என்னென்ன நிவாரணப் பொருட்கள் தேவைப்படுகின்றன?

என்னென்ன நிவாரணப் பொருட்கள் தேவைப்படுகின்றன?
Updated on
1 min read

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னார்வலர்கள் பல்வேறு பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள்.. எந்தவொரு பேரிடரிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தேவைகள் இடத்துக்கு இடம் வேறுபடும். இதைப் பற்றிய புரிதல் இல்லாதபோது தேவையற்ற பொருட்கள் சில இடங்களில் குவிவதும், மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் சரியாகச் சென்றடையாமல் போவதும் உண்டு. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப் படுகைப் பகுதிகளுக்கான அத்தியாவசியத் தேவைகளின் பட்டியல் ஒன்றை வழிகாட்டியாகக் கொள்வது எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதோ பட்டியல்:

. தார்பாலின் குறைந்தபட்ச அளவு: 12x15 / 12x18 / 15x20

. தார்பாலின் கட்டுவதற்கான நைலான் கயிறு

. மெழுகுவத்தி குறைந்தது 2-3 மணி நேரம் எரியக்கூடிய அளவில்

. தீப்பெட்டிகள்

. கொசுவத்திச் சுருள்

. கையடக்க டார்ச்: சீனத் தயாரிப்புகள், சீன பேட்டரிகளுடன் ரூ.10-க்குக்கூடக் கிடைக்கின்றன.

. பாய் கோரைப்பாய்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. பிளாஸ்டிக் பாய்கள் குறைந்தது 3.5 x 5.5 சைஸ் ரூ.100 முதல் ரூ.150 வரை.

. போர்வைகள் குறைந்தபட்சம் 40 x 80 சைஸ். அல்லது 52 x 80 / 60 x 90 சென்னிமலை, கரூர், ஈரோடு பகுதிகளில் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையான விலையில் கிடைக்கும்.

. பிஸ்கட், பிரெட், பால் பவுடர், டீத்தூள் பாக்கெட்டுகள்

. பெண்களுக்கான நாப்கின்கள் தருபவர்கள் அத்துடன் உள்ளாடைகளையும் சேர்த்துத் தர வேண்டும். உள்ளாடைகள் திருப்பூரில் 20-30 ரூபாய் விலையில் கிடைக்கும்.

. மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் கோடு போட்டவை, கோடு போடாதவை, முழு சைஸ், அரை சைஸ்; பென்சில், ரப்பர், பேனா முதலானவை.

இவற்றைத் தவிர, அவரவர் வாகன வசதியைப் பொறுத்து குடிநீர் புட்டிகள் அல்லது பாக்கெட்டுகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், லுங்கி, நைட்டி போன்ற ஆடைகளைக் கொண்டுசெல்லலாம். உணவின் தேவை மிக அதிகமாக உள்ளது.

கிராமத்துக்கான பொது நிவாரணங்களில் இவற்றைச் செய்யலாம்:

. சில பகுதிகளில் மின்சாரம் கிடைக்க ஒரு மாதத்துக்கு மேலாகும் என்று தற்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மோட்டார் பொருத்திய போர்வெல்களில் மின்சார மோட்டாரை நீக்கிவிட்டு, கையடி பம்புகளைப் பொருத்தினால் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். இதற்கு சுமார் ரூ.3,500 செலவாகும். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு அமைக்கலாம்.

. விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற டீசலில் இயங்கும் அறுவை இயந்திரங்கள் ரூ.4,500 விலையில் கிடைக்கின்றன. இயந்திரங்களை இயக்க டீசலும் தரலாம்.

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.
தொடர்புக்கு: shahjahanr@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in