Published : 13 Nov 2018 09:58 AM
Last Updated : 13 Nov 2018 09:58 AM

இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் கதை… ரஃபேல் துணைக் கதையும்தான்!

இந்திய விமானப் படைக்காக, ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் பேரத்தின் தொடர்ச்சியாக ஹெச்ஏஎல் (இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டெட்) பெயர் நாட்டு மக்கள் மத்தியில் புழங்க தொடங்கியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக எந்த இந்திய அரசுக்குச் சொந்தமோ, அதன் பிரதிநிதிகளாலேயே ஹெச்ஏஎல் நிறுவனத்தின் புகழுக்குக் களங்கம் உண்டாகும் வகையில், இந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் இன்றைக்கு 78 வயதாகும் ஹெச்ஏஎல் இந்திய நாட்டுக்கும் விமானத் துறைக்கும் ஆற்றியிருக்கும் பணிகள் சாதாரணமானவை அல்ல. இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் என்று சொன்னால், அது மிகை அல்ல.

ஹெச்ஏஎல் உருவானது எப்படி?

இந்தியாவின் முதல் விமானத் தயாரிப்பு ஆலையை சேட் வால்சந்த் ஹீராசந்த் 1940 டிசம்பரில் தொடங்கினார். அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே அவருக்கு உதவினார். அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்லோ விமான நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். சைக்கிளோ, மோட்டார் காரோ முழுதாகத் தயாரிக்கப்படாத அன்றைய இந்தியாவில், விமானம் தயாரிக்கப்பட்ட கதை அசாத்தியமானது.

அது இரண்டாவது உலகப் போரை ஒட்டிய காலம் என்பதால் 30 ‘ஹார்லோ’ பயிற்சி விமானம், 48 ‘ஹாக்’ போர் விமானம், 74 ‘உல்டி’ குண்டுவீச்சு விமானம் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரித்துத் தர ஆர்டர் கிடைத்தது. விமானத் தொழிற்சாலையைத் தொடங்க மன்னர்கள் ஆண்ட பரோடா, பாவ்நகர், குவாலியர், மைசூர் சமஸ்தானங்களில் இடம் தேடினர்.

மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வை உள்ளவர். அவரிடம் திவானாக இருந்த சர் மிர்சா இஸ்மாயிலும் தக்க ஆலோசனை தெரிவித்ததால், விமானத் தயாரிப்பு ஆலைக்கு 700 ஏக்கர் நிலத்தை இனாமாகவே கொடுத்தார் உடையார். தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தரவும் முன்வந்தார். இப்படித்தான் பெங்களூருக்கு வந்தது ஹெச்ஏஎல்.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமானது. இரண்டு ஆண்டுகளுக்குள் ஆலைக்கு இடம் பார்த்து, ஆலையையும் அலுவலகங்களையும் நிறுவி, பொறியாளர்களையும் தொழில்நுட்பப் பணியாளர்களையும் வேலைக்குச் சேர்த்து, விமான பாகங்களை இணைப்பது, சோதிப்பது ஆகிய எல்லாப் பணிகளையும் செய்துமுடித்தனர்.

இந்தியாவில் விமானம் கட்டுவதற்குக் கிடைத்த தகுதி வாய்ந்த பொறியாளர்களையும் பணியாளர்களையும் கண்டு அமெரிக்கர்கள் வியந்தனர். அதே உணர்வு, அரசுத் துறை நிறுவனமாகிவிட்ட பிறகு மூன்றாவது தலைமுறை ஊழியர்களிடமும் இப்போது நிலவுகிறது. இது தனியார் நிறுவனமாக இருந்தபோதே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941-ல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இது அரசுத் துறை நிறுவனமாகிவிட்டது.

ஹெச்ஏஎல்லின் திறன்

ஹெச்ஏஎல் நிறுவனத்தில் 11 ஆய்வு, வளர்ச்சி மையங்கள் உள்ளன. 29,300 தொழிலாளர்களைக் கொண்ட 20 உற்பத்திப் பிரிவுகளும் உண்டு. விமானத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 100 உலக நிறுவனங்களில் ஹெச்ஏஎல் 34-வது இடத்தில் இருக்கிறது. இதுநாள் வரையில் ஹெச்ஏஎல் 17 ரகங்களில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 1,416 விமானங்களைத் தயாரித்துள்ளது அல்லது பழுதுபார்த்துள்ளது. 14 ரகங்களில் 2,097 விமானங்களை உரிமம் பெற்று உற்பத்திசெய்துள்ளது; 5,015 விமான இன்ஜின்களை உருவாக்கியுள்ளது.

