Published : 17 Sep 2014 09:42 AM
Last Updated : 17 Sep 2014 09:42 AM

தமிழர் தலைவர் பெரியார்!

தந்தை பெரியார் பிறந்த நாள் 17.09.1879

பெரியாரின் வாழ்நாளிலேயே அவரது வரலாற்றைத் தனிச் சிறப்புடன் எழுதியவர் சாமி. சிதம்பரனார்.

தமிழ் இலக்கியம் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குப் பெயர்போனதல்ல. உ.வே. சாமிநாதையரின் ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’, வ.ரா-வின் ‘மகாகவி பாரதியார்’, தொ.மு.சி. ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு’, சுந்தாவின் ‘பொன்னியின் புதல்வர்’ (கல்கி வரலாறு) என்று ஒரு கை விரலுக்குள் அவற்றை அடக்கிவிடலாம்.

இவ்வரிசையில் வைத்து எண்ணத் தக்க நூல் சாமி. சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற பெரியாரின் வாழ்க்கை வரலாறு. இந்நூல் வெளியான போது, பெரியாருக்கு வயது 60. அதன் பிறகு 34 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, அதற்கு முன்பைவிடத் தமிழ்ச் சமூகத்தை ஆழமாகப் பாதித்தார் என்றாலும், 75 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நூல் இன்றளவும் பெரியாரின் சித்திரத்தைத் தமிழர் மனங் களில் வலுவாகப் பதிந்துள்ளது என்று சொல்ல முடியும்.

சாமி. சிதம்பரனார்

19-ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டில் பிறந்த சிதம்பரனார், முறையாகப் பயின்ற தமிழ்ப் புலவர். பள்ளி ஆசிரியராகவும் அச்சுக்கூட நிர்வாகியாகவும் பணியாற்றிய சிதம்பரனார், இளமையிலேயே சுய மரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, பெரியாரின் வார இதழான ‘குடிஅர’சிலும், நாளேடான ‘விடுதலை’யிலும் விட்டுவிட்டு 20 ஆண்டுகள் பணியாற்றினார். 1931-32-ம் ஆண்டில் பெரியார் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டபோது ‘குடிஅரசு’ ஆசிரியப் பொறுப்பேற்றவர் சிதம்பரனாரே.

‘தமிழர் தலைவர்’- பெரியார் என்ற கிளர்ச்சியாளரின் சித்திரத்தை அழுத்தமான கோடுகள் கொண்டு வரைந்துள்ளது. சாதி, மதம், கடவுள், மொழி, திருமணம் முதலானவை பற்றிய பெரியாரின் புரட்சிகரமான கருத்துகளை அறிமுகப்படுத்தும் சிதம்பரனாரின் மொழி நடை, புலமையைவிடப் பத்திரிகைத் தன்மையையே கொண்டுள்ளது. பெரியாரின் இளமைக் காலக் குறும்பு களையும் லீலைகளையும் ஒளிவுமறைவின்றி இந்நூல் இயம்புகின்றது.

சிதம்பரனார் தம் நூலுக்கான ஆதாரங்களைக் ‘குடிஅர’சிலிருந்தும் திரு.வி.க-வின் ‘நவசக்தி’ யிலிருந்தும் திரட்டியிருக்கிறார். பெரியாரின் நிழலாக விளங்கிய அவருடைய அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி, உற்ற தோழரான திரு.வி.க., பெரியாரின் போராட்டங்களுக்குக் கருத்தியல் கொத்தளமாக விளங்கிய கைவல்ய சாமியார், ‘குத்தூசி’ குருசாமி ஆகியோரிடமிருந்து பல செய்திகளைச் சேர்த் திருக்கிறார். பெரியாரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய செய்திகளை, தன் மனைவி சிவகாமி மூலமாகப் பெரியாரின் மனைவி நாகம்மையாரிடமிருந்தும் பெற்றிருக்கிறார்.

