

‘புடவையும், சட்டைத் துணியும், அடுக்குப் பாத்திரமும், குடையும், இங்க் பாட்டிலும், கொண்டை ஊசியும், கடிகாரமும், ரூல்தடியும், பேனாகத்தியும், சாமி படமும், குண்டூசி டப்பாவும் என்று உலகில் படைக்கப்பட்ட சகலவிதமான பொருட்களையும் மணியை அடித்து அடித்துக் கொடுக்க, கண்ணாடிக்காரரும், நீலச்சட்டைக்காரரும், கழுத்தில் மப்ளர் சுற்றி இருக்கிறவரும், வலது கோடியில் உசரமாக நிற்கிற அண்ணாச்சியும் வாங்கிக்கொண்டு கூட்டத்தில் கலக்க, ராத்திரி பத்து மணியானதே தெரியாது.’
இது 50 வருடம் முன்பு தமிழகச் சிற்றூர்களுக்கு வந்த ஏலக்கடைகள் பற்றிய சிறுகதை வர்ணனை. சாதுரியமாக விலை கேட்டுப் பொருள் வாங்குகிற மகிழ்ச்சியையும், ஏலம் கேட்க நிற்கிற இரவுகளில் சந்தோஷமாகப் பொழுதுபோக்க வாய்ப்பையும் கொடுத்தவை இந்தக் கடைகள்.
ஏலம் எங்கே பிறந்தது? பழையதைக் கிளறினால், 2,500 வருடங்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள் பெண்களை ஏலத்தில் எடுத்தெல்லாம் கல்யாணம் செய்துகொண்டார்கள். கி.பி. இரண்டாம் நூற் றாண்டில், ரோம சாம்ராஜ்யத்தையே கூவிக்கூவி ஏலம் போட்டார்களாம். போரில் வென்று எதிரி நாட்டிலிருந்து கவர்ந்து வந்த சொத்துகளை மொத்தமாகக் குவித்து வைத்து ஏலம் போட்டும் ஐரோப்பியர்கள் காசு பார்த்திருக்கிறார்கள். ஆசியா வில் ஏலம் நுழைந்தது 200 ஆண்டுகளுக்கு முன்புதான்.
லண்டன் சாத்பீஸ் போன்ற பழம்பெருமை வாய்ந்த ஏல நிறுவனங்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இயங்க, இந்தத் தொழிலில் புரளும் பணமும் வரும் வருமானமும் முக்கியக் காரணம். பழைய புத்தகம், ஓவியம், நகை, இயந்திரம் என்று சகலமானதும் விற்கப்படும் உலக ஏலத்தொகை மதிப்பு, ஆண்டுக்குக் கிட்டத் தட்ட 300 பில்லியன் டாலர். ஒரு டாலருக்குக் குத்துமதிப்பாக 60 ரூபாய் வீதத்தில் மாற்றிப் பார்த்துக்கொள்ளலாம்.
பூக்களின் ஏலம்
நெதர்லாந்தில் பெரிய அளவில் பூக்களை விற்க டச்சு ஏலம்தான் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பூ ஏலம் இது. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ள ஆல்ஸ்மீரில் 243 ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்டமான பூச்சந்தையில், தினசரி சூரிய உதயத்துக்கு முன் இந்த ஏலம் நடைபெறுகிறது. உலகின் மொத்தக் குத்தகை பூ வணிகர்கள் பங்கு பெறும் ஏலம் இது. தினசரி ரூபாய் மதிப்பில் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் எடுத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் இவர்கள். ஆல்ஸ்மீர் தவிர, நெதர்லாந்தில் இன்னும் ஐந்து இடங்களிலும் சிறிய அளவில் பூ ஏலம் நிகழ்கிறது.