2017-18-ல் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.18,284 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு வரியாகவும் லாப ஈவாகவும் அளித்தது ரூ.30,429 கோடி. வழங்கிய ஒட்டுமொத்த லாபம் ரூ.16,884 கோடி.

குதிரை இல்லாத வண்டி

இத்தகைய நிலையில், தஸ்ஸோ நிறுவனத்துடனான ‘ரஃபேல்’ ஒப்பந்தத்தில் கடைசி நேரத்தில் ஹெச்ஏஎல் வெளியேற்றப்பட்டது என்பதைக் குதிரை இல்லாத வண்டி என்று நான் சொல்வேன். எவ்வளவு பெரிய புதிய தனியார் நிறுவனமாக இருந்தாலும் அது ஹெச்ஏஎல்லின் திறமை, அனுபவம், அர்ப்பணிப்புக்கு ஈடாகாது.

இந்த ஒப்பந்தத்தில் ஹெச்ஏஎல் நிராகரிக்கப்பட இரண்டு காரணங்கள் இருப்பதாக அனுமானிக்க முடிகிறது. முதலாவது, தஸ்ஸோ நிறுவனம் தனது தயாரிப்பு தொடர்பான விவரங்களை ஹெச்ஏஎல்லுடன் பகிர விரும்பவில்லை. அதற்கு ஹெச்ஏஎல்லின் கடந்த காலப் பணிகளில் திருப்தியில்லை என்று காரணம் கூறப்படுகிறது. இரண்டாவது, தஸ்ஸோ நிறுவனத்தில் ஒரு வேலையைச் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் போல மூன்று மடங்கு பிடிக்கிறது ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு என்பதாகும்.

இதில் முதலாவது வெறும் கட்டுக்கதை, இரண்டாவது தவறான கருத்துகளின் அடிப்படையில் கூறப்படுவது.

ஹெச்ஏஎல் மீதான குற்றச்சாட்டுகளின் அபத்தம்

ஹெச்ஏஎல் பணித் திறனுக்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம். உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட ‘கிளைடர்’, அடிப்படையான பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட பயிற்சி விமானங்கள் ‘எச்டி-2’, ‘எச்பிடி-32’, ‘ஜெட்’ ரகங்களில் பயிற்சி விமானங்கள் ‘கிரண்’ ‘எம்கேI’, ‘எம்கேII’, ஒலியின் வேகத்தை மிஞ்சும் போர் விமானங்கள் ‘மருத்’, விவசாயப் பணிகளுக்கான ‘பசந்த்’ ஆகியவை ஹெச்ஏஎல்லின் வடிவமைப்புத் திறனுக்குச் சான்றுகள். பல விமானங்களை தேவைக்கேற்ப வேறு பயன்களுக்காகவும் மாற்றியமைத்திருக்கிறது ஹெச்ஏஎல். ‘நாட்’, ‘ஜாகுவார்’, ‘மிராஜ்-2000’, ‘மிக்’ ரகத்தில் அனைத்தும் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

வடிவமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றில் ஹெச்ஏஎல் எப்படி என்று ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு முடிவு செய்திருக்க வேண்டும். இந்திய விமானப் படை பயன்படுத்திக்கொண்டிருக்கும் விமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு ஹெச்ஏஎல்லால் தயாரிக்கப்பட்டவை என்பதிலிருந்தே அதன் தயாரிப்புத் திறனை அறியலாம். விமானப் படைக்குத் தேவைப்படும் புதிய விமானங்களை வாங்கும்போதெல்லாம் ஹெச்ஏஎல் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு உற்பத்திக்கு தஸ்ஸோ எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் போல மூன்று மடங்கு நேரத்தை ஹெச்ஏஎல் எடுத்துக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. தஸ்ஸோ சில தயாரிப்புகளுக்குத் தேவைப்படுவனவற்றை வேறு நிறுவனங்களிடம் வாங்கி அப்படியே இணைத்து உருவாக்கிவிடும். ஆனால், ஹெச்ஏஎல் அவற்றை ஆலையிலேயே தயாரித்துத்தான் கோக்க வேண்டியிருக்கும். இதைத் தயாரிப்பில் தாமதம் என்று அழைப்பது சரியல்ல.

இதுவரையிலான ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் குறித்து நாம் விவாதிக்கவும் ஹெச்ஏஎல்லுக்குச் சாதகமாக எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. போர் விமானங்களுக்கு ஏற்படும் விபத்துகளை ஆராயவும் குறைகளைக் களையவும், பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சித் துறை செயலர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தலைமையில் குழுவொன்றை 1993-ல் அரசு நியமித்தது. அக்குழு ஆராய்ந்த விபத்துகளில் தொழில்நுட்பக் கோளாறுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்ததில் ஹெச்ஏஎல் தயாரிக்காத அல்லது புராதன விமானங்களில்தான் அத்தகைய விபத்துகள் நிகழ்ந்தது தெரியவந்தது. ஹெச்ஏஎல் தயாரிக்கும் விமானங்கள் மூல தயாரிப்பாளர்கள் தயாரிப்பதைவிட தரத்தில் உயர்வானவை என்பது நிறுவப்பட்டுவிட்டது.

