Last Updated : 06 Dec, 2018 09:09 AM

 

Published : 06 Dec 2018 09:09 AM
Last Updated : 06 Dec 2018 09:09 AM

டெல்லி அம்பேத்கர் நினைவகத்தில் ஓர் உலா 

டெல்லி செல்லும்போதெல்லாம் ‘26, அலிப்பூர் சாலை’ என்ற முகவரிக்குப் போக வேண்டும் என நினைப்பேன். பாபா சாகேப் அம்பேத்கர் கடைசியாக மூச்சுவிட்ட, மஹா பரிநிர்வாண பூமியின் முகவரி அது. அதனைக் ‘கண்டுணர’ வேண்டும் என்பது அம்பேத்கரைப் படித்த பிறகு பிறந்த ஏக்கம். ஆனால், கட்டற்று வளர்ந்திருக்கும் டெல்லியில், அம்பேத்கர் தேசிய நினைவகம் எங்கு இருக்கிறது என்று பலருக்கும் தெரியவில்லை. டெல்லிவாழ் விஷயமறிந்த தோழர்களுக்கும், பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கேயே பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும்கூடச் சரியாக வழி தெரியவில்லை.

காந்தி, நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் நினைவகங்கள் இடம்பிடித்திருக்கும் டெல்லி சிட்டி டூர் பேக்கேஜ்களில் அம்பேத்கரின் நினைவகம் இல்லை. டூர் ஆபரேட்டர்களிடம் கேட்டால், ‘அம்பேத்கர் நினைவகமா... எங்கு இருக்கிற‌து?’ எனத் திருப்பிக் கேட்கிறார்கள். இறுதியில் கூகுள் துணையோடு நானே களத்தில் இறங்கி, ‘26, அலிப்பூர் சாலை’யைத் தேடினேன். சிவில் லைன்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் இருப்பதை அது சொன்னது. ஆனால், அங்கும் ‘அம்பேத்கர் நினைவகம்’ செல்வதற்கான எந்தக் குறிப்பும் இல்லை.

வெளியே இருந்த ஆட்டோக்காரர்களுக்கும், டாக்ஸிக்காரர் களுக்கும்கூடத் தெரியவில்லை. ‘அம்பேத்கர் நினைவகம் அலிப்பூர் சாலையில் இல்லை. ஷாம்நாத் மார்கில் இருக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கிறது’ எனக் குழப்பினார்கள். கடைசியில், வயதான ஒரு ரிக் ஷாக்காரர் தன் வண்டியில் என்னைச் சுமந்துசென்று, பழைய விதான சபாவுக்கு முன்னால் மூடப்பட்டிருந்த பெரிய கேட்டின் முன் நிறுத்தினார். அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடம் தந்த எழுச்சி அத்தனை அலைச்சலையும் போக்கியது. தன் வாழ்நாளைச் சுருக்கி, உயிரை உருக்கி இந்நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிக்கொடுத்தவருக்கு, அதே புத்தக வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது நினைவகம்.

அம்பேத்கர் மூச்சு கலந்த இடம்

1951-ல் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார் அம்பேத்கர். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் ‘26, அலிப்பூர் சாலை’ என்ற முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்ஸும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார்.

இறுக்கமாக மூடப்பட்டிருந்த நினைவகத்தின் கதவைத் திறந்ததும், அம்பேத்கரின் அந்திமக் காலம் குறித்து அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டு எழுதிய ‘லாஸ்ட் ஃப்யூ இயர்ஸ் ஆஃப் டாக்டர் அம்பேத்கர்’ நூலின் வரிகள் மனதில் காட்சிகளாக ஓடின. மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்கத் தொடங்கியது. ஒருவித மன அழுத்தமும், அமைதியும் என்னை ஆட்கொண்டது. எனது செல்பேசியை வாங்கிய ஊழியர் ஒருவர், அம்பேத்கர் நினைவகச் செயலியைத் தரவிறக்கம்செய்து, அதை ஹெட்போனில் கேட்குமாறு பணித்தார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, முக்கியமான பணிகள் காதில் ஒலித்தன.

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள், சம்பவங்களின் தொகுப்பு ஆகியவை தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் மூலம் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. பரோடா ரயில் நிலையம் அருகே சயாஜி பாக்கில் ஆலமரத்தடியில் அமர்ந்து அம்பேத்கர் அழுத காட்சியைக் காணும்போது கண்கள் கலங்கின. அந்த இடத்தில்தான் அவர் சமூக நீதிக்காகப் போராடும் தலைவராக உருவானார்.

