நாங்கள் 24 மணி நேரமும் தலித்துகளாக இருப்பதில்லை- அஜய் நவரியா பேட்டி

நாங்கள் 24 மணி நேரமும் தலித்துகளாக இருப்பதில்லை- அஜய் நவரியா பேட்டி

Published on

சமகால தலித் இலக்கியத்தில் மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒரு குரலாக சர்வதேச அளவில் அடையாளம் காணப்படும் ஆளுமை அஜய் நவரியா. புதுடெல்லியிலுள்ள ஜாமியாமில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியரான அஜய் நவரியா இந்தியில் ஒரு நாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இவரது ‘அன்கிலெய்ம்ட் டெரெய்ன்’ சிறுகதைத் தொகுப்பு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ஒன்று. சாதி சம்பந்தமான அஜய் நவரியாவின் கருத்துகள் இங்கு நிலவும் வழமையான கருத்துகளை உடைத்தெறிபவை.

உங்களுடைய கதைகளைக் குறித்து தலித் மக்கள் திருப்தி அடையவில்லை என்று சொல்வது சரியாக இருக்குமா?

1990-ல் மண்டல் கமிஷனின் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நான் ரத்த தானம் செய்தேன். என் சக தலித்துகள் இதில் மிகவும் அதிருப்தியடைந்தனர். இடஒதுக்கீடு என்பது வேறு பிரச்சினை. ஆனால், அதற்காக ஒரே ஒரு மாணவனின் இறப்பைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு விளக்கினேன். அவர்களும்கூட ரத்த தானம் செய்ய வேண்டும் என்றேன். என்னுடைய கதாபாத்திரங்கள் - அவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சரி; தலித்துகளாக இருந்தாலும் சரி - எப்போதும் யாரும் முழுக்க கறுப்பு அல்லது வெள்ளையாக இருப்பதில்லை. தலித்துகளில் ஒரு தரப்பினருக்கு என்னுடைய எழுத்து பிரச்சினையாக இருப்பதற்கு இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் கதைகளில் அவர்களுக்கு என்னதான் பிரச்சினை?

மார்க்ஸைக் கொண்டு அம்பேத்கரிய அரசியலை நான் மாசுபடுத்திவிட்டதாக என்னைப் பலரும் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், தற்போதோ அதே மக்கள் மார்க்ஸ் இல்லாமல் தங்கள் அரசியல் சாத்தியம் இல்லை என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். என்னைச் சுற்றியுள்ள சாதியத்தை நான் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையிலானதாக மட்டுமே இருக்கவில்லை; தலித்துகளுக்கும் தலித்துகளுக்கும் இடையிலானதாகவும்கூட இருக்கிறது. இதை என்னுடைய படைப்புகளில் நான் சுட்டிக்காட்டும்போது ஏராளமான வசைகளுக்கு உள்ளாகிறேன்.

உங்களுடைய பயணம் எப்படித் தொடங்கியது?

என்னுடைய முதல் சிறுகதையான ‘ஹோரா’ 1995-ல்வெளியானது. அது ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைப் பற்றிய கதை. 1997-ல் மேலும் இரண்டு சிறுகதைகளை வெளியிட்டேன். அவையும்கூட தலித் பிரச்சினை தொடர்பானதல்ல. பின்பு, முனைவர் பட்டப்படிப்புக்காக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோதுதான் தலித் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மோகன்தாஸ் நைமிஷ் ராயிலிருந்து ஆரம்பித்து ஓம்பிரகாஷ் வால்மீகி மற்றும் மராத்திய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தபோதுதான் ஒரு புதுப் பார்வையை என்னுள் வளர்த்தெடுத்துக்கொள்ள முடிந்தது. நானும் சாதியக் கொடுமைகளை அனுபவித்துள்ளேன் என்றாலும், அது குறித்து உணருமளவுக்கு அரசியல் விழிப்புணர்வு அற்றவனாக இருந்துள்ளேன் என்பதையும் அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்.

