

சர்வதேச ஆய்வுலகுக்குக் கல்வெட்டுச் சான்றுகளோடு தமிழின் தொன்மையை எடுத்துரைத்தவர் ஐராவதம் மகாதேவன். ‘தமிழ், தமிழர்’ என்று முகவரியுடன் அரசாள வருபவர்கள் மத்தியில் இந்திய ஆட்சிப்பணியைத் தமிழ் ஆய்வுக்காகத் துறந்து வாழ்நாள் முழுவதையும் கழித்தவர்.
அவருடைய கடைசி தமிழி களப்பணிக்கு அவருக்கு உதவியாகப் பயணித்து, பூலாங்குறிச்சி கல்வெட்டினைக் காணச்சென்று வந்தது ஒரு பெரும் பாக்கியம். பாறைச் சரிவில் உள்ள அந்த நெடிய கல்வெட்டை அருகில் இருந்து பார்க்க ஆசைப்பட்டார்.
அவரைக் கூட்டிச்செல்லத் தயங்கிய நாங்கள், அவருடைய ஆசையை நிறைவேற்ற சரிவான பாறையின் மேல் கூட்டிச்சென்றோம். தனது சுண்டு விரலால் எழுத்துகளை வருடிப்பார்த்தார்.
தனது சுண்டு விரலைச் சிற்றுளியாய் எண்ணிக்கொண்டு எழுதிய எழுத்துகள் மீது எழுதிப்பார்த்து அறிவது அவருடைய வாசிப்பு முறைகளுள் ஒன்று. காடு, மேடு, பாறை, குகை என வெயில், மழை பார்க்காமல் தமிழியைத் தேடிய கண்கள் மூடிய இமைகளுடன் சிந்து வெளி - தமிழ் தொடர்பைத் தேடிக்கொண்டே சாம்பலானது.
தமிழிக்கு சர்வதேச அரங்கில் ஓர் அங்கீகாரம் பெற உதவியாய் இருந்தவரின் இறுதிச் சடங்கில் பெசன்ட் நகர் மயானத்தில் பங்குபெற்றோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொடுமை... சுமார் 40 பேர். அவர்களில் 30 பேர் அவருடைய உறவினர்கள் / நெருங்கிய நண்பர்கள். தமிழ் வாழும்!
- காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர்.