

பெ யர், புகழைத் தேடிச் செல்லாதவர் ஐராவதம் மகாதேவன். ‘இந்து தமிழ்’ நாளிதழ் நம்முடைய ஆளுமைகளைக் கௌரவிக்க ‘தமிழ் திரு’ விருதுகளுக்குத் திட்டமிட்டபோது முதல் மரியாதைக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர் ஐராவதம் மகாதேவன்.
விருது பெற வரும்படி, ‘இந்து’ என்.ராம் அனுப்பிய அழைப்புச் செய்தியில், “தாங்கள் செய்திருக்கும் பன்முகப் பங்களிப்புக்குப் பெருமை செய்யும் விதமாகவே இவ்விருதைத் தங்களுக்கு அளிக்கிறோம்.
சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் தொடர்பான தங்களது ஆராய்ச்சியில் எத்தனையோ பல இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் தாங்கள் முன்னோடியாக விளங்கிவருகிறீர்கள். இந்த விருதின் மூலம் அந்தச் செய்தி இன்னும் விரிவாகப் பரவட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
விருதை ஏற்றுக்கொண்ட ஐராவதம் மகாதேவன் நன்றி தெரிவித்து என்.ராமுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் அவருடைய மேன்மைக்கு மற்றும் ஒரு சான்று.
‘இந்து தமிழ் நாளிதழ் அளிக்கும் விருது என்னை மேலும் பெருமைப்படுத்துகிறது. இதை மிக்க பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்! - ஐராவதம் மகாதேவன்.’