எட்டு உலோகங்களால் செய்யப்பட்ட அசோகா தூண், அம்பேத்கரின் பிரம்மாண்டமான பித்தளை சிலை, வியட்நாம் வெள்ளை சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை, தியான அறை, நூலகம், பஞ்சசீலத்தைப் போதிக்கும் முத்திரைச் சிற்பங்கள், ஜென்ம பூமி, போதிமரம் ஆகியவை நேர்த்தியான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவினரின் உருவங்கள் அச்சுஅசலான‌ சிற்பங்களாக்கப்பட்டு, அவர்கள் பணியாற்றிய விதம், நாடாளுமன்றத்தில் அதைச் சமர்ப்பித்தது ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இன்னொருபுறம், அம்பேத்கரின் பௌத்தம் நோக்கிய பயணம், நாக்பூர் தீக்ஷா பூமி கூட்டம் ஆகியவற்றின் சிலைச் சித்தரிப்புகள், அந்த மாபெரும் திரளில் ஒருவனாக என்னை மாற்றிவிட்டன.

ஈரடுக்குக் கட்டிடத்தில் அமைதியும் ரம்மியமும் கலந்த பகுதியில் நுழைகையில் அம்பேத்கரின் கணீர்க் குரலும், அழுத்தமான ஆங்கிலமும் செவிகளில் பட்டதும், உடல் சிலிர்த்தது. நீலநிற கோட்சூட்டும், சிவப்பு டையும் அணிந்த ரோபோ அம்பேத்கர், கையையும் தலையையும் அசைத்துச் சொல்கிறார் ‘‘உங்களுக்கு உறுதியாகவும், இறுதியாகவும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். சமூக நீதி நிறைந்த ஜனநாயகம் என்றால் அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும்!’’ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நிறைவுரையின்போது அம்பேத்கர் ஆற்றிய உரையின் இதயப்பகுதி அது.

பழைய நாட்களுக்குள் ஓர் உலா

அம்பேத்கர் கடைசிக் காலத்தில் வாழ்ந்த வீடு இந்த நினைவகத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தது. அவர் நடமாடிய, கடைசி மூச்சுக்காற்று கலந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டதால், 2003-ல் புதிய நினைவகம் கட்டப்பட்டது. அந்த நினைவகம் இடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய இங்க் பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்து அறையில் அவரது டிரெஸ்ஸிங் டேபிள், அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி, அதன் கால்மாட்டில் அவரது செல்ல நாய்க்குட்டி டாபி என அனைத்தும் அந்த நாட்களுக்குள் இழுத்துச்சென்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் எல்லா வகையான அம்சங்களும், அதி நவீன வசதிகளும் இருந்தும் அம்பேத்கரின் பிரம்மாண்ட‌ நினைவகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. 56 ஊழியர்கள் பணியாற்றும் அந்த இடத்தில், ‘ஒரு நாளைக்கு 50 பார்வையாளர்கள்கூட வருவதில்லை. மற்ற இடங்களுக்கு வண்டி வண்டியாகக் குவியும் மாணவர்கள்கூட இங்கு வருவதில்லை. இந்திய மனங்களில் புரையோடியிருக்கும் சாதி வெறிதான் இதற்குக் காரணம்’ என ஆதங்கப்பட்டார் அதன் காவலாளி.

நினைவகத்திலிருந்து வெளியேறுகையில் அம்பேத்கர், நானக் சந்த் ரட்டுவிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தன: ‘‘நான் தனி ஆளாகக் கொடுந்துயரங்களையும், முடிவிலா வலிகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். பத்திரிகைகளின் அவதூறுகளையும் தாண்டி வாழ்நாளெல்லாம் போராடி என் மக்களுக்காகச் சிலவற்றைச் செய்திருக்கிறேன். பல்வேறு தடைகளைத் தாண்டி, இந்தத் தேரை இதுவரை இழுத்துவந்திருக்கிறேன். இதை என் இயக்கத்தினரும், மக்களும் முன்னோக்கி இழுத்துச்செல்ல இயலாவிடில், அங்கேயே நிறுத்திவிட்டுப்போகட்டும். பின்னோக்கி இழுத்துச்செல்லாமல் இருக்கட்டும். இதுவே என் செய்தி. என் மக்களிடம் போய்ச் சொல்!’’

- இரா.வினோத், தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in

டிசம்பர்-6 அம்பேத்கர் நினைவுதினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x