Last Updated : 13 Dec, 2018 10:53 AM

 

Published : 13 Dec 2018 10:53 AM
Last Updated : 13 Dec 2018 10:53 AM

காந்தியை மூன்றாம் வகுப்பாக்கிய முதல் வகுப்பு!

“ஏய், இப்படி வா. சாமான்கள் இருக்கும் பெட்டியில் போய் உட்கார்ந்துகொள். ஆங்கிலேயர்கள் அமரும் முதல் வகுப்புப் பெட்டியிலெல்லாம் நீ அமர்ந்துவரக் கூடாது” என்று தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மாரீட்ஸ்பெர்கில் ரயில் அதிகாரி ஒருவர் கூறியபோது, “என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே” என்று பதிலளித்தார் காந்தி.

“அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை; சாமான்கள் வைக்கப்படும் பெட்டிக்குத்தான் நீபோயாக வேண்டும். இல்லையென்றால், போலீஸ்காரரை விட்டு உன்னைக் கீழே இழுத்துப்போட்டுவிடுவேன்” என்றார்.

தன் முடிவில் உறுதியாக இருந்த காந்தியை அந்த ரயில்நிலையத்தின் காவலாளி வெளியில் இழுத்துப்போட்டார்.

லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி, பம்பாயிலும் ராஜ்கோட்டிலும் பிழைப்பு நடத்தப் பார்த்தாலும் அவரால் முடியாத சூழலில்தான் தென்னாப்பிரிக்காவுக்கு வழக்கொன்றுக்காகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்னையின் மறைவு, இரண்டாவது குழந்தை மணிலால் பிறப்பு, சமஸ்தானத்தில் காந்தியின் அண்ணன் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்று இடையில் எவ்வளவோ நடந்துவிட்டன. சொந்த நாட்டின், சொந்த மாகாணத்தின் எதார்த்தங்களிலிருந்து தப்பிக்கவும், பணம் சம்பாதிக்கவும், பரந்த அனுபவம் தேடவும் ஒரு வாய்ப்பாகத்தான் காந்தி தென்னாப்பிரிக்கப் பயணத்தைப் பார்த்தார்.

காந்தியின் சொந்த ஊரைச் சேர்ந்த தாதா அப்துல்லா என்பவரின் குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவில் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தனர். தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் மாகாணத்தில் அவர்களுக்குச் சொந்தமான கடை

களைத் தவணை முறையில் வாங்கிய உறவினர் ஒருவர், தாதா அப்துல்லாவுக்குத் தவணைகள் தராமல் ஏமாற்றிவிட்டார். அதன் பிறகு உறவினர் மீது அப்துல்லா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தன. ஆகவே, இந்த இரண்டு மொழிகளையும் அறிந்த ஒரு வழக்கறிஞர் அவர்களுக்குத் தேவைப்பட்டார். அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்பவராக அப்போது காந்தி அவர்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

கப்பல் பயணத்துக்கான செலவு, உணவு, தங்குமிடம், சம்பளமாக 105 பவுண்டு என்றெல்லாம் பேசி காந்தியை அவர்கள் சம்மதிக்க வைத்தார்கள். 1893 ஏப்ரல் 24 அன்று பம்பாயில் கப்பலில் புறப்பட்ட காந்தி, ஒரு மாதம் கழித்து மே 24 அன்று டர்பன் துறைமுகத்தை வந்தடைகிறார். சாதாரண எதார்த்தங்களிலிருந்து தப்பித்து, கடுமையான எதார்த்தங்களிடம் வந்துசேர்கிறோம் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு வந்த ஒரு வாரத்திலேயே அதையெல்லாம் அறிந்துகொண்டார்.

துறைமுகத்திலிருந்து அவரை அழைத்துச்செல்ல தாதா அப்துல்லாவே வந்திருந்தார். காந்தியை அழைத்துச்சென்று டர்பனிலுள்ள தன் வீட்டின் ஒரு பகுதியிலேயே தங்கவைத்தார்.

