Last Updated : 22 Nov, 2018 09:26 AM

 

Published : 22 Nov 2018 09:26 AM
Last Updated : 22 Nov 2018 09:26 AM

புயல்நாடான புனல்நாடு!

காவிரிப் படுகை எப்போதும் புனல்நாடு. அவ்வப்போது புயல்நாடு. வங்கக் கடலிலிருந்து வடமேற்காக நகர்வது புயலின் வழக்கம். பருவகால நிகழ்வுகளின் எதேச்சைப் போக்கை நினைவூட்டுவதுபோல் புயல் இம்முறை தென்மேற்காக நகர்ந்தது. கரையைக் கடந்தவுடன் புயல் வலப்புறம் இருக்கும் நிலப் பரப்புக்குள் புகவில்லை, இடப்புறத்தின் கடலுக்குள்ளும் நழுவவில்லை. கரையைவிட்டு அதிகம் விலகாமல் நீளும் நிலப் பரப்பிலேயே சென்றுவிட்டது. புவி அமைப்பும், புயலின் திசையும் வழக்கமல்லாத வழக்கமாகக் கூடிக்கொண்டதால் கணக்கில்லாத மரங்கள் விழுந்துவிட்டன. வழக்கமாகப் புயலோடு வரும் அளவு மழை இல்லாத உலர் புயல் என்பதுதான் கஜா காட்டியிருக்கும் ஒரேயொரு சலுகை!

மாற்றுப் பயில் முயற்சி

சேதத்துக்கு அடுத்த மேல்நிலைப் பாதிப்பை விவசாயிகள் அழிமானம் என்பார்கள். கஜா புயலின் வன்மம் நிகழ்த்தியது அழிமானம். கிழக்கே வேதாரண்யத்திலிருந்து மேற்கே பேராவூரணிவரை பெரும் அழிமானம். அறுபது ஆண்டுகளாக விவசாயிகள் நெல்லுக்கு மாற்றுப் பயிர்களை முயற்சித்த இடம் அது. சவுக்கு, தென்னை, மா, பலா என்று நெல்லுக்கு நீண்டகால மாற்றாக மரங்களை வளர்த்தார்கள். காவிரிப் பிரச்சினை முற்றியபோது, நீரின் தேவையை மாற்றுப் பயிர் கொஞ்சம் குறைத்தது என்ற ஆறுதல் அவர்களுக்கு. கடைமடையின் பாசன பிரச்சினைக்கு நிவாரணம் என்ற மனச் சமாதானம். அறுபது ஆண்டு கால மாற்று முயற்சிகளை அரை மணி நேரத்தில் அழித்துக் கடந்தது கஜா. அழிமானத்தை மாற்றுப் பயிருக்கான முன்முயற்சியின் பின்னணியில் பார்க்க வேண்டும்.

பேராவூரணி நண்பர் ஒருவரோடு பேசினேன். “என் அப்பா அங்கங்கே கேணி தோண்டுவார். ஊறிய நீரை என் அம்மா குடத்தில் கொண்டுபோய் தென்னம்பிள்ளைகளுக்கு ஊற்றுவார்.” என்று குடும்பம் தென்னந்தோப்பு உருவாக்கிய கதையைச் சொன்னார். தென்னங்கன்றை ‘பிள்ளை’ என்பார்கள். அதே உருவ வழக்கு மொழியில் தென்னை வளர்ப்பதை ‘ஆளாக்குவது’ என்பார்கள். தென்னை விவசாயிகளின் துயரத்தை இந்த இரண்டு சொற்களுமே சொல்லிவிடும். வளர்த்த தலைமுறைக்கு அனுபவிக்க வாய்க்கவில்லை. வரும் தலைமுறைதான் வைப்பது வளர காத்திருக்க வேண்டும்.

கேவலப் பெருமை

கதிர் வந்த நெல்வயலில் மணியை உருவிக்கொண்டு பயிரை வெறும் தட்டையாக்கி நிறுத்தியது காற்று. வளர்ந்த பயிர் தோகை சரிந்து ஒடிந்தது. இளம் நடவானால் முதல் நொறுங்கி உட்கார்ந்தது. நெல் தோகையைப் புயலின் சீற்றம் நுனி கிழித்து சருகாக்கியது. பயிர்ப் பரப்பில் புயல் ஓடுகால் வகிர்ந்துக் கடந்தது. நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் மறுமாடி ஓடுகளை காற்று வாரி விசிறியது. கூறைவீடுகள் சதை கொய்த எலும்புக்கூடாக மூங்கில்கட்டோடு நின்றன. ஆலமரத்தைக்கூட காற்று துணியாகச் சுருட்டிக் கந்தலாக்கியது. ஆற்றங்கரை தேக்குமரங்கள் கொண்டை முறிந்து புயலின் போன திசை பகர்ந்து சாய்ந்தன.

