Last Updated : 05 Sep, 2014 08:42 AM

 

Published : 05 Sep 2014 08:42 AM
Last Updated : 05 Sep 2014 08:42 AM

இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை!

“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”

புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.

எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக அந்த ஆசிரியர் கேட்டார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”

கண்கள் விரிய அவரைப் பார்க்கிறார்கள் மாணவர்கள். வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். “பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், படிப்பைப் பாதியில் விட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் சாதுர்யமான முதல்வர். மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்கிய கி.ராஜநாரா யணன் பின்னாளில், பல்கலைக்கழகக் கவுரவப் பேராசிரியர். எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!”

அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.

ஒரு மனிதனுக்கு சுயத்தின் மீதான நேசத்தையும் தன்னம்பிக்கையையும் ஆசிரியர்களால் எவ்வளவு அருமையாக உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணங்களில் ஒருவர் ஜெகதீசன். அரசு ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முறையைக் கண்டித்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சென்னை கபிலன், ராதா நல்லூர் சந்தோஷ்குமார், வீரகனூர் செல்லத்துரை, திருவிடை மருதூர் கார்த்திக் இவர்களையெல்லாம் எதற்கான உதாரணங்களாகச் சொல்வது? நாளைக்கு இவர் களெல்லாம் ஆசிரியர்களானால், இவர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுப்பார்கள்? ஒரு காரியத்தைச் சாதிக்க எந்த எல்லை வரை சென்று மிரட்டக் கற்றுக்கொடுப்பார்கள்? அந்தப் பிள்ளைகள் வாழ்க்கையையும் போராட்டங்களையும் என்ன மாதிரியான மதிப்பீடுகளோடு பார்ப்பார்கள்? கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படிப் பட்டவர்களையெல்லாம் வடிகட்ட நம்முடைய ஆசிரியர் தேர்வு முறையில் சல்லடை இல்லை. இங்குள்ள ஒரே சல்லடை மதிப்பெண், மதிப்பெண், மதிப்பெண்...

தகுதித்தேர்வு முறைதானா?

ஒருகாலம் இருந்தது. “நானும் எங்க டீச்சர் மாதிரி அரசாங்கப் பள்ளி டீச்சர் ஆவேன், கிராமத்து ஏழைப் பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பேன்” என்று அரசுப் பள்ளி ஆசிரியர் தொழிலை ஒரு கனவுபோலப் பார்த்துத் தயாரான காலம். இன்றைக்கு அது ஒரு வரம். காசு கொட்டும் மரம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், கல்வியியல் நிறுவனங்களும் பணம் இருந்தால், வகுப்புக்கு வராமலேயே ஆசிரியர் பயிற்சியை முடிக்கலாம் என்கிற சூழலையெல்லாம் உருவாக்கிவிட்ட நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர் களைத் தேர்ந்தெடுக்க ஒரு புதிய தேர்வுமுறை அவசியம் தேவைப்பட்டது. அந்த வகையில், பள்ளிக் கல்வி, ஆசிரியப் பயிற்சி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலு வலகப் பதிவுமூப்பைத் தாண்டி ஒரு தகுதித் தேர்வை அரசு யோசித்தது ஆக்க பூர்வமான விஷயம். ஆனால், அந்தத் தகுதித் தேர்வும் நம்முடைய பழைய பத்தாயத்தைத் தாண்டவில்லை என்பது சாபத் துயரம்.

ஆசிரியர் பணிக்கென அரசு ஒரு தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வு முழுக்க முழுக்க அவர்கள் அதுவரை படித்த பள்ளி - கல்லூரி பாடங்களையே சுற்றுகிறது. அந்தத் தேர்வில் தேறியவர்களிடம் ‘நீ இந்தத் தேர்வில் எடுத்த மதிப் பெண்கள் மட்டும் செல்லாது; பள்ளி இறுதிப் படிப்பிலும், ஆசிரியப் பயிற்சியிலும் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துத் தேர்ந்தெடுப்போம்’ என்று சொல்வது பெரிய கேலிக்கூத்து. ஆனால், தமிழகக் கல்வித் துறை அதைத்தான் சொல்கிறது. புதிய தேர்வு முறை தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்களில் 60%, பள்ளி - ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 40% என்று கணக்கிட்டு ஆட்களைத் தேர்ந்தெடுப்போம் என்று சொல்கிறது.

