

அந்தமானில் உள்ள சென்டினெல் மக்கள், வெளிநபர்களை விரோதத்துடன் அணுகுபவர்கள் என்று அறியப்பட்டவர்கள். எனினும், 1970-கள் முதல் சென்டினெல் தீவுக்கு 26 முறை மானுடவியலாளர்கள் சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடக்கு சென்டினெல் தீவில் கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஜான் ஆலனின் உடலை மீட்கும் விஷயத்தில் அந்தமான் நிகோபார் நிர்வாகத்துக்கு மானுடவியலாளர்கள் உதவிவருகிறார்கள். அவர்களில் சிலர் இந்திய மானுடவியல் ஆய்வு மையத்தை (ஏஎன்எஸ்ஐ) சேர்ந்தவர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய மானுடவியல் ஆய்வு மையத்தின் தலைவர் சி.ரகுவைத் தொடர்புகொண்ட அந்தமான் நிகோபாரின் டிஜிபி தீபேந்திர பதக், சென்டினெல் மக்களை அணுகும் விஷயத்தில் அவரது ஆலோசனைகளைக் கேட்டிருக் கிறார். ஏஎன்எஸ்ஐ மையத்தைச் சேர்ந்தவர்கள், டி.என்.பண்டிட்டிடம் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். அனுபவம்வாய்ந்த மானுடவியலாள ரான டி.என்.பண்டிட், 1970-களில் வடக்கு சென்டினெல் தீவுக்கு அதிகாரபூர்வமான முதல் பயணத்தை மேற்கொண்டவர். அதைத் தொடர்ந்து அந்தத் தீவுக்கு மானுடவியலாளர்கள் இதுவரை 26 முறை சென்றுவந்திருக்கிறார்கள். 24 முறை சென்டினெல் மக்களுடன் தொடர்புகொண்டிருக் கிறார்கள். சென்டினெல் மக்களுடனான சந்திப்புகள் குறித்து ஏஎன்எஸ்ஐ வெளியிட்ட ‘மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் பழங்குடியினக் குழுக்கள்: சலுகைகள் மற்றும் சிக்கல்கள்’ எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்புத்தகத்தில் சென்டினெல் மக்கள் தொடர்பான அத்தியாயத்தை எழுதியிருக்கும் ஆன்ஸ்டைஸ் ஜஸ்டின், 1986 முதல் வடக்கு சென்டினெல் தீவுக்கு 10-க்கும் மேற்பட்ட பயணங்களில் பங்கேற்றவர். அந்தமான் நிகோபார் தீவுகளில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் பழங்குடியினக் குழுக்களில் (பிவிடிஜி) மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் சென்டினெல் பழங்குடியினர் என்று அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கிரேட் அந்தமானி பழங்குடியினர், ஓங்கே, ஜாரவா, நிகோபாரி பழங்குடியினர், ஷோம்பென் பழங்குடியினர் ஆகியோரும் அந்தப் பட்டியலில் உள்ளனர்.
1970 மார்ச்சில் வடக்கு சென்டினெல் தீவுக்கு முதன்முதலாகப் பயணித்தபோது டி.என்.பண்டிட்டுடன் ஓங்கே பழங்குடியினத்தைச் சேர்ந்த மூன்று பேரும் சென்றனர். எனினும், சென்டினெல் மக்களுடன் அவர்களால் எந்த வகையிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதை அந்த அத்தியாயத்தில் ஆன்ஸ்டைஸ் ஜஸ்டின் குறிப்பிட்டிருக்கிறார். இப்புத்தகத்தில் 2004 சுனாமிக்கு முந்தைய 22 பயணங்களும் சுனாமிக்குப் பிறகான நான்கு பயணங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் ஏழு பயணங்களின்போது நட்பற்ற முறையில் சென்டினெல் மக்கள் நடந்துகொண்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆராய்ச்சியாளர்கள் மீது சென்டினெல் மக்கள் அம்பெய்த சம்பவங்களும் அம்பெய்யப்போவதாக மிரட்டிய சம்பவங்களும் நடந்தன. அந்தப் பயணங்களின்போது சென்டினெல் மக்களுக்கு இளநீர், வாழைப்பழங்கள், இரும்புக் கம்பிகள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.
