

தேர்தல்கள் அரசியலில் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது மறுக்க முடியாதது. ஆனால், அரசியல் விவாதம் என்பது முழுக்க முழுக்கத் தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வியாக மாற முடியாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஒரு பிரச்சினை கிளப்புகிறார்களே அது ஏன், எதற்காக, அதன் அடிப்படைகள் என்ன என்பதை ஒரு சமூகம் விவாதிக்க வேண்டாமா?
தமிழகத்தில் அடிக்கடி புயல் வந்து கடும் சேதங்கள் நிகழ்கின்றனவே? இது தற்செயலானதா? சூழலியல் பாதிப்புகள் காரணமா? வேதாரண்யம் என்ற பெயரிலேயே ஆரண்யம் என்ற காடு இருக்கிறதே? திருமறைக்காடு என்று தமிழில் வழங்கப்பட்டதே? அந்தக் காடு எத்தகையது? அது அழிக்கப்பட்டதா? ‘ஃபிரெஞ்சு மிசலின் டைர்’ தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டது மீண்டும் நடைபெறாமல் இருக்க எத்தகைய சட்டங்களை இயற்ற வேண்டும்?
ஆணவக்கொலைகள் குறித்த மக்களின் மனநிலை என்ன? குறிப்பாக பெண்கள், தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைச் சாதியவாதிகள் தடுப்பதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள்? இந்தக் கொலைகள் நிகழ்வதை மாற்ற எத்தகைய தொடர் பிரச்சாரங்கள் தேவை? - இப்படியெல்லாம் விவாதிக்க வேண்டாமா?
அரசியல் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வியக்கம்... செயல்பாடுகள். இதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமானவை.
தொகுதிப் பங்கீடு, கூட்டணி, தேர்தல் வெற்றி - தோல்விக் கணிப்பு என்பதெல்லாம் மட்டுமே அரசியல் என்ற எண்ணத்தை டிஆர்பி ரேட்டிங்கும் ஊடகங்களும் ஏற்படுத்துவது மானுட சுய அழிவை உறுதிசெய்ய மட்டுமே பயன்படும்.
கட்சிகளெல்லாம் பேரம் பேசி, தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் வரட்டும். அப்போது அதைக் குறித்துப் பேசலாம். அதைவிடுத்து இவர் அவரை ஏன் பார்த்தார், அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று யூகங்களும், கிசுகிசுக்களுக்குமே அரசியல் என்று நிறுவப்படுவது கேவலமானது.