Published : 03 Dec 2018 09:04 AM
Last Updated : 03 Dec 2018 09:04 AM

நம்பகமான ராக்கெட்

1966-ல் முதன்முதலில் விண் ணுக்கு ஏவப்பட்ட சோயூஸ் வகை ராக்கெட்டுகள்தான் இதுவரை வடிவமைக்கபட்ட ராக்கெட்டு களிலேயே மிகவும் நம்பக மான ராக்கெட் என பெயரெடுத்துள்ளது.

இன்றுவரை அமெரிக்க விண்வெளி வீர்கள் உட்பட மனிதர்கள் அனைவரை யும் சர்வதேச விண்வெளிக் குடிலுக்கு ஏந்தி செல்ல பயன்படுத்தப்படுவது இந்த வகை ராக்கெட்டுகள்தாம்.

சோயூஸ் ராக்கெட்டின் புதுப்பித்த வடிவமைப்பான 'சோயூஸ் யூ' கடந்த 1976-ம் ஆண்டு ஏவப்பட்டது. அதிலிருந்து 2017-ல் ஓய்வு கொடுக்கும்வரை ‘சோயூஸ் யூ' ராக்கெட் மொத்தம் 786 தடவை ஏவப்பட்டுள்ளது. அதில் வெறும் 22 தடவை மட்டுமே தோல்வி. எனவே இந்த ராக்கெட்டின் திறம் 97.3%.

தற்போது சர்வதேச விண்வெளிக் குடிலுக்கு விண்வெளி வீரர்களை ஏந்தி செல்லும் இதன் மற்றொரு வடிவம்தான் 2001-இல் உருவாக்கபட்ட ‘சோயூஸ்-FG'. இதுவரை மொத்தம் 65 தடவை ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட், கடந்த அக்டோபர் மாதத்தன்று முதல் விபத்தை சந்தித்தது. எனவே இதன் திறம் 98.4%

இதனை மேலும் செழுமைப்படுத்திய வடிவமான ‘சோயூஸ்-2' கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை 80 முறை ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் 73 வெற்றியடைந்துள்ளது. எனவே, இதன் வெற்றி விகிதம் 91.3%. வரும் 2019-ம் ஆண்டு முதல் இந்த ராக்கெட்தான் அமெரிக்க வீரர்கள் உட்பட எல்லா விண்வெளி வீரர்களையும் விண்ணுக்கு எடுத்து செல்லும்.

சோவியத் பொறியியலாளர் சேர்கே கொரோலேவ் (Sergei Korolev) என்பவ ரால் வடிவமைக்கப்பட்டு ‘ஸ்புட்னிக் 1' செயற்கைகோளை முதன்முதலில் விண்வெளிக்கு எடுத்து சென்ற ‘R7' ராக்கெட் குடும்பத்தைச் சேர்ந்த சோயூஸ் தான் இன்றளவும் பயனில் இருக் கிறது. அப்படியென்றால், அந்த வடிவ மைப்பின் மகத்துவம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அல்லவா?

அந்த வடிவமைப்பே மேலும் மேலும் புத்தாக்கம் செய்யப்பட்டு இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 60 சோயூஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் இந்த ராக்கெட் ஏற்படுத் திய சாதனைக்கு வேறு நெருக்கமாக இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் செயல்படுகிறது. இஸ்ரோவில் 1970- களில் உருவாக்கப்பட்ட எஎஸ்எல்வி எனும் ராக்கெட்டின் செழுமை வடிவம் தான் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட். IRS-1E என்ற தொலைஉணர்வு செயற்கை கோளை ஏவ 1993-ல் முதன்முதலில் பிஎஸ்எல்வி பயன்படுத்தப்பட்டபோது அது தோல்வியை சந்தித்தது.

அதன் பின்னர், மேலும் பிழை திருத் தங்கள் செய்யப்பட்டு செழுமை அடைந்த பிஎஸ்எல்வி ராக்கெட் 1994-லும், 1996-லும் ஏவப்பட்டது. அப்போது அவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட் டன. இந்த வெற்றிகளுக்கு பிறகு கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி IRS-1D செயற்கைகோளை ஏவி, அது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதுமுதல் இதுவரை ஒரு தோல்வியும் இல்லாமல் நிலவுக்கு சென்ற சந்திராயன், செவ்வாய்க்கு சென்ற மார்ஸ் ஒர்பிடர் மிஷன் உட்பட அடுத்தடுத்த 43 தொடர் வெற்றியை சந்தித்து உலகை வியக்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்ல சிறு மற்றும் நுண் செயற்கைகோள்களை ஏவவும் இந்த ராக்கெட்தான் பொருத்தமானது என சர்வ தேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் படியாக, ஒரே ஏவுதலில் நூறு சிறு மற்றும் நுண் செயற்கைகோள்களை பல்வேறு சுற்றுப்பாதையில் ஏவி சாதனை புரிந்துள் ளது. உலகில் மற்றொமொரு நம்பிக்கை யான ராக்கெட் என்ற பெயரை எடுத்துள் ளது. நான்கு கட்ட நிலை கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் நிலையானது, திட எரிபொருள் கொண்டு இயங்குகிறது. இரண்டாம் நிலை, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட விகாஸ் எஞ்சினால் திரவ எரிபொருள் கொண்டு இயங்குகிறது. மூன்றாவது நிலை மறுபடியும் திட எரிபொருள். பொதுவாகவே, விண்வெளியில் இயங் கும் நான்காவது நிலை திரவ எரிபொருள்.

மற்ற உயர் திறன் கொண்ட ராக்கெட் கள், 4 அல்லது 5 டன் சுமையை 45,000 கிமீ உயரத்துக்கு எடுத்து செல்ல வல்லவை. ஆனால், 600 கிமீ உயர தாழ் விண்வெளி பாதைக்கு சுமார் 3,800 கிலோ சுமையையும் பூமியிலிருந்து சுமார் 45,000 கிமீ உயரத்தில் உள்ள புவி நிலைப்பு சுற்றுப்பாதைக்கு 1,200 கிலோ பொதியும் தான் ஏந்தி செல்ல முடியும்.

ஆயினும், தற்போது பெருகி வரும் நானோ மற்றும் நுண் செயற்கை கோள்களை தாழ் விண்வெளி பாதை யில் செலுத்த நம்பகமான மற்றும் செலவு குறைந்த வாய்ப்பாக பிஎஸ்எல்வி ராக்கெட்டை உலகம் பார்க்கிறது.

மின்னணு கருவிகள் வெகுவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 20, 30 ஆண்டுகள் பழைய செயற்கைகோளை இயக்கினால் அதில் உள்ள மின்னணுக் கருவிகள் பழமை அடைந்துவிடும். எனவே, வெறும் 4 அல்லது 5 ஆண்டுகள் பயன்படும் வகையில் தாழ் உயரத்தில் சிறு அல்லது நுண் செயற்கைகோள்களை அனுப்புவதில் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த விண்வெளி சந்தையில், நம்பகமும் விலைமலிவும் கொண்ட பிஎஸ்எல்வி அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x