பறித்த 24 மணி நேரத்துக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரை அடைந்து, தினசரி 3 கோடி மலர்கள் ஏலம் கேட்கப்படுகின்றன. அன்னையர் தினம், காதலர் தினம் போன்ற நாட்களை ஒட்டி விற்பனை அதிகரிக்கிறது. 8 பில்லியன் டாலர் விலை மதிப்பில் வருடந்தோறும் ஆம்ஸ்டர்டாமில் பூக்கள் விற்பனையாகின்றன.
மலர் உற்பத்தியாளர்கள் 6,000 பேர் இணைந்து எழுப்பி நிர்வகிப்பது ஆல்ஸ்மீர் பூச்சந்தை. அங்கே, மாபெரும் திரையரங்குகள்போல் வரிசையாக இருக்கைகள் அமைந்த மலர் ஏல மண்டபங்கள் உண்டு. அவற்றில், ஏலம் கேட்க வந்த, விற்க வந்த வணிகர்கள் சாரிசாரியாக அமர்கிறார்கள்.
எகிறும் ஏலம்
பூ ஏல அமைப்பை இயக்கும் மென்பொருள், இவர்கள் ஒவ்வொருவர் முன்னும் ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, ஜெர்மன் என நான்கு மொழிகளில் தொடுதிரையில் விரிகிறது. ஒவ்வொரு குவியல் ஏலத்தின்போதும் என்ன மலர், அளவு எவ்வளவு, அதிகபட்ச விலை ஆகியவை திரையில் பளிச்சிட, திரையில் விலை விரைவாகவும், படிப்படியாகவும் குறைத்துப் போடப்படுகிறது. திரையில் தொட்டு, தொகையை வியாபாரி அறிவிக்க, நகரும் கடிகார முள் போன்ற வடிவில் ஒவ்வொரு வினாடியும் மாறும் விலை விவரம் திரையில் சுழன்று காட்சி அளிக்கும். பூ வாங்க, விற்க என இரண்டு காரியங்களையும் அடுத்தடுத்து டெர்மினல்களில் வேகமாக நடத்துகிற பல வணிகர்களும் இங்கே உண்டு. வாங்க வேண்டியதைத் தவறுதலாக விற்றும், விற்க வேண்டியதை வாங்கியும் ஏலத்தை நடத்திவிட்டால் அதை மாற்ற முடியாது என்பதால், ஆம்ஸ்டர்டாம் பூ வியாபாரம் செய்ய அனுபவமும் மேலதிகக் கவனமும் தேவைப்படுகிறது.
டூலீப் மலர்கள் அவை மலரும் காலத்தில் மிக அதிக விலைக்கு இந்த ஏலத்தில் விற்கப்படுவது உண்டு. ஒரு டூலீப் பூக்குமிழ் லட்ச ரூபாய் மதிப்புக்கு விலைபோன காலங்களும் இருந்தன. இந்தப் பூக்கள் தவிர, பூச்செண்டுகள், மலர் வளையங்களில் இடம்பெறும் இதர மலர்களும், மலர்ச் செடிகளும் ஏலம் கேட்கப்படுகின்றன. சில நொடிகளில் விலை படிந்து டன் கணக்கில் விமானங்களில் ஏற்றப்படுகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கென்யா என்று பல நாடு களையும் விரைவாக அடைந்து, மொத்த, சில்லறை விற்பனைக்கு வருகின்றன.
இணையத்தில் தொலைதூர வணிகம் மூலம் உலகில் எங்கேயிருந்தும் வியாபாரிகள் இந்தப் பூ ஏலத்தில் பங்கு பெறலாம் என்ற வசதி இருந்தாலும், நேரடியாகப் பூச்சந்தைக்குப் போய் ஏலம் கேட்பதையே, பூ விற்றுக் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். 375-ம் பிறந்தநாள் கொண்டாடிய சென்னையில் பூ வணிகத்தைக் கணினிமயமாக்கினாலும், கோயம் பேட்டுக்குப் போய்க் கொள்முதல் செய்யும் மகிழ்ச்சி கிடைக்காதுதான்.
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: eramurukan@gmail.com