காலப்போக்கில், சென்டினெல் மக்களின் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. “1990 முதல் அவர்கள் தொடர்புகொள்வதற்கு ஏற்றவர்களாக இருந்துவருகிறார்கள். அம்பெய்யும் சம்பவங்கள் குறைந்துவிட்டன” என்றும் அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்டினெல் பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதி யிலிருந்து புகை வந்த காட்சி, கடற்கரைக்கு வரும் சென்டினெல் மக்கள் அன்பளிப்புகளை எதிர்பார்த்து சைகை செய்வது, அன்பளிப்புகளை கடற்கரையிலோ அல்லது ஆழமில்லாத நீர்ப்பரப்பிலோ வைத்துவிடுமாறு சைகை செய்வது என்று தாங்கள் பார்த்த பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். நிகோபாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான ஆன்ஸ்டைஸ் ஜஸ்டின், 2005 மார்ச் 9-ல் சென்டினெல் தீவின் வடக்குக் கரைக்கு அருகே சென்டினெல் மக்களுடனான தனது கடைசிச் சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார். “அன்பளிப்புப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியுடன் கழுத்தளவு நீரில் இறங்கி சென்டினெல் பழங்குடியினர் எங்களை நோக்கி வந்தனர்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்டினெல் மக்கள் விஷயத்தில், மிகுந்த கவனத்துடனான அணுகுமுறையைக் கொண்டிருக் கிறது அந்தமான் நிர்வாகம். 2005-க்குப் பிறகு அந்தப் பகுதிக்கு அதிகப் பயணங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாததன் காரணமாக சட்டவிரோத வேட்டைக்காரர்களின் தொந்தரவுக்கு சென்டினெல் மக்கள் ஆளாவதாகக் குறிப்பிடுகிறார் ஆன்ஸ்டைஸ் ஜஸ்டின். சென்டினெல் தீவில் 2012-ல் மட்டும் 11 முறை சட்டவிரோத வேட்டைக்கார்கள் பிடிபட்டதை, தானே பதிவுசெய்திருப்பதாகக் கூறுகிறார்.
சென்டினெல் மக்களுக்குத் தனி மொழி உண்டு. “ஜாரவாக்கள், ஓங்கேக்களைவிட அதிகமாகக் கடலைச் சார்ந்து வாழ்பவர்கள் சென்டினெல்கள். 56.97 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவைச் சுற்றி இருக்கும் கடலில் வில், அம்புகள், ஈட்டிகளைக் கொண்டு மீன் பிடிக்கிறார்கள்” என்று ஏஎன்எஸ்ஐ வெளியிட்டிருக்கும் புத்தகம் கூறுகிறது. காட்டுப் பன்றிகள், கடல் ஆமைகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் சென்டினெல்கள், வேர்கள், கிழங்குகள், தேனைச் சேகரிக்கிறார்கள். துடுப்புகளைக் கொண்டு படகைச் செலுத்துவது சென்டினெல்களுக்குப் பரிச்சயமில்லாத விஷயம் என்று ஜஸ்டினும் பிற ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள். படகில் நின்றுகொண்டு கம்புகளால் கடல் நீரைக் கலக்கி மீன் பிடிப்பதை மட்டும் அறிந்துவைத்திருக்கிறார்கள்.
ஏஎன்எஸ்ஐ-யின் பொது இயக்குநராக இருந்த டி.என்.பண்டிட்டுக்குத் தற்போது 84 வயதாகிறது. 1970-ல் ஓங்கே பழங்குடியினத்தைச் சேர்ந்த மூவருடன் சென்டினெல் தீவுக்குச் சென்ற அனுபவத்தை நினைவுகூர்கிறார். “படகில் இருந்தபடியே சென்டி னெல்களுடன் அவர்களுடைய மொழியில் பேசுமாறு ஓங்கேக்களிடம் சொன்னோம். இதனால், சென்டினெல் கள் கடும் கோபமடைந்தனர். பயந்துபோன ஓங்கேக் கள் படகில் மறைந்துகொண்டனர்” என்கிறார் அவர்.
சென்டினெல் தீவுக்குச் செல்லும் குழுவினர், விரைவாகச் சென்று கடற்கரையில் அன்பளிப்புகளை வைத்துவிட்டு உடனடியாகத் திரும்பிவிடுவார்கள் என்று கூறியிருக்கும் டி.என்.பண்டிட், “நாங்கள் அங்கு தங்கியிருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததும் அவர்கள் அம்பெய்வதை நிறுத்திவிட்டனர்” என்று குறிப்பிடுகிறார். தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க வருகிறார்கள் என்று கருதினால் சென்டினெல்கள் ஆவேசமடைந்துவிடுவார்கள் என்று சொல்லும் அவர், “நமது நாட்டின் ஒரு பகுதியில் கற்காலத்தைச் சேர்ந்த சிறிய மக்கள் குழு இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்துவருவது நமது அதிர்ஷ்டம்” என்று கூறுகிறார்.
� ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்