சாதியக் கொடுமையை அனுபவித்திருந்தும் அதை ஒரு தலித் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருக்க முடியும்?

நான் டெல்லியில் வளர்ந்தவன் என்பதால் கிராமப்புறங்களில் நடப்பது போன்ற சாதிக் கொடுமைகளை நான் அனுபவித்தது இல்லை. அது மட்டுமில்லாமல் தலித் குடும்பங்கள் வசிக்கும் பகுதியிலேயே நாங்களும் வசித்ததால் தீண்டாமை அனுபவங்கள் எதையும் நான் சந்திக்கவில்லை. வெளியே சென்றிருக்கும்போது சில அனுபவங்கள் கிடைத்தன. அதையும்கூட தாமதமாகவே உணரும் நிலையில் இருந்தேன்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு இருபது வயதிருக்கும்போது ஒரு திருமணத்துக்காக ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். திருமண ஊர்வலம் முன்னே செல்ல கடைசியில் சென்ற நான் தாகம் காரணமாக ஓரிடத்தில் நின்றுவிட்டேன். ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டேன். அங்கிருந்த பெண் உள்ளே சென்று ஒரு குவளையில் தண்ணீரோடு வெளியே வந்தார். ஆனால், குவளையை என்னிடம் தருவதற்கு முன், “நீ அந்த ஊர்வலத்தைச் சார்ந்தவனா?” என்று கேட்டார். நான், “ஆம்” என்று சொன்னவுடன் சட்டென்று அவர், “அப்படியென்றால், நான் உனக்குத் தண்ணீர் தர முடியாது” என்று சொல்லித் தண்ணீரைத் திரும்ப எடுத்துச்சென்றுவிட்டார். நான் குழம்பிப்போனேன். முன்னால் சென்ற என் நண்பர்களிடம், “என்ன ஒரு அருவருப்பான பெண் இவர்? நான் இந்த ஊர்வலத்தைச் சார்ந்தவன் என்பதால் குடிக்கத் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டார்” என்றேன். அப்போது என் நண்பர்கள், “அவர் ஒரு ராஜபுத்திரப் பெண்” என்றார்கள். அப்போதும்கூட அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு தலித் திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்ட நானும் தலித்தாக இருக்கலாம் என்ற சந்தேகமும் புரிதலும் அந்தப் பெண்ணுக்கு இருந்திருக்கிறது.

எழுதுவது என்றால் உங்களுக்கு எந்த வகையில் அர்த்தப்படுகிறது? அரசியல் இலக்கொன்றை அடைவதற்கானது மட்டும்தானா உங்கள் எழுத்து?

எல்லாவற்றுக்கும் மேலாக, கதை எழுதுவது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப் பொறுத்தவரை, எழுதுவது என்பது சமூகக் கடமையும்கூட; என்னுடைய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான கருவியாகவும் எழுத்தைப் பார்க்கிறேன்.

உங்களுடைய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள ‘நவீன வழக்கங்கள்’ எனும் சிறுகதை மிகவும் விவாதிக்கப்பட்ட ஒன்று. இந்தக் கருவை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்?

அது நிஜத்தில் நடந்த ஒன்று. சொல்லப்போனால், இரண்டு முறை அந்தச் சம்பவம் நடந்தது. முதல் முறை என் அப்பாவுக்கு நடந்தது. ஒருமுறை ராஜஸ்தானின் சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்குச் சென்றார். அவர் டீ குடித்த பின் கடைக்காரர் அங்குள்ள வழக்கப்படி டீக்குவளையைக் கழுவிவைக்கச் சொல்லியிருக்கிறார். என் அப்பா, “நான் டெல்லியைச் சார்ந்தவன். இந்த வழக்கத்தைப் பின்பற்றுபவன் அல்ல” என்று சொல்லியிருக்கிறார். டீக்கடைக்காரர், “நீ டெல்லியிலிருந்து வந்தாலும் அல்லது வேறெங்குமிருந்து வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நீ டீக்குவளையைக் கழுவிவைக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். என் தந்தை டீக்குவளையின் விலையைக் கேட்டு அதைத் தரையில் ஓங்கி விட்டெறிகிறார். தன்னோடு வந்த ஐந்து பேரின் டீக்குவளைகளையும் அதுபோல் உடைக்கச் சொல்கிறார். கடைக்காரரிடம் குவளைகளுக்கும் டீக்கும் உண்டான பணத்தை அளித்துவிட்டு, ‘நாங்கள் நாளையும் டீ குடிக்க வருவோம்; கோப்பைகளைக் கழுவச்சொன்னால், நாளையும் ஐந்து குவளைகளை உடைப்போம்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

