Last Updated : 28 Nov, 2018 10:44 AM

 

Published : 28 Nov 2018 10:44 AM
Last Updated : 28 Nov 2018 10:44 AM

ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்

வேதியியலும் சட்டமும் பயின்று இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், தமிழ்க் கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியும் என்பதை எவராலும் நம்ப முடியாது. அத்தகைய நம்ப முடியாத அதிசய மனிதர்தான் ஐராவதம் மகாதேவன். அவருக்குள் கல்வெட்டு குறித்த ஆர்வத்தைத் தூண்டிவிட்ட கலை வரலாற்று அறிஞர் சி.சிவராமமூர்த்திக்கும், அவரைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வை நோக்கி ஆற்றுப்படுத்திய கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய அய்யர் ஆகியோருக்கும் தமிழ் ஆய்வுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

சங்க காலம் என நாம் இப்போது பெருமைப் பட்டுக்கொள்கிற காலத்தை உறுதிசெய்ய இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியப் பிரதிகளுக்கு அப்பால் போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட வரலாறு குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபட எதையும் கூற முடியாத நிலை. அத்தகைய சூழலில், கல்வெட்டுத் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர். 1924-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் வாசித்தளித்த கட்டுரையில்தான் முதன்முதலாகத் தமிழ்நாட்டின் இயற்கையான குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்றார்.

அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியா விலிருந்து வந்த பௌத்த துறவிகளால் பிராமியிலும், பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை, அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் வரலாற்றாசிரியர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். அதை மறுத்து, குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்ற எழுத்துகள் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும், தமிழ் இலக்கணம் இருப்பதையும் சுட்டிக்காட்டி முதன்முதலாக நிரூபித்தார். அவரது கருத்து அறிஞர்களிடையே உடனடித் தாக்கம் எதையும் நிகழ்த்தவில்லை.

அடுத்து தி.நா.சுப்பிரமணியம் 1938-ல் வெளியிட்ட ‘பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகள்’ என்ற நூலில் ஆந்திர மாநிலம், பட்டிப்புரோலுவில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளோடு ஒப்பிட்டுத் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஒரு புதிய முறையைச் சுட்டிக்காட்டினார்.

இந்த இரு ஆளுமைகளின் பங்களிப்புகளுக்குப் பின்னரும்கூட கல்வெட்டியல் தொய்வடைந்துதான் கிடந்தது. அதைப் போக்கும் நோக்கில்தான் ஐராவதம் மகாதேவனை கே.வி.சுப்ரமணிய அய்யர், தமிழ் பிராமி ஆராய்ச்சியை நோக்கித் திசை திருப்பிவிட்டார் போலும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மொழி உணர்வில் தமிழகம் தகித்துக்கொண்டிருந்தபோதுதான் சங்க காலத்தைச் சேர்ந்த புகளூர் கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் வெளிப்படுத்தினார். அதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

சங்க காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டுகளும் அவரால் கண்டறியப்பட்டன. அவரது கண்டுபிடிப்புகளால் 1966-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாடு பொருள் பொதிந்ததாக மாறியது.

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது. கிமு இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்த கல்வி நிலையையும் அந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

எழுத்தறிவு குறித்த விஷயத்தில் கன்னட, தெலுங்கு மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாட்டை ஐராவதம் மகாதேவன் தெளிவுபடுத்தியுள்ளார். “தமிழகத்தில் முதன்முதலாக எழுத்துகள் தோன்றிப் பரவிய சூழ்நிலை அதே காலகட்டத்தில் திராவிட மொழிகள் வழக்கிலிருந்த ஆந்திர - கர்நாடக மாநிலங்களிலிருந்த சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது என்பது உண்மையிலேயே மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துகள் தோன்றிய காலத்தை ‘முதல் அறிவொளி இயக்கம்’ என்று கூற முடியும். ஆனால் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் பிராமி எழுத்து முறை பரவியிருந்தபோதிலும் அங்கு ‘அறிவொளி இயக்கம்’ தோன்றியதாகக் கருத முடியாது” எனக் குறிப்பிடும் அவர், அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.

இப்படிக் காரணங்களாக அவர் குறிப்பிடுவனவற்றில் முக்கியமானது, “அரசவையிலும், மேனிலை மக்களிடையேயும் வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. மாறாக, எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு மிகப் பரவலாகக் காணப்பட்டது என்பது என் ஆய்வின் ஒரு முக்கிய முடிவாகும்.”

சிந்துவெளி எழுத்துகளும் திராவிடமும்

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடுதான் என்று நீண்டகால ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்த அஸ்கோ பர்போலாவின் வாதத்தை வழிமொழிந்த ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகளை அஸ்கோ பர்போலா படித்த முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பர்போலா ‘அணில்’ என்ற உருவத்தை ‘பிள்ளை’ எனப் பொருள் கொண்டதையும், ‘வளையல்’ போன்ற குறியீட்டுக்கு ‘முருகு’ என்று பொருள் கொண்டதையும் மொழியியல் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டினார்.

சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு ஐராவதம் மகாதேவன் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.

இரு முக்கியப் பங்களிப்புகள்

ஐராவதம் மகாதேவன் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலான தனது ஆய்வுகளால் தமிழ்ச் சமூகத்துக்கு இரண்டு மிகப் பெரிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்:

தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் மூலமாகத் தமிழ் எழுத்தின் தொன்மையை நிறுவியது மட்டுமின்றி, அந்த எழுத்துகளின் அடிப்படையில், அப்போது இருந்த சமூகத்தில் இந்து மதத்தின் தடயம் எதுவும் இல்லை என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினார். இதன் மூலம் தமிழர் சமயத்தின் தனித்துவத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.

சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடுதான் எனக் காட்டியதோடு அங்கு கண்டறியப்பட்ட குறியீடுகளைப் படிப்பதற்கு ஒப்பீட்டளவில் நம்பகமானதொரு முறையை உருவாக்கி, அங்கே கிடைப்பவை தமிழ் எழுத்துகளின் முன்னோடியான வடிவங்கள்தான் என உறுதிசெய்தார்.

ஐராவதம் மகாதேவன் முன்னெடுத்த இந்த ஆய்வுகள் இரண்டுமே தமிழ் மொழியின், பண்பாட்டின் தனித்துவத்தை நிறுவக்கூடியவை. அந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேலே எடுத்துச்செல்லக்கூடிய ஆய்வாளர்களை உருவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

- ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: adheedhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x