ஒருவரை வேலைக்குத் தேர்தெடுக்கும்போது, இன்றைக்கு அவருக்கு இருக்கும் தொழில்சார் அறிவையும் திறமையையும் வைத்துத் தேர்ந்தெடுப்பதுதான் உலகெங்கும் உள்ள முறை. நம்முடைய கல்வித் துறை அதிகாரிகள் எந்த ஊரில் அறை எடுத்துத் தங்கி இப்படியெல்லாம் புதிது புதிதாக யோசிக்கப் பழகுகிறார்கள் என்று புரியவில்லை.

உடையும் முட்டைகள்

இந்த விவகாரம் தமிழகக் கல்வித் துறையில் நடக்கும் - ஆசிரியர்கள் இதுவரை பேசாத - இன்னொரு கேலிக்கூத்தை அதிகாரபூர்வமாக அம்பலமாக்கியிருக்கிறது. “தங்கள் ஆட்சியில்தான் கல்வித் துறை முன்னேறுவதாகக் காட்டிக்கொள்ளப் போட்டிபோட்டுக்கொண்டு மதிப் பெண்களை வாரி வழங்கும் கலாச்சாரத்தின் விளை வாகப் புதிய தலைமுறையினர் பள்ளித் தேர்வில் மதிப் பெண்களை அள்ளிக் குவிக்கிறார்கள். பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. நாங்கள் எப்படி இப்போது படித்து முடிப்பவர்களுடன் பள்ளிக்கூட மதிப்பெண்களில் போட்டி போட முடியும்?” என்று கேட் கிறார்கள் பல ஆண்டு காலமாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள். “தகுதித் தேர்வில் 102 மதிப்பெண் பெற்ற நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை; 82 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். என்ன நியாயம் இது?” என்று கேட்கிறார் ஓர் ஆசிரியை. நியாயமான கேள்வி இது.

இதற்குக் கல்வித் துறையினர் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா: தகுதிக்கான வரையறை மதிப்பெண்ணை எல்லோரும் வாங்கிவிட்டால் எப்படி எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது?

மொத்தப் பணியிடங்கள் 100 என்றால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், அந்தந்தப் பிரிவுக்கான முதல் நூறு இடங்களில் வருபவர்களுக்குப் பணியாணையை வழங்க வேண்டியதுதானே? இதில் என்ன சிக்கல்?

பாடப் புத்தகங்களைத் தாண்டி சிந்திப்பது எப்போது?

அடிப்படையில் இவையெல் லாமே நம்முடைய தேர்வுமுறைகள் பாடப் புத்தகங்களையே சுற்றிக் கொண்டிருப்பதால் எழும் சிக்கல் கள். பாடப் புத்தகங்களைத் தாண்டி சிந்திப்பவர்கள் இந்த அமைப்புக்கு உள்ளே வர நம்முடைய கல்வித் துறை என்ன வழியை வைத்திருக்கிறது? நல்ல கதைசொல்லிகள், வளமான பாரம்பரிய அறிவைப் பெற்றிருப்பவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் இவர்களுடைய திறமைக்கெல்லாம் நம்முடைய கல்வித் துறை என்ன மதிப்பு அளிக்கிறது? நிஜமாகவே நமக்குத் தேவை திறமைசாலிகள் என்றால், வடிகட்ட ஆயிரம் வழிகள் உண்டு. நிச்சயம் இப்போதைய முறை அந்த வழிகளில் ஒன்று அல்ல.

ஆசிரியர் ஜெகதீசன்தான் இதையும் சொல்வார். “ஒரு சமூகத்துல ஆசிரியர்கள்தான் எல்லா விதத்துலேயும் உயர்ந்தபட்ச பீடத்துல வைக்கப்படணும். உயர்ந்த பட்ச தகுதிகளோட உள்ளவங்களை அரசாங்கம் தேடித் தேடி ஆசிரியப் பணிக்கு எடுக்கணும். ஏன்னா, ஒரு தப்பான ஆள் மருத்துவரா தேர்ந்தெடுக்கப்பட்டா, சில உயிர்கள் காலியாகும். ஒரு தப்பான ஆள் பொறியாளரா தேர்ந் தெடுக்கப்பட்டா, பல கட்டிடங்கள் காலியாகும். ஆனா, ஒரு தப்பான ஆள் ஆசிரியராகிட்டா பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.”

ஆசிரியர் தேர்வுமுறை தொடர்பான போராட்டங்களை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கலாகாது. இது அவர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல; நம் தலைமுறைகளின் பிரச்சினை!

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x