1933-ல் ‘காந்தி’ இதழில் வ.ரா. எழுதிய ‘தமிழ்நாட்டுப் பெரியார்கள்’ வரிசையில் வெளியான கட்டுரையிலிருந்தும், ‘ஆனந்த விகட’னில் ‘பிரசங்கங்களும் பிரசங்கிகளும்’ என்ற கல்கி எழுதிய தொடர் கட்டுரையிலிருந்தும் பெரியார் பற்றிய பல அற்புதமான மேற்கோள்களை சிதம்பரனார் விரிவாகக் கையாண்டுள்ளார். ‘நவமணி’ ஆண்டு மலரில் பெரியார் எழுதிய சிறப்பானதொரு சுயசரிதைக் கட்டுரையையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு அற்புதமான ஒரு வாழ்க்கை வரலாறு அவசரத்தில் அதுவும் ஒரே மாதத்துக்குள் எழுதப்பட்டது என்பதுதான் வியப்பு.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி

தமிழ் நூல் நிலையம் என்ற ஒரு பதிப்பகத்தைக் ‘குத்தூசி’ குருசாமி - குஞ்சிதம் இணையர் அண்மையில் தான் தொடங்கியிருந்தனர். அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் ‘பாரதிதாஸன் கவிதைகள்’என்ற பெயரில் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்து பெரு வெற்றி பெற்றிருந்தது.

இதே தருணத்தில்தான் ராஜாஜி தலைமையிலான முதல் காங்கிரஸ் அமைச்சரவை கட்டாய இந்தியைப் பள்ளிகளில் திணித்ததிலிருந்து இதற்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய பெரியார், 1938 கடைசியில் கைதுசெய்யப்பட்டிருந்தார். பெரியாரின் புகழ் உச்சியில் இருந்த தருணம் இது. தன்னலமில்லா வாழ்க்கை நடத்திய ஒரு முதியவரை பெல்லாரி சிறையில் வைத்து வாட்டியதும் மக்களின் அனுதாபத்தை ஈட்டியிருந்தது. பெரியாரின் வரலாற்றை வெளியிட வேண்டுமென குருசாமி முனைந்தார்.

இதை எழுதுவதற்குப் பாரதிதாசனையே முதலில் தேர்ந்தெடுத்தார் குருசாமி. கவிதை நடையில் நூலை அமைப்பதாகவும் திட்டம். செய்யுள் இயற்றும் பேராற்றலும், பெரியார் பற்றும், குருசாமியின் நட்பும் பெற்றவராயினும் பாரதிதாசனை எழுதவைப்பது எளிதான காரியமாய் இருக்கவில்லை. “நீங்கள் குறித்த தேதியில் - அல்லது ஒரு வாரம் பிந்தி அனுப்பி விடுகிறேன்” என்று கடிதம் எழுதினாலும், அவர் எழுதி முடித்தபாடில்லை. “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” என்றும், “இரவில் தூங்க வேண்டாம்” என்றும் குருசாமி அவரைத் தூண்டியும் பயனில்லை.

குருசாமியின் குத்தூசி

இந்நிலையில், கும்பகோணம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் அப்போது தமிழாசிரியராக இருந்த சாமி. சிதம்பரனாரை நாடினார் குருசாமி. “(பாரதிதாசனின்) ‘இரணிய’னைப் பிடித்து அடித்து வெளியில் தள்ளுங்கள். அதற்குள் பெரியாரைக் கட்டி வெளியில் தள்ள முயல்கிறேன். இன்னும் தொடங்கவில்லை. ஏதோ காமாசோமா என்று எழுதி அனுப்பிவிடத்தான் போகிறேன்” என்று பதிலளித்தார் சிதம்பரனார்.

இதற்கிடையில் பெரியார் சொற்பொழிவுகளையும் தொகுத்துக்கொண்டிருந்தார் குருசாமி. எது சீக்கிரம் முடிகிறதோ அதை முதலில் அச்சுக்குக் கொடுப்பது திட்டம். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் பெரியார் வரலாறு ஒன்று வெளியிடவுள்ளதாக அறிந்த குருசாமி, சிதம்பரனாரை மேலும் முடுக்கினார். “ஈ.வெ.ரா. வரலாறு சுருக்கமாயிருந்தாலும் பரவாயில்லை. இங்குமங்கும் சில குறள்கள், ராமலிங்கம் வாக்குகள் முதலியவைகளைத் தெளித்து, ஊசி மிளகாய் காரத்துடன் இருக்க வேண்டும்... இரவு பகலாய் உட்கார்ந்து 10 தினங்களுக்குள் கட்டாயம் முடித்துத் தள்ளுங்கள். ஒரே வாரத்துக்குள் நான் புத்தகமாக்கிவிடுகிறேன்.”