டர்பனில் ஒரு வாரம் இருந்த பிறகு, வழக்கு தொடர்பாக அப்போதைய தென்னாப்பிரிக்கக் குடியரசின் தலைநகரான பிரிட்டோரியாவுக்கு காந்தி செல்ல வேண்டி வந்தது. முதல் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணித்தார். முதல் வகுப்பில் கூடுதலாகப் படுக்கை விரிப்பு வேண்டுமென்றால், அதற்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் படுக்கை விரிப்பை காந்தியே எடுத்துக்கொண்டு சென்றார். சத்திய சோதனையின் ஆங்கில மூலத்தில் ‘பெட்டிங்’ (bedding) என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘சத்திய சோதனை’ தமிழுக்கு வரும்போது அதன் மொழிபெயர்ப்பாளர் ‘படுக்கை’ என்று மொழிபெயர்த்துவிடுகிறார். இதனால், உத்வேகம் பெற்ற ‘வரலாற்று ஆய்வாளர்கள்’ சிலர் ‘காந்தி படுக்கைக்கு டிக்கெட் எடுக்காமல் அழிச்சாட்டியம் செய்தார்; அதனால்தான் அவரை இறக்கிவிட்டார்கள். காந்தி செய்ததுதான் தவறு. வேற்றினத்தவர் படுத்த படுக்கையில் படுக்கக் கூடாது என்ற இனவெறியோடுதான் அவர் படுக்கைக்கு டிக்கெட் எடுக்கவில்லை’ என்றரீதியில் புது வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சாதி கட்டுப்பாட்டை மீறி காந்தி லண்டன் சென்றதற்காக காந்தி சாதிநீக்கம் செய்யப்பட்டது; லண்டனில் கிறிஸ்தவரோடு ஒரே அறையில் தங்கியது, தென்னாப்பிரிக்காவில் வந்து இறங்கிய பின் சில காலம் இஸ்லாமியரான தாதா அப்துல்லாவின் வீட்டில் தங்கியது போன்ற விஷயங்களெல்லாம் அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பாத விஷயங்கள்.

ரயிலில் ‘முதல் வகுப்பு’ என்று பொதுப்படையாக இருந்தாலும் அந்த வகுப்பில் பயணிக்கும் ஆங்கிலேயர்கள் பொதுவாக கருப்பினத்தவருடனோ காந்தி போன்ற மாநிறத்தவருடனோ பயணிப்பதை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை லண்டனில் ஆங்கிலேயரிடம் ஓரளவு சமத்துவத்தை அனுபவித்த காந்தி அறிய மாட்டார். அதன் விளைவுதான் இரவு நேரத்தில் பீட்டர்மாரீட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தில் ரயிலின் முதல் வகுப்பிலிருந்து காந்தி இழுத்து வெளித்தள்ளப்பட்டது. அவருடைய போர்வையெல்லாம் அவருடைய பெட்டியோடு சேர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் வசம் இருந்தது. குளிர்காலத்தில் தென்னாப்பிரிக்காவிலேயே அதிகமாகக் குளிரும் இடங்களுள் பீட்டர்மாரீட்ஸ்பெர்கும் ஒன்று. இரவு முழுக்க நடுங்கிக்கொண்டே உட்கார்ந்திருந்த காந்தி, மேலும் தான் அவமதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் யாரிடமும் உதவி கேட்கக்கூட அஞ்சினார்.

இதுகுறித்து தனது சத்திய சோதனை நூலில் இப்படி எழுதுகிறார்: “என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காகப் போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா? இல்லாவிடில், அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய், வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் லேசானது; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயல வேண்டும்; அதைச் செய்வதில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.”

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தான் பட்ட அவமானத்தைத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தன்னுடைய பிரத்யேகமான ஒன்றாகக் கருதிவிடாமல், உலகம் முழுமைக்குமான ஒன்றாகப் பார்க்க அவருக்குக் கற்றுக்கொடுத்த இடம் என்பதால்தான் உண்மையான காந்தி பிறந்த இடமாக பீட்டர்மாரீட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தை நாம் கருத வேண்டும். ‘நீங்கள் எங்களுக்கு காந்தியைக் கொடுத்தீர்கள்; நாங்கள் உங்களுக்கு மகாத்மாவைத் திருப்பிக்கொடுத்தோம்’ என்று பின்னாளில் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா காந்தியைப் பற்றிக் கூறியதை இந்த இடத்தில் நாம் நினைவுகூரலாம்.

காந்தியை அந்த போலீஸ்காரர் முதல் வகுப்பிலிருந்து மட்டும் இழுத்துவந்து வெளியே போடவில்லை; வாழ்க்கையின் குரூரமான உண்மைகளின் மத்தியிலும்தான் இழுத்துவந்து போட்டார். இந்தியாவும் உலகமும் அந்த போலீஸ்காரருக்கு ஒருவகையில் நன்றிக்கடன் பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். யார் கண்டது, அவர் அப்படிச் செய்யவில்லையென்றால் காந்தி இறுதிவரை வாழ்க்கையின் முதல் வகுப்புப் பயணியாகவே இருந்திருக்கக்கூடும்!

ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x