2 மினிட்ஸ் ஒன்லி 20: உள்ளத்தில் உள்ளதுதான் உலகம் கண்ணா!

2 மினிட்ஸ் ஒன்லி 20: உள்ளத்தில் உள்ளதுதான் உலகம் கண்ணா!
Updated on
2 min read

வார இறுதி நாட்களில் ஒருநாள் எனது நண்பர் ஒருவரின்  வீட்டுக்குப் போனேன். அவருக்கு இரண்டு பசங்க. என்னோட பசங்க வயசுதான் அவங்களும் இருந்தாங்க. ஆறு   வயதில் ஒரு பையன்.  மூணு வயது மதிக்கத்தக்க ஒரு பொண்ணு. அவங்க இரண்டு பேரும் வீட்டுல விளையாடிட்டிருந்தாங்க. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குடும்பத்தோடு வெளியில போகலாம்னு இருந்தவங்க, நான் அப்போ போனதால என்னையும் அழைத்

தாங்க. எல்லோருமா சேர்ந்து  வெளியே புறப்பட்டோம். அந்த நேரத்தில் நடந்த ஒரு ஆச்சர்யமான நிகழ்வுதான் இதை உடனே எழுதணும்னு என்னைத் தூண்டியது.

நாம் எல்லோரும்  சின்ன  வயதில்  இருக்கும்போது  குழந்தைங்களிடம்,  கடைக்குப்போய்வீட்டுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை வாங்கிட்டு வான்னு வீட்டுல கடைக்கு அனுப்பினால், அதில்  ஒரு ரூவா கமிஷன்  அடிப்போம்.  சமயங்கள்ல 10 ரூபாகொடுத்தனுப்பினால் அதில் எட்டணாவை எடுத்து சாக்லேட் வாங்கிப்போம்.  இதெல்லாமே 70-களில் 80-களில் பிறந்து வளர்ந்தவர்கள்  பள்ளிப் பருவத்தில்  செய்தது.  அதுவே, 90-களுக்குப் பிறகான அடுத்த தலைமுறை சிறுவர்களோட குடும்பம் மிடில் கிளாஸ் வசதி கொண்டவர்களாக இருந்தால்  அவர்களது அம்மா,  அப்பா பாக்கெட் மணி என்ற பெயரில் மாதத்தில் நூறோ, இருநூறு ரூபாயோ  கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

கடந்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு முன்பு பிறந்து, இப்போது பள்ளிப் பருவத்தில் இருக்கும் குழந்தைகளோட  பெற்றோர் பலரும், ‘குழந்தைகள் எப்படி வளர்க்க வேண்டும்?’ என்ற புத்தகம் எல்லாம் வாங்கிப் படிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்குற பாக்கெட் மணி என்பதையும் கடந்து, குழந்தை ஒரு நல்ல விஷயம் செய்தால் உடனே அதை பாராட்டும் விதமாக ஒரு கிஃப்ட் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் ‘யூ ஷுட் ஏர்ன் இட்’ என்று குழந்தைகளைப் பார்த்து சில பேரண்ட்ஸ் சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து இப்போது நிறைய அப்பா, அம்மாக்கள் குழந்தைகள் நன்றாக படித்து பர்ஸ்ட் ரேங் வாங்கினால் ஒரு கிஃப்ட், வெளியில் நல்ல பையன் என்று பாராட்டை பெற்றால் ஒரு கிஃப்ட் என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும் நாம நல்லது செய்தால் ஒரு கிஃப்ட் கிடைக்கும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.

நான் முன்பு சொன்னதுமாதிரி என்னோட  நண்பர் வீட்டுக்குப் போனப்போது நடந்த விஷயமே வேறு. வெளியில் புறப்படலாம் என்று கிளம்பியபோது முதலில் ஒரு ஷாப்பிங் கடைக்கு சென்றோம். அங்கே சென்றதும்  நண்பரின் மகன் தனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கிஃப்ட் வாங்கி, தன்னோட தங்கை கையில கொடுத்தான். ‘ஏன் இப்படி செய்கிறான்?’னு கேட்ட எனக்கு  அப்போதுதான் ஆச்சர்யம் காத்திருந்தது.

அந்த பையன் இரண்டு வாரங்கள் மெனக்கட்டு அழகான ஒரு ஓவியம் வரைந்திருக்கிறான். அந்த ஓவியத்தை என்னிடமும் காட்டினாங்க. ரொம்ப பிரமாதமாக இருந்தது. அந்த ஓவியத்துக்காக வாங்கின கிஃப்ட்தான் அந்த பொம்மை. அதை அப்படியே அவன் தங்கை கையில் கொடுத்தான்.  அப்போ அந்த அப்பா, அம்மா இருவரும் சிரித்துக்கொண்டே,  ‘எங்க வீட்டு குழந்தைங்க இரண்டு பேரும் பாராட்டுற மாதிரி எந்த ஒரு விஷயம் செய்தாலும் உடனே அவங்க கையால இன்னொரு குழந்தைக்கு ஒரு கிஃப்ட் வாங்கிக் கொடுப்பாங்க. இதைப் பழக்கமாக்கி வைத்திருக்கோம். இப்போ பையன் பெரியவன் நல்லா ஓவியம் வரைந்து பாராட்டை வாங்கினதால சின்னவளுக்கு கிஃப்ட் கொடுத்திருக்கான்!’’ என்றனர். இதை அவங்க கடந்த நான்கு வருஷங்களாக செய்து வர்றதாவும் சொன்னாங்க.  அதே மாதிரி அந்த வீட்டுல வேலை பார்க்குற அக்காவோட குழந்தைக்கும் புதிய கிரிக்கெட் பேட் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க.

முக்கியமா  இதில்  இரண்டு விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன்.  அதில் ஒண்ணு. அடுத்தவர்களுக்கு கொடுக்குற ஒரு பொருள் பழைய பொருளாக இல்லாமல் தனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு பொருளைத்  தேர்வு செய்து,  அதை மற்றவர்களுக்கு கொடுக்கிற சந்தோஷம். இதன் வழியே அந்தப் பொருள் இரண்டாம் தரமாக இல்லாமல் புதிய பொருளாக கொடுக்கிறோம் என்ற மனப்பக்குவம் குழந்தைகளுக்கு வருகிறது.

இரண்டாவதாக,  ஒரு பொருள் வாழ்க்கையில் முக்கியமல்ல. அதை இன்னொருவருக்கு வாங்கிக் கொடுப்பதன் வழியே அந்தப் பொருள் மீதான ஈர்ப்பு மற்றும் பற்று சின்ன வயதிலேயே இல்லாமல் செய்கிற ஒரு  பயிற்சி, பழக்கம். இந்த இரண்டு விஷயங்களையும் என்னோட  நண்பர்கள் வீட்டுல அவங்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்ததைப்  பார்த்து வியந்தேன்.

நமது  மொத்த வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும் என்பதன் புரிதல் ஏழு, எட்டு வயதுக்குள்ளயே மனதில் ஆழமாக பதிந்துவிடும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். ‘எப்படி அது?’ என அதைப் படிக்கும்போதும் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அப்படியானால் ஒரு பொருள் மீதான உண்டாகிற ஆசையை, ஈர்ப்பை குறைக்க இந்த மாதிரியான விஷயங்களை எல்லோருமே அவரவர் குழந்தைகள் மனதில் விதைக்கலாமே!

அடுத்த வாரம் இதேமாதிரி இன்னொரு  நேர்மறை (பாசிடிவ்)  நிகழ்வோடு  உங்கள சந்திக்க வருவேன்.

- நிமிடங்கள் ஓடும்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in