வாக்களித்தவாறே சிதம்பரனார் ஏப்ரல் மாத அளவில் நூலை எழுதி முடித்துவிட்டாலும் புத்தகம் செப்டம்பர் 1939-ல்தான் வெளிவந்தது. இதற்கிடையில் மே மாதக் கடைசியில் உடல்நிலை காரணமாகப் பெரியார் விடுதலையானார்.

சில மாதங்கள் காலந்தாழ்ந்து வந்ததால் நூல் மேலும் செழுமைபெற்றது. 18 இயல்களில் 240 கிரவுன் பக்கங்களில் அமைந்த நூலில், குருசாமியின் குத்தூசி ஓரேருழவர் போல் விரைந்து செயல்பட்டிருப்பது கண்கூடு. கடைசி இயலான ‘பெரியார்!’ முழுவதும் குருசாமியின் கைவண்ணமே வெளிப்படுகின்றது.

அதிகாரம் பெற்ற வரலாறு

மேலும், நூற்பகுதிகளைப் பெரியாரிடம் படித்துக் காட்டிப் பல திருத்தங்கள் பெறப்பட்டன. புதிய செய்திகள் சேர்க்கப்பட்டுத் தவறான செய்திகள் திருத்தமும் பெற்றன. கங்குகளின் மீது நீர்தெளிக்காமல் பெரியார் நெய் வார்த்திருப்பார் என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் ‘அதிகாரம் பெற்ற வரலாறு’ என்ற முத்திரையுடன் ‘தமிழர் தலைவர்’ வெளிவந்தது.

1941-ல் இரண்டாம் பதிப்பும், 1958-ல் மூன்றாம் பதிப்பும் குடிஅரசு பதிப்பக வெளியீடாக வந்தன. 1960-ல், கி. வீரமணியின் முயற்சியில் ஏராளமான படங்களுடனும் புதிய சேர்க்கைகளுடனும் நான்காம் பதிப்பு வெளிவந்தது. அதன் பின் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக இந்நூல் தொடர்ந்து அச்சில் இருந்துவருகிறது.

சாமி. சிதம்பரனாரின் எழுத்துகள் நாட்டுடைமை யாக்கப்பட்ட பிறகு, வேறு பதிப்பகங்களும் இதனை வெளியிட்டுவருகின்றன. பெரியாரின் வரலாற்றை அறிய முனைவோர் முதலில் நாடும் புத்தகமாக இது தொடர்ந்து இருந்துவருகிறது.

இத்தகையதொரு நூலை எழுதிய சாமி. சிதம்பரனார் தம் கடைசிப் பத்தாண்டுகளில் சுயமரியாதை இயக் கத்தை விட்டு விலகி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்து செயல்படலானார். தாம் மறைவதற்கு இரண்டாண்டு களுக்கு முன்பு அவர் எழுதினார்:

“1948 வரையிலும் நான் எழுதிவந்த எழுத்துக்கள் எல்லாம் பயனற்றவை என்றே இன்று நினைக்கிறேன். ஏனென்றால் அவைகளைப் பற்றி இன்று எனக்கே நினைவில்லை. வேறு யாருக்குத்தான் நினைவிலிருக்கும்?”

எழுத்தாளர்களின் சுயமதிப்பீடுகள்தான் எவ்வளவு பிழையாக அமைந்துவிடுகின்றன!ஆ.இரா. வேங்கடாசலபதி,
பெரியார் வரலாற்றை பெங்குவின் பதிப்பகத்துக்காக எழுதிவருகிறார்.
தொடர்புக்கு: chalapathy@mids.ac.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x