘எஸ், எம், எல்’ அளவீடுகள்கூட ஒவ்வொரு ஆடைத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் வெவ்வெறாக இருக்கிறது. கடைக்குக் கடை, நாட்டுக்கு நாடு என மாறிக்கொண்டேதான் இருக்கிறது. இதில் உள்ள வணிக உத்திகளை நாம் நுட்மாகக் கவனிப்பதில்லை.

ஒல்லி ஒல்லி இடுப்பே!

விளம்பரங்களில் வரும் ‘மாடல்கள்’ கற்பனைக்கு எட்டாத உடலமைப்பைக் கொண்டவர்களாக, அதாவது மிகவும் மெலிந்தவர்களாக இருப்பதால், பெரும்பாலும் ஐரோப்பாவில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தவரும் உடல் ஆரோக்கியத்தை சிரத்தையெடுத்து பேணுபவர்களாக இருந்தாலும்கூட, பெரும்பாலும் பெண்கள் எப்பொழுதும் மெலிவதற்கும் குறிப்பாக இளைய வயதினர், ஆண்கள் எப்பொழுதும் கட்டுமஸ்தாக, பலமாக இருப்பதற்கும் போட்டி போடுகின்றனர் என்பதுதான் உண்மை.

இதன் விளைவாக ‘அனரொக்சியா’ போன்ற நோய்கள் உருவாவது கண்கூடு. அதாவது, உடல் எடை கூடிவிடுமோ என்ற மனரீதியான அச்சத்தால் பசியின்மை ஏற்பட்டு, உடல் பலம் இழப்பது பெண்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழப்புகள்கூட ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'பேஷன்' டிவியில் காண்பிக்கப்படும், பெரும்பாலும் பாரிஸில் செயல்படும் 'பேஷன்' மாடல்கள் இத்தகைய நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

சற்றே உற்று கவனிப்போம்!

சமீபத்தில் பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவு இது. ‘ஒரு நாள் காலை கண் விழித்தவுடன், பெண்கள் தங்கள் உடலைக் கண்டு தாங்களே திருப்தியடைவார்களேயானால். எத்தனை வணிகத் துறைகள் பாதிக்கப்படும்!’ இது முற்றிலுமான உண்மை.

பெண்ணின் உடலையும், புறத்தோற்றத்தை பொலிவுறச்செய்து அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து வாழ்க்கையை மேம்படுத்துவதாகக்கூறும் எத்தனையோ விற்பனைப் பொருட்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியாபாரச் சந்தையை, வணிக நோக்கங்களை உற்று கவனித்தாலே, அவற்றின் விளைவாக சமூகத்தில் நிலவும் கற்பிதங்களையும் நாம் அறியாமலேயே நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ள முடியும். பாலின வேறுபாடுகள் குறித்த சரியான புரிதல்களை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தவும் இயலும்!

- சுமிதா ராணி,

தொடர்புக்கு: sumitharani.b@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x