பொருள் இழப்போடு புயலுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. நம் கலாச்சாரம் அதை எப்படி புரிந்துகொண்டு தன்னை வசம் மாற்றி வடிமைத்துக்கொள்கிறது? 1977-ல் வந்த புயலுக்கு இல்லாத ஒரு கேவலப் பெருமை இந்த கஜா புயலுக்கு உண்டு. அப்போது இல்லாத குடிநீர் பஞ்சம் இன்று பெரும் பிரச்சினையாகி மக்களையும் அரசு நிர்வாகத்தையும் சேர்த்தே வதைக்கிறது. வயல், வாய்க்கால், குளம், குட்டை என்று தண்ணீர். ஆனால் குடிக்க நீர் இல்லை. குளத்து நீரை கூசாமல் புழங்க முடியவில்லை. 1977 புயலின்போது கேணி இருந்தது. கைபம்பு இருந்தது. தொழில்நுட்பக் கலாச்சாரம் துளைக் கிணறு தோண்டி, மேல் நிலை நீர்த்தொட்டி என்ற நீர்ப்பரண் கட்டிய கையோடு கேணியும் கைபம்பும் தொலைந்துவிட்டன. இன்று மின்மோட்டார் இயங்கினால்தான் நீர்ப்பரணிலிருந்து சமைக்கவும் குடிக்கவும் தண்ணீர் கிடைக்கும்.

ஜெனரேட்டரைக் கொண்டு நீர்ப்பரணுக்கு தண்ணீர் ஏற்றுகிறார்கள். தொழில்நுட்பத்துக்குத் தன்னைத்தானே இப்படிப் பெருக்கிக்கொள்ளும் தன்மை. இது மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மட்டும் நேர்வதல்ல. மையப்படுத்திய எந்த விநியோக முறைக்கும் காவிரிப் படுகையில் ஆண்டுதோறும் காத்திருக்கும் ஆபத்து இது.

புரிதலின் தெளிவு

புயலைக் கழித்து மழை பெற முடியாது என்பது காவிரிப் படுகையின் புரிதல். அந்த புரிதலுக்குத் தக்க சாகுபடிப் பட்டம், பயிர் வயது, பயிர் ரகம், கிராமத்தின் அமைவிடம், வீடு, எல்லாம் அன்றாட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகளாகவே அமைந்திருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும், புயலின் புரிதலும் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு புனல் நாட்டின், புயல் நாட்டின் கலாச்சாரமாக புதியது ஒன்று பிறந்திருக்க வேண்டும். திட்டங்களாக அல்லாமல் உத்தியாக வரும் வளர்ச்சித் திட்டங்கள் அப்படி ஒன்று உருவாகும் சுதந்திரத்தை தருவதில்லை.

புயல் பற்றிய புரிதலில் தை மாதத்திலும், பங்குனியிலும்,சித்திரையின் கடுங்கோடையிலும் புயல் வந்த வரலாறு இருக்கும். காவிரி நீரைக் கட்டலாம், அது கரை அடங்கிச் செல்லும் அளவில் வேண்டும்போது விடுவிக்கலாம் என்பதில் ஐயமிருக்கும். புயலின்போது தேவை என்று நிரந்தரப் புகலிடங்களைக் கட்டுகிறோம். காவிரிக்கரைக்கு புயல் அகலா ஆபத்து என்ற புரிதலின் தெளிவு அது. தெளிவு தொடர்ந்தால் காவிரிப் படுகையில் மின் விநியோகத்துக்கு வெறும் தரையில் நிற்கும் கம்பங்களை நம்பத் தயங்குவோம். மழைக்கு மழை, புயலுக்குப் புயல் தாழ்வான பகுதியிலிருந்து லட்சக் கணக்கில் மக்களைக் கரையேற்றும் கட்டாயத்தை நிரந்தரமாக்க மாட்டோம். இந்தப் புனல் நாட்டுக்கும், புயல் நாட்டுக்கும் பொருந்தும் வகையில் தொழில்நுட்பத்தைத் தகவமைத்திருப்போம். காவிரிப் படுகை புயல் பற்றி இன்னும் ஆழமான புரிதல் வேண்டும். புரிதலின் அடிப்படையில் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் நிர்வாக, தொழில்நுட்பக் கலாச்சாரம் வேண்டும். இவை குறைபட்டால் அரசு எவ்வளவு உழைத்து என்ன பயன்?

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,
‘காவிரிக் கரையில் அப்போது…’ நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x