இதே கூத்து எனக்கும் இருபது வருஷங்களுக்குப் பின் நடந்தது. ராஜஸ்தான் சென்றிருந்தேன். ஒரு டீக்கடைக்காரர் என்னையும் டீக்குவளையைக் கழுவச்சொன்னார். நானும் டீக்குவளையை உடைத்து அதற்குண்டான பணத்தையும் செலுத்தினேன். இதை என் அப்பாவிடம் கூறியபோதுதான் பல ஆண்டுகளுக்கு முன் அவரும் இதேபோல் செய்தது எனக்குத் தெரியவந்தது. இன்றும்கூட ராஜஸ்தான் கிராமங்களில் இது போன்ற தீண்டாமை சர்வ சாதாரணம்.

நீங்கள் ராஜஸ்தானைச் சார்ந்தவரா?

ஆம். ஜெய்ப்பூருக்கு அருகில், தெளஸா ஜில்லாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்தவன். என் தாத்தா ஒரு தோட்டத் தொழிலாளி. என் அப்பாவும் தினக்கூலிதான். பிறகு, அவருக்கு டெல்லியில் தபால்காரராக வேலை கிடைத்தது. அதிகாலையில் தோட்ட வேலை, பின்பு தபால் வேலை, பின் மாலையில் மீண்டும் தோட்ட வேலை என்று நள்ளிரவு வரை வேலைபார்த்துவிட்டு வருவார்.

உண்மையிலேயே ‘தலித் இலக்கியம்’ எனும் வகைமை அவசியம்தானா? வெறும் இலக்கியமாக மட்டுமே அது இருக்க முடியாதா?

தலித் இலக்கியம் எனும் வகைமை ஏற்படுவதற்கு முன் மைய நீரோட்ட இலக்கியங்கள் எதுவும் சாதியத்தைக் கருப்பொருளாகவோ அல்லது சாதியத்தை உற்றுநோக்கியவர்களை உள்ளடக்கியதாகவோ இல்லை. எனவே, பெரும்பான்மையான தலித்திய எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை இணைத்த ஒரு இயக்கத்தை வேறு வழியின்றி தொடங்க வேண்டியிருந்தது. இப்படித்தான் மகாராட்டிரத்தில் ‘தலித் பேந்தர்ஸ்’ இயக்கத்தினரின் எழுத்துகள் ஒரு தீப்பொறியாகக் கிளம்பியது. இது கொண்டுள்ள கருத்து மிக எளிமையானது. தலித் எழுத்தாளர்கள், மைய இலக்கிய உலகில் ஆதிக்க சாதியினரின், சாதிய மேலாண்மையை உடைக்க வேண்டும். அவர்கள் கூறுவது என்னவெனில், உங்களின் அதிகாரக் கட்டமைப்பினுள் எங்களை அனுமதிக்காவிடில் நாங்கள் எங்களுக்கான ஒரு இணை அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வோம் என்பதேயாகும்.

எந்த அரசியல் கட்சி மீது உங்களுக்கு அபிமானம் அதிகம்?

இந்திய அரசியலைச் சந்தர்ப்பவாதம்தான் இன்று தீர்மானிக்கிறது. ஆகவே, நாம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்தால் அந்த அரசியல் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்போதெல்லாம் நாமும் நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். ஆகவே, அரசியல் கட்சிகளிலிருந்து நான் விலகியே நிற்கிறேன். எனக்கு ஏதாவது அரசியல் பிணைப்பு இருக்குமென்றால், முதன்மையாக நான் ஒரு அம்பேத்கரியன் என்றும் அடுத்ததாக மார்க்ஸியன் என்றும் என்னைப் பற்றிக் கூறலாம். இந்த இருவரையும் இணைக்கும் அரசியல் கட்சி ஏதும் இருக்குமென்றால் அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு.

பீம் ஆர்மியின் எழுச்சி குறித்து நீங்கள் உற்சாகம் அடைகிறீர்களா?

இந்தக் குறுகிய காலத்துக்குள் அவர்களைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. பொதுவாகச் சொல்வதென்றால் ஒரு அமைப்பு ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டுமே குரல் கொடுக்குமென்றால் அவர்கள் எவ்விதத்தில் பிராமணர்களின் சாதியத்திலிருந்து வேறுபட்டவர்களாக இருக்க முடியும்? ஒரு குழுமம் சமர் சாதியின் பெருமையைப் பேசுகிறது. இன்னொரு குழுமம் வால்மீகி சாதியின் பெருமையைப் பேசுகிறது. வேறு ஒன்று யாதவ சாதியின் பெருமையைப் பேசுகிறது. இவர்கள் அனைவரும் பிராமணியத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கருதிக்கொள்கிறார்கள். ஆனால், தலித் சமூகத்திலேயே எண்ணிக்கை பலம் இல்லாத சாதிகள் என்ன செய்ய முடியும்? நம்முடைய ஜனநாயகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை அவர்கள் பெற முடியுமா? இந்தப் பொறியில் சிக்கிவிடாமல் இருப்பதுதான் சாதிய அமைப்புக்கு எதிராகப் போராடும் எல்லா தலித்துகளுக்குமான பொறுப்பாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.

உங்கள் படைப்புகளில் உள்ள தலித் பாத்திரங்கள் எல்லா சூழல்களிலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகுவதில்லை என்பதைக் காணும்போது எனக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது…

எல்லா சூழல்களிலும் தங்கள் தலித் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நான் பலரிடம் காண்கிறேன். ஒருவேளை அவர்கள் அதன் மூலம் ஏதோ ஒருவிதத்தில் சில லாபங்களை அடைய நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. உதாரணத்துக்கு, டாட்டூ குத்திக்கொள்வதில்கூட சாதி அடையாளம் வெளிப்படுகிறது. உடற்பயிற்சிக்கூடத்தில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்த தேவை என்ன? ஏன் தலித்துகளால் இயல்பாக வாழ முடியாமல் போகிறது? நாங்கள் 24 மணி நேரமும் தலித்துகளாக இருப்பதில்லையே?

ஆனால், தலித்துகள் அடையாளம் என்பது தேவைக்கேற்றாற்போல் அணிந்துகொள்வது அல்லது கழற்றிக்கொள்வது என்பதுபோல் இருக்க முடியுமா?

நான் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருக்கிறேன் என்றால், நான் நானாக ஒரு தோட்டத்தில் அமர்ந்திருக்கிறேன். நான் அங்கு ஒரு தலித்தாக அமர்ந்திருக்கவில்லை. யாரேனும் ஒருவர் என்னுடைய சாதியை நான் உணரும்படியாகவோ அல்லது என்னைத் தாழ்வுணர்ச்சியில் வீழ்த்தும்போதோதான் தலித் அடையாளம் என்பது என் முன் வந்து நிற்கிறது. அப்போதுதான் என்னை ஒரு தலித்தாக உணர்கிறேன். எல்லா நேரங்களிலும் நாங்கள் தலித்துகளாக இருப்பதில்லை. இப்போது நீங்கள் என் செல்பேசியை இங்கிருந்து எடுத்து அந்தப் பக்கத்தில் வைக்கிறீர்கள் என்றால், ‘ஐயோ நான் ஒரு தலித் என்பதால் இவர் என் செல்பேசியை எடுத்து அந்தப் பக்கம் வைத்துவிட்டார்’ என்று நான் அலற முடியுமா? நீங்கள் எந்தக் குறிப்பிட்ட காரணமுமின்றி அதை எடுத்து அந்தப் பக்கம் வைத்திருக்கலாம்! அதற்கான சாத்தியமும் இருக்கிறதுதானே? தலித்துகளுக்கு நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களுக்கும் நாம் சாதிய அடையாளத்தோடு அதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது சாதிய அடிப்படையிலான அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்பதேயாகும்.

இறுதியாக, ஒவ்வொரு தலித் சிந்தனையாளர்களிடமும் தவறாமல் கேட்கப்படும் கேள்விதான். இடஒதுக்கீடு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

ஒரு நிறுவனத்தில் பட்டியலினத்தாரும் ஏனையோரும் இன்று தத்தமது சாதி அடையாளத்தை மறைத்துக்கொள்ளாமலே அமர்ந்திருக்கிறார்கள் என்றால், அது இடஒதுக்கீட்டினால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இன்று அஜய் நவரியா இந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான் எனில், அவன் சாதி அடையாளத்தோடுதான் அமர்ந்திருக்கிறான். ஒரு தனியார் நிறுவனமாக இருக்குமெனில் அவன் ஒரு பிராமணனாகவோ, பனியாவாகவோ, கயாஸ்தாகவோ தன்னை மறைத்துக்கொண்டு - ஆனால், தன்னுடைய உண்மையான சாதி அடையாளம் வெளிப்பட்டுவிடுமோ என்ற ஓயாத அச்சத்துடன் இருக்க வேண்டியிருக்கும்.

நான் உங்களுக்கு ஒரு குட்டிக்கதையைச் சொல்லுகிறேன். நல்ல வசதி படைத்த அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய வீட்டில் விருந்து ஒன்றை நடத்தினார். விருந்துக்கு வறுத்த இளம் ஆட்டிறைச்சியை ஓர் உணவகத்திலிருந்துத் தருவித்திருந்தார். அனைவரும் அந்த வறுவலை நன்கு ருசித்து சாப்பிட்டனர். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு உணவகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏகப்பட்ட முறை மன்னிப்புக் கேட்ட உணவகத்தார், “நாங்கள் ஒரு தவறைச் செய்துவிட்டோம். நீங்கள் கேட்டிருந்த வறுத்த ஆட்டிறைச்சிக்குப் பதிலாக தவறுதலாக வறுத்த நாய்க்கறியை அனுப்பிவிட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றனர். விருந்தளித்தவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பின்பு, அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் அதைச் சொல்ல, அவர்கள் அனைவரும் அப்போதே வாந்தியெடுத்தனர். முந்தைய பந்தியில் சாப்பிட்டுச் சென்றவர்கள் கிளம்பிவிட்டிருந்தார்கள். அவர்கள் வீட்டைச் சென்றடைந்ததும் இந்தத் தகவல் அவர்களை வந்தடைகிறது. இப்போது அவர்களும் வாந்தி எடுக்கின்றனர் - அதாவது சாப்பிட்டுச் சில மணி நேரம் கழித்த பிறகு. இன்னும் சில விருந்தினர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவர்களுக்கு இந்தச் செய்தி செல்கிறது. அவர்களும் வாந்தி எடுக்கின்றனர் - அதாவது இரண்டு நாட்களுப் பிறகு.

சாதியும் இதைப் போன்றுதான். நீங்கள் எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும் எவ்வளவு காலத்துக்குச் செயல்பட்டாலும் நீங்கள் ஒரு தீண்டப்படாத சாதியினர் என்பதை மக்கள் அறியும் அந்தத் தருணத்திலேயே அவர்கள் உங்களை உடனடியாக உதாசீனப்படுத்துகிறார்கள். நிராகரிக்கிறார்கள். ஆகவேதான் எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையாக இருக்கிறது!

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ப.பத்மினி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in