

ஒரே சமயத்தில் இரண்டு செய்திகள். ‘சார்க்' மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அழைப்பு விடுக்கிறார். இந்தியா, இதற்குத் தயாராக இல்லை. ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துகிறவரை, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தவோ, ‘சார்க்' மாநாட்டில் கலந்து கொள்ளவோ இயலாது' என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அர்ஜென்டினா நாட்டில், ஜி 20 மாநாடு அண்மையில் நடைபெற்றது. அப்போது, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா இடையே 'உயர் நிலை' முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகளுடன் 1985-ல் ‘சார்க்' தொடங்கப்பட்டது. 2007-ல் ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ‘சார்க்' அமைப்பின் கொள்கைக் குறிப்பு முன்வைக்கிற கோட்பாடுகள் இவைதாம்:
‘‘இறையாண்மை சமத்துவம், எல்லை ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை, பரஸ்பர நலன் ஆகிய கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தலின் அடிப்படையில் ஒத்துழைப்பு’’. அதாவது, பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக உடன்பாடுகள் ஆகியன பின்னுக்குத் தள்ளப்படுகின்றன;
இறையாண்மை, எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகளே இவ்வமைப்பில் முன்னுரிமை பெறுகின்றன. 2014-க்குப் பிறகு 4 ஆண்டுகளாக ‘சார்க்' மாநாடு நடைபெறவில்லை.
இந்த நிலையில், இம்ரான்கான் விடுக்கும் கோரிக்கை, சர்வதேச அரங்கில் தன் நிலையை அங்கீகரித்துக் கொள்வதற்காக ஒரு நாட்டின் பொம்மை அதிபர் மேற்கொள்ளும் முயற்சி. அவ்வளவுதான். இதனை உணர்ந்துதான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உட்பட எந்த உறுப்பு நாடும் இம்ரான்கான் அழைப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத வரையில் சீனா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள், சர்வதேச அரங்கில் இத்தகைய அவல நிலையை வரும் காலங்களில் அதிகமாகவே சந்திக்க வேண்டி இருக்கும்.
சர்வதேச நம்பகத்தன்மை, கேட்டு வாங்குவதோ எதையும் கொடுத்துப் பெறுவதோ இல்லை. நியாய மான நடுநிலைமைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே நம்பகத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள முடி யும்.
‘சார்க்' அமைப்பில் இருந்து மாறுபட்டு, ‘ஜி 20' அமைப்பு - முற்றிலும் பொருளாதார முயற்சிகளையே வலியுறுத்துகிறது. 1999-ல் ஏழு நாடுகளுடன் தனது பயணத்தைத் தொடங்கி, 2008-ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியின்போது, 20 உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான அமைப்பாகத் தன்னை விஸ்தரித்துக் கொண்டது.
உலகின் முதல் 20 நிலைகளில் உள்ள ‘வளர்ந்த நாடுகள்' பங்கு கொண்டுள்ளதால் இவ்வமைப்பு உலக அரங்கில் மிகவும் வலிமையானதாகத் திகழ்கிறது. சர்வதேச உறவுகளில் வேறெதையும்விட, பொருளாதாரமே பிரதானமாக முன் நிற்பதால், ஒரு வகையில், ஐக்கிய நாடுகள் சபையைக் காட்டிலும் ‘ஜி 20' அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
உலக மக்கள் தொகையில் 66%; உலகின் மொத்த பொருளாதார உற்பத்தி அலகில் 85%; சர்வதேச வணிக மதிப்பில் 75%; உலக முதலீட்டில் 80% கொண்டிருக்கிறது ‘ஜி 20'. இவ்வமைப்பின் நோக்கம், இலக்கு - இரண்டுமே பொருளாதாரத்தை மையப்புள்ளியாகக் கொண்டு இருப்பதால் ‘பிற பிரச்சினைகள்' இதன் செயல்பாட்டுக்குத் தடையாக இருப்பதில்லை.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆதரவாகத்தான் இவ் வமைப்பும் செயல்படு கிறது. இவர்களின் செயல் திட்டத்துக்கு ஊடேதான், இவர்களின் வல்லமையை மீறித்தான் இந்தியா போன்ற நாடுகளுமே கூட தங்களுக்கு வேண்டிய நன்மைகளைப் போராடிப் பெற வேண்டி இருக்கிறது.
ஆனாலும் இப்போதைக்கு, ஐக்கிய நாடுகள் சபை போன்று செயல்பட முடியாமலோ, ‘சார்க்' போன்று பெயரளவில் இருப்பதாகவோ அன்றி, அதற்கான இலக்கை நோக்கிச் சரியாகப் பயணிக்கிற ஓர் உலக அமைப்பாக ‘ஜி - 20' திகழ்கிறது.
எனவேதான், ஏழ்மை, நோய்கள், வன்முறை, மனித உரிமை மீறல் ஆகியவற்றில் இருந்து உலக மக்களை முழுவதுமாக விடுவிக்கிற பணியில் ‘ஜி 20' முழு மனதுடன் களம் இறங்க வேண்டும் என்று வளரும், வளரா நாடுகள் எதிர்பார்க்கின்றன.