

தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகை ‘கஜா’ புயல் காரணமாகப் பேரழிவைச் சந்தித்திருக்கும் நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். புயல் கரையைக் கடந்து ஒரு வார காலமாகியும் காவிரிப் படுகை மக்களிடமிருந்து வரும் ஓலங்கள் குறையவே இல்லை. அரசாங்கமோ தினமும் புதுப் புது அறிவிப்புகளை வெளியிடுகிறது; நிறைய வேலைகள் நடப்பதாகச் சொல்கிறது. உள்ளபடி என்ன நடக்கிறது? தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம்.
பாதிப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் 1952-க்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் பெரும் பேரழிவு இது என்று சொல்கிறார்கள் வயசாளிகள். குடிசை, ஓட்டு வீடுகளை இழந்து மக்கள் தவித்துவரும் நிலையில், மீண்டும் மழை பெய்துகொண்டிருப்பதால், படுக்கக்கூட இடமின்றித் துயரத்தில் இருக்கிறார்கள். ஒரு வார காலம் என்பது குறைவானது இல்லை. ஆனால், நடந்திருக்கும் நிவாரணப் பணிகளை நீங்கள் நேரில் வந்து பார்த்தால், இந்த அரசாங்கம் தோற்றுவிட்டது புரியும்.
அரசாங்கம் செயல்படவேயில்லை என்கிறீர்களா?
முன்திட்டமிட்டுச் செயல்படவில்லை என்று சொல்கிறேன். சொந்த அரசியல் லாபங்களைக் கணக்குப் பார்த்தே ஆட்சி நடத்துபவர்களால், தொலைநோக்கில் எந்தத் திட்டத்தையும் சிந்திக்க முடியாது. இப்போதைய இன்னல்களுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல், நிர்வாகம் முடங்கிக் கிடப்பதற்கும் உள்ள தொடர்பையே எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? ஒரு கிராம நிர்வாக அலுவலருக்கு (விஏஓ) மூன்று முதல் ஐந்து கிராமங்கள் வரை கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் - முன்அனுபவம் இல்லாதவர்கள் என்பதால், மக்களை அணுகுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதனால், கிராம மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்குமான தொடர்பு ஏறத்தாழ துண்டிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பார்வையிட வரும் அமைச்சர்களை வரவேற்பதிலும், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதிலுமே மாவட்ட ஆட்சியர்களின் அன்றாடப் பணிகள் முடிந்துவிடுகின்றன. வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இதே நிலைதான். மக்கள் பசியிலும் குளிரிலும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காவிரிப் படுகையில் பசி எனும் சூழல் நெஞ்சம் கொதிக்கவைக்கிறது…
ஆமாம். ஆனால், அரசாங்கம் திட்டமிட்டிருந்தால், இந்த அவலம் நேர்ந்திருக்காது. ரேஷன் கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய் போதிய அளவுக்கு இருப்பில் வைக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்டால், அடுத்த சில நாட்களுக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்று திட்டமிட்டு உணவுப் பொருட்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசாங்கம் கொண்டுவரவில்லை. இப்போதுமேகூட, இன்னொரு மழை வந்தால் என்ன செய்வது என்ற திட்டம் அரசாங்கத்திடம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் அழிந்திருக்கின்றன. லட்சக்கணக்கில் குடிசைகள், ஓட்டு வீடுகள் அழிந்துள்ளன. நெல் பயிர்கள் தண்டு உருளும் நிலையில் முறிந்துள்ளன. கதிர் வந்த நிலையில் சாய்ந்து அழிந்திருக்கின்றன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15,000 இழப்பீடு அறிவித்து நிவாரணம் வழங்கிய நிலையில், நான்காண்டுகள் கழித்து ஹெக்டேருக்கு ரூ13,500 என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது மோசடித்தனமானது (ஒரு ஹெக்டேர் என்பது ஏறக்குறைய இரண்டரை ஏக்கர்). தென்னை மரம் ஒன்றை அகற்றவே ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை செலவாகும் நிலையில், மொத்தமே ரூ.1,700 இழப்பீடு வழங்குவதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?
சரி, அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பேரிடர் என்று முதலில் உணர வேண்டும். அப்படி உணர்ந்திருந்தால், உடனடியாக ஓடோடி வந்திருப்பாரே? சாலைத் திறப்பு விழா நிகழ்ச்சிகளிலா கலந்துகொண்டிருப்பார்? இது தமிழ்நாடு சமாளிக்கக்கூடிய இழப்பே இல்லை. இதை முதல்வர் உணர வேண்டும். மத்திய அரசிடம் நிலைமையின் தீவிரத்தைச் சொல்ல வேண்டும். ஒடிஷா போன்ற மாநிலங்கள் எப்படித் துரிதமாகப் பேரிடர் காலங்களில் செயல்படுகின்றன என்ற ஆலோசனையைப் பெற வேண்டும். யாரோடெல்லாம் இதில் கை கோக்க முடியுமோ அவ்வளவு பேரோடும் கை கோத்து காவிரிப் படுகையைத் துயரத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.