

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகள் வெறும் காகிதத்துடனேயே நின்றுவிடும் என்று அஞ்சுகிறேன். ‘முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனி செஷன்ஸ் நீதிமன்றங்களையும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் ஏற்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டின் 440 மாவட்டங்களில் 4,122 முன்னாள் எம்எல்ஏ, எம்பிக்கள் மீது வழக்குகள் இருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.
ஒரு வழக்கு நடந்து முடிய நீண்ட காலம் பிடிக்கும். குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். குற்றப்பத்திரிகையைத் தயாரிக்க வேண்டும், சாட்சிகள் விசாரிக்கப்பட, குறுக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வழக்குக்கு ஆதாரங்களாக ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும், வாதங்கள் கேட்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அனைத்தையும் பரிசீலித்துவிட்டு நல்ல தீர்ப்பை வழங்க முடியும். இத்தகைய வழக்குகளில் சாட்சிகள் மட்டுமல்ல விசாரணை அதிகாரிகள்கூட, முதலில் கூறிய நிலையிலிருந்து பிறழ்ந்துவிடக் கூடும்.
இந்தியாவில் இப்போதுள்ள நீதிமன்றங்களில் 3.3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் குவிந்துள்ளன. இந்த நீதிமன்றங்களைச் சேர்ந்த ஒரு பிரிவு நீதிபதிகள், தங்களுக்கு முன்புள்ள பிற வழக்குகளைத் தள்ளிவைத்துவிட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளுக்கு முன்னுரிமை தர வேண்டுமா? அப்படித் தருவதாக இருந்தால் அவர்கள் விசாரித்து வரும் பிற வழக்குகளை இதர நீதிபதிகளிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும். இது மற்ற நீதிபதிகளுக்கும் பணிப் பளுவை அதிகரித்துவிடும்.
நீதிமன்றம் பிறப்பித்து, அமல்படுத்த முடியாத இன்னொரு தீர்ப்பு, ‘சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம்-2018’ ஆகும். குற்ற வழக்குகளில் தானாகவே வந்து சாட்சியம் சொல்பவர் கிடைப்பது இக்காலத்தில் மிகவும் அரிது. குற்றச் செயலை நேரில் பார்த்தால் அதை காவல்துறையிடமோ, நீதிமன்றத்திலோ வந்து சொல்வதைத் தவிர்ப்பதை விரும்புவதுதான் இயல்பு. முதல் காரணம், யாருக்கு எதிராக சாட்சி சொல்கிறோமோ அவர்களால் உடலுக்கு அல்லது உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துதான். இதன் விளைவாக, சாட்சி அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்தான் என்று நீதிபதிகளால் உண்மையாக நம்ப முடிவதில்லை. இந்த நிலையை மாற்றத்தான் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை அமல்படுத்துவது நிதி அடிப்படையிலும் நிர்வாகரீதியிலும் சாத்தியமா?
இந்தத் திட்டப்படி, குற்றவழக்கில் சாட்சி சொல்பவருக்குப் ‘புதிய அடையாளம்’ தரப்படும். அதாவது, அவருடைய பெயர் அதிகாரபூர்வமாகவே மாற்றப்படும். 2.84 கோடிக்கும் மேல் வழக்குகள் சார்பு நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன. அவற்றில் 70% குற்றவியல் வழக்குகள்தான். சராசரியாக ஒரு வழக்குக்கு 6 சாட்சிகள் என்றால், லட்சக்கணக்கானோருக்குப் பெயர் மாறுதல் உள்ளிட்ட அடையாள மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது நடைமுறைரீதியிலும் பணரீதியிலும் சாத்தியமா?
இதர உத்தேச யோசனைகளும் காரிய சாத்தியமற்றவையாகவே தோன்றுகின்றன. சாட்சியங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது காவல்துறை பாதுகாப்பு அளிப்பது, தற்காலிகமாகப் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்துவது, சாட்சியத்தை வேறு இடத்துக்குக் கொண்டுசெல்வது போன்ற உத்தேசத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருப்பவரை, வழக்கு விசாரணைக்காக இன்னொரு இடத்தில் மாற்றிக் குடிவைக்க முடியுமா? எத்தனை காலத்துக்கு, எத்தனை சாட்சியங்களுக்குக் காவல்துறையால் இப்படிப் பாதுகாப்பு வழங்க முடியும்?
- மார்க்கண்டேய கட்ஜு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி.‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி.