நம் பிள்ளைகள் சோனியாக இருப்பது தேசிய அவமானம் இல்லையா?

நம் பிள்ளைகள் சோனியாக இருப்பது
தேசிய அவமானம் இல்லையா?
Updated on
2 min read

உலகப் பட்டினி அட்டவணையில் இடம்பெற்றுள்ள 119 நாடுகளில், 103-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நம் நாட்டில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நம் நாட்டுப் பட்டினியை ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் தலைநகரமான டெல்லியில் சாப்பிட உணவே கிடைக்காமல் பசியாலேயே 3 சிறுமிகள் ஜூலை மாதம் இறந்தனர். நாட்டிலேயே நபர்வாரி வருவாய் அதிகமுள்ள நகரம் டெல்லி. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஊட்டச்சத்துக் குறைவால் ரத்தசோகை, உடல் வளர்ச்சிக் குறைவு, வயதுக்கேற்ற எடை, உயரம் இல்லாமை என்று இந்தியச் சிறார்கள் இருப்பது உலகிலேயே இந்தியாவில்தான் இப்போது அதிகம். ‘தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு-2016’ தரும் தகவல்கள் அதிர்ச்சிதருவன. ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதோரின் சராசரி உலக அளவில் 22.9%. ஆனால், இந்தியாவில் 38.4%. வயதுக்கேற்ற எடை இல்லாத சராசரி உலக அளவில் 13.5%, ஆனால், இந்தியாவில் 35.7%. இந்தியாவில் தங்களுடைய வயதுக்கேற்ற உயரம் இல்லாத குழந்தைகள் 5.33 கோடி, எடையில்லாத குழந்தைகள் 4.96 கோடி, உயரத்துக்கேற்ற எடை இல்லாத சோனி குழந்தைகள் 2.92 கோடி.

தலைகீழ் வளர்ச்சி

நாடும் மாநிலங்களும் வளம் அடைந்தாலும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு நிலை பெரும்பாலும் மாறவேயில்லை. பொருளாதாரம் வேகமாக வளர்ந்தும் வருவாய் பெருகியும் மனித வளம் ஆரோக்கியமாக இல்லையென்றால் அதனால் அரசுக்குத்தான் இழப்பு. லட்சக்கணக்கான குழந்தைகள் நோஞ்சானாகவும் நோய்க்கு ஆளாகுபவர்களாகவும் இருந்தால் அவர்களால் நன்கு படிக்கவோ, முழு உற்பத்தித் திறனை வெளிப்படுத்தவோ முடியாது. இது நாட்டின் வளர்ச்சியிலும் எதிர்காலத்தில் எதிரொலிக்கும்.

வளர்ச்சி சார்ந்த முன்னேற்றம் தொடர்பான நடப்பு சிந்தனைதான் பிரச்சினைகளுக்குக் காரணம். ‘குறைந்த வருவாயுள்ள-அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களைக் கொண்டுள்ள மாநிலங்கள்’தான் (இஏஜி) ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகப்படுத்துவதில் பொதுவாக சவால்களைச் சந்தித்துவருகின்றன. ஆனால் சத்தீஸ்கர், ஒடிஷா போன்ற பின்தங்கிய மாநிலங்கள், நபர்வாரி வருவாயில் தங்களைப் போல இரண்டு மடங்குள்ள குஜராத், மகாராஷ்டிரத்தைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தொழில் முதலீடு ஆகியவற்றில் அக்கறை காட்டும் குஜராத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகப்படுத்த அவர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெற்றியை எட்ட முடியவில்லை. குஜராத்துடன் ஒப்பிடும்போது வருவாய் குறைந்த ஒடிஷா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் (ஐசிடிஎஸ்) மூலம் சாதனை படைத்துள்ளது.

பொது சுகாதார வசதியை அளித்தும், ஒரு லட்சம் பேருக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்களை நியமித்தும், மகளிரின் கல்வியறிவை மேம்படுத்தியும் இதைச் சாதித்துள்ளது. பழங்குடிகள், கிராமப்புறத்தவர், ஏழைகள், கல்வியறிவே இல்லாதவர்களின் குழந்தைகள் ஹரியாணா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் மிக மோசமாகவே இருக்கின்றனர். இப்பிரிவுக் குழந்தைகள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் இப்படித்தான் சத்துக் குறைவாக இருக்கின்றனர். இந்தியாவின் வளர்ந்த, வளரும் மாநிலங்களின் 200 மாவட்டங்களில் இப்படி உயரம் குறைந்த, எடை குறைந்த, சோனியான குழந்தைகள் அதிகம் இருக்கின்றனர்.

வேளாண்மையுடன் ஊட்டச்சத்தை இணைப்பது அவசியம். ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சினைகளுக்கு வேளாண்மைதான் பதில் அளிக்க முடியும். ஹரியாணா போன்ற வேளாண் உபரி மாநிலத்தில் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பது முரண் நகை. ஹரியாணாவில்தான் குழந்தைகளில் 34% உயரம் குறைவாகவும் 29.5% எடை குறைவாகவும் உள்ளனர். கர்னால், பானிப்பட், சோனிப்பட், ரோடக், குருகிராம் ஆகிய வேளாண்மையில் முன்னேறிய மாவட்டங்களில் இது ஒடிஷாவைவிட அதிகம்!

வேளாண் வளர்ச்சியில் மத்திய பிரதேசம் சமீபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி இந்தியாவின் உணவுக் களஞ்சியமாகியிருக்கிறது. ஆனால், ஊட்டச்சத்துக் குறைவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அந்த மாநிலத்தில்தான் அதிகமாக இருக்கிறது. வயதுக்கேற்ற எடையில்லாதவர்கள் 42.8%, உயரமில்லாதவர்கள் 41.9%.

வேளாண்மையில் வளர்ச்சி இருந்தும் குழந்தைகள் ஏன் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் உண்ணும் உணவு சரிவிகித உணவாகவும் வெவ்வேறு வகை சத்துகளைக் கொண்டதாகவும் இல்லை. கீரை, காய்கறி, பழங்கள், நவதானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கோதுமையுடன் கலந்து உண்ணும்போது குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை வெகுவாகக் குறைகிறது. 640 மாவட்டங்களில், 19 விதமான உணவுப் பண்டங்களைக் கலந்து உண்ணும் குழந்தைகளை ஆய்வுசெய்தபோது வயதுக்கேற்ற எடை, உயரம் இல்லாத குறைகள் கணிசமாகக் குறைந்தன. அந்தப் பகுதிகளில் 12% குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். வெறும் 3 உணவுப் பண்டங்களை மட்டுமே உண்பவர்களில் 50% பேர் குறைவான வளர்ச்சியுடையவர்களாக இருந்தனர்.

தமிழ்நாட்டின் சிறப்பு

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலுமே சத்துணவு வழங்கப்படுகிறது. இதனால், மிகக் குறைவான குழந்தைகள்தான் வயதுக்கேற்ற உயரம், எடை, வலிமை இல்லாமல் இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் நல்ல உயரம், எடை ஆகியவற்றுடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

ஊட்டச்சத்து மிக்க, சரிவிகித உணவு அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும். விலையைக் குறைக்க மானியங்களை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து வளர்ச்சித் திட்டம் நல்லதொரு கருவி. ஆனால், அதன் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் குழந்தை களுக்கு ஒரே மாதிரியான உணவு தரப்படாமல், வெவ்வேறு வகை ஊட்டச்சத்து உணவு தொடர்ந்து தரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குதல் சிறந்த பலன் அளிக்கும்!

- கட்டுரையாளர்கள் தொழில் வளர்ச்சிக்கான ஆய்வுக் கழகத்தின் இணைப் பேராசிரியர், ஆய்வாளர்.

© ‘தி இந்து’, சுருக்கமாக தமிழில்: சாரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in