ஆகையால், தங்களுடைய விமானங்களை ஹெச்ஏஎல் எப்படித் தயாரிக்கப்போகிறது என்பதை தாங்கள் அறிந்துகொள்ள ஒப்பந்தம் அவசியம் என்று தஸ்ஸோ வலியுறுத்தியது ஏற்கப்படவில்லை. ஹெச்ஏஎல் விமானங்கள் விபத்துக்குள்ளானதை ஆராய்ந்ததில், அவற்றைப் பராமரித்த விதத்திலும் இயக்கிய விதத்திலும் ஏற்பட்ட தவறுகளால்தான் விபத்துகள் நடந்தன என்பது தெரியவந்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தால் என்னவெல்லாம் இழப்பு?

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 36 போர் விமானங்களை உள்நாட்டுத் தயாரிப்பாளர் இல்லாமல் நேரடியாக வாங்குவதால் எதிர்காலத்தில், அந்த விமானங்களின் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்களுக்குப் பெரும் தொகையை இந்தியா செலவிட நேரும். அது நம்முடைய கஜானாவைக் காலியாக்கிவிடும். இந்தப் போர் விமானங்கள் தொடர்பான பணிகள் அடுத்த 35 முதல் 40 ஆண்டுகளுக்குத் தொடரும். ஹெச்ஏஎல் கூட்டாளியாக இருந்தால் ‘தன்னிறைவு’, ‘இந்தியாவில் தயாரித்தல்’ என்ற லட்சியங்கள் நிறைவேறியிருக்கும். தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கும் வழியேற்பட்டிருக்கும். உதிரிபாகங்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருக்கும்.

மாறாக, 36 முழு விமானங்களையும் பழுதுநீக்கித் தருவோம் என்று தஸ்ஸோ கூறினால், அது விற்கும்போது சொல்லும் வியாபார உத்தி என்பதை உணர வேண்டும். போர் விமானங்களைப் பழுது நீக்கிப் பயன்படுத்துவது தயாரிப்பாளர் மட்டுமல்ல, பயன்படுத்துகிறவர்க்கும் (ஐஏஎஃப்) உள்ள கூட்டுக் கடமையாகும். இதில் பயன்படுத்துவோருக்குத்தான் அதிகப் பொறுப்பு.

எல்லாவற்றுக்கும் மேல், விமானத்தின் விலை விவரம் ரகசியமாகக் காக்கப்படுகிறது. ஆனால், ஹெச்ஏஎல்லின் பலவீனங்கள் என்று கருதப்படுபவை பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன. இது இந்திய விமானத் தயாரிப்புத் துறையையே உலகம் இகழ்ச்சியாகப் பார்க்க வழி செய்திருக்கிறது. இந்தத் தவறு உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில், தஸ்ஸோ நிறுவனத்துடன் முதலில் பேசிய இந்திய விமானப்படை, 126 போர் விமானங்களை தஸ்ஸோவிடம் வாங்க வேண்டும் என்றால், ஹெச்ஏஎல் நிறுவனம் குறித்த காலத்தில், தரமாகத் தயாரிப்பதை ஒப்பந்தக் கூட்டு நிறுவனம் என்ற வகையில் தஸ்ஸோதான் உறுதிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது. இந்த நிபந்தனையை இந்திய விமானப்படை, பாதுகாப்பு நிறுவனம், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் சேர்ந்து விதித்தனர். இதுதான் ஹெச்ஏஎல்லின் மதிப்பை உலக அரங்கில் சீர்குலைத்தது. இந்தத் தவறு சரிசெய்யப்பட வேண்டும். ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். நிறுவனத்தின் திறனும், பங்களிப்பும் மறக்கப்படக் கூடாது.

நேரடியாக வாங்கும் விமானங்களைத் தவிர, எஞ்சிய விமானங்களை ஹெச்ஏஎல் மூலம் தயாரிப்பதற்காகப் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை ஆண்டுக் கால உழைப்பும் அரவணைப்பும் வீணாகிவிடும். இறுதியில் அது நாட்டுக்கும் மக்களுக்கும்கூடத் தீங்காக முடியும்.

- ஜி.எஸ்.ஜமதக்னி, ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தர உறுதிப்பாடு பிரிவில் பொது மேலாளராகப் பணியாற்றி

2001-ல் ஓய்வு பெற்றவர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x