Published : 27 Nov 2018 09:54 AM
Last Updated : 27 Nov 2018 09:54 AM

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியா மீண்டெழ முடியுமா?

இந்தியப் பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கிப்போவது உண்மைதானா? ஆமாம். அதே சமயம், நொறுங்கிப்போகும் அளவுக்கு இல்லை, மீட்கும் நிலையில்தான் பொருளாதாரம் இருக்கிறது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைச் சில உண்மைகளிலிருந்து அறிவோம்.

1. இரு நிதியாண்டுகளாக, அட்டவணைக் குறியீட்டெண்ணுடனான ஜிடிபி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துவருகிறது.

2. இந்தியாவின் தேசிய முதலீட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் குடும்ப சேமிப்பு 34% என்பதிலிருந்து 2017-ல் 24% ஆகச் சரிந்துவிட்டது. குடும்பங்கள் அல்லாத நிறுவனங்களின் சேமிப்பு ஜிடிபியில் 5% மட்டுமே. அரசின் தேவையில்லாத குறுக்கீடுகளாலும் வரிவிதிப்பு நடவடிக்கையாலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ‘பொதுச் சரக்கு சேவை வரி’ (ஜிஎஸ்டி) நடைமுறை என்பது பெரும் தோல்வி. நான் எவ்வளவோ தடுத்தும்கூட நாடாளுமன்றத்தில் பெரிய விழா நடத்தி இதை அமல்படுத்தினார்கள்.

3. அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவு விரைவாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டது. வங்கிகள் புதிதாகக் கொடுக்கும் கடன் அளவைவிட வாராக்கடன் வளர்ச்சி வீதம் அதிகரித்தது. அரசுத் துறை வங்கிகள் நிதி வழங்கலை மேற்கொள்ள முடியாமல் நொறுங்கக்கூடிய அளவுக்கு வாராக்கடன் சுமை இருக்கிறது. இது 2019-ல் எல்லாத் துறைகளிலும் பிரதிபலிக்கும்.

4. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி அதிகம் தேவைப்பட்ட நேரத்தில் மிக முரட்டுத்தனமாக நிதி ஒதுக்கலை நிதியமைச்சகம் வெட்டிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ கொள்கை வெற்றிபெற அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு மட்டும் சுமார் ரூ. 72 லட்சம் கோடி தேவை. ஆனால், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் ‘உண்மை மதிப்பு’ 2014-க்கு முன்பு இருந்ததைவிடக் குறைவு.

5. உற்பத்தித் துறையில் அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் வளர்ச்சி 2% முதல் 5% அளவுக்கே இருக்கிறது. இத்துறைதான் தொழில் பயிற்சியே இல்லாத அல்லது ஓரளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

6. இந்திய வேளாண் விளைபொருட்கள்தான் உலகிலேயே மிகவும் மலிவு. உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலும் விளைச்சலை அதிகபட்சத்துக்கு உயர்த்த முடியவில்லை. வேளாண் விளைச்சலை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதியையும் அதே சமயத்தில் அதிகப்படுத்துவது அவசியம். அதிக பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேளாண் துறை தனது ஆற்றலுக்கும் குறைவாகவே உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டையும் அளிக்கிறது.

7. 2014 முதல் தொடர்ந்து நான்கு ஆண்டு களுக்குக் கச்சா பெட்ரோலியத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வெகுவாகக் குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 2018 நடுப்பகுதி வரை நிலையாகவே, ஒரு டாலருக்கு ரூ.65 என்று இருந்தது. இவ்வளவு சாதகமான நிலைமை இருந்தும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே 2014-17 காலத்தில் குறைந்தது.

எவையெல்லாம் அச்சுறுத்தல்

2018-ல் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ஆக இருக்கிறது. கச்சா பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 60 டாலர்களாக உள்ளது. இது நம்முடைய அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அச்சுறுத்தலாகியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடிய இந்தத் தருணத்தில் நேர்மையாக நாம் நமது பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கொள்கைகளை மாற்றிக்கொண்டு உச்சம் தொட வேண்டும். கட்டமைப்புகளில் மாற்றம் செய்து ஆண்டுக்கு 10% வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும்.

அதற்கு முதலாவதாக, காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சித்தாந்தரீதியாக மாற்று திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர்களுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஊக்குவிப்பு தர வேண்டும். வருமான வரியை முழுதாக ரத்துசெய்வதன் மூலம் ஊக்குவிக்கலாம். கடுமையான வரிகள், தீர்வைகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.

உலக அளவில் போட்டியிடக்கூடியதாக நம்முடைய பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் நாம் கையாள வேண்டும். அதற்கு அரசியல்ரீதியாகவும் நாம் காய்களை நகர்த்த வேண்டும்.

தனிநபர்களும் குடும்பங்களும் தங்களுடைய வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. பழையபடி உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். அரசின் முன்னுரிமையாக இருக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கப் புதிதாகச் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உடனடி அவசிய நடவடிக்கைகள்

1. சேமிப்புக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அளவுக்கு வட்டி வீதம் உயர்த்தப்பட வேண்டும், சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தக் கூடாது, சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

2. வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி 9% ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

3. 2019 நிதியாண்டு முழுக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 தான் என்று அரசே நிர்ணயிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் தேவைக்கேற்ப மாறுதல்களைச் செய்துகொள்ளலாம்.

1965-ல் கடுமையான உணவுதானிய பற்றாக் குறையிலிருந்து ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மாறியிருக்கிறோம். 1990-91-ல் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு ‘உயர்வேகப் பொருளாதார நாடாக’ மாறியிருக்கிறோம். நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாற்றை வினய் சீதாபதி எழுதியிருக்கிறார். ‘சோவியத் சோஷலிச பாணி ஜிடிபியாக (1950-1990) ஆண்டுக்கு 3.5% ஆக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, என்னுடைய பொருளாதார திட்டங்களைப் பயன்படுத்தி 8.5% அளவுக்கு உயர்த்தியுள்ளார் ராவ்’ என்று அதில் எழுதியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 71 ஆண்டுகளில் மிக நெருக்கடியான பொருளாதார நிலையிலிருந்து எளிதாக மீண்டுவந்திருக்கிறது. அந்தப் பழைய வரலாறே நமக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

- சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர், பொருளியல் பேராசிரியர், மத்திய வர்த்தகத் துறை முன்னாள் அமைச்சர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x