

இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்பதற்கெல்லாம் முன்னதாக காவிரிப் படுகையின் மைந்தன். விவசாயச் சங்க மாநில நிர்வாகியாக பல ஆண்டுகள் பல்வேறு கிராமங்களுக்குப் பயணித்தவர். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியவர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார். அதைப் பகிர்ந்துகொள்கிறார்.
புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் எப்படியானவை?
மக்கள், நொறுங்கிப்போயிருக்கிறார்கள்.
காவிரிப் படுகையைச் சேர்ந்தவர் நீங்கள். கடந்த காலங் களில் வந்த இயற்கைச் சீற்றங்களோடு ஒப்பிடுகையில், இந்த முறை ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எனக்குத் தெரிந்து 1952, 1954 ஆண்டுகளில் புயல் வந்திருக்கிறது. 1983-ல் பெருவெள்ளம் வந்திருக்கிறது. ஆனால், இது பெரும் கொடுமை. மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. மக்கள் உதவி கோரி கையேந்தி நிற்பது மனதைக் கலங்கடிக்கிறது!
அரசின் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?
புயல் பாதிப்பின்போது மின் விநியோகம் பாதிக்கப்படும் என்பது தெரிந்ததுதான். ஆனால், அரசு இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்தது. புயலால் மின்கம்பிகள், மின்மாற்றி கள் அனைத்தும் முற்றிலுமே சேதமாகிவிட்டன. முன்கூட் டியே ஜெனரேட்டர்களைக் கொண்டுவந்து குடிநீருக்கு வழிசெய்திருக்கலாம். குடிநீர், விளக்கெரிக்க மண்ணெண் ணெய், குழந்தைகளுக்குப் பால் என்று எதுவுமே இல்லை. மக்களிடம் பதற்றம் உண்டானதற்கும், ஆங்காங்கே அவர்கள் மறியலில் ஈடுபட்டதற்கும் இதுதான் காரணம். குடிநீர், உணவுப் பிரச்சினையை முதலில் அரசு தீர்க்க வேண்டும்.
என்ன காரணம்?
பெரும்பாலான கிராமங்களுக்கு அதிகாரிகள் செல்ல வில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் பல கிராமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காலிப் பணியிடங்கள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதன் விளைவு இது. உள்ளாட்சித் தேர்தலைச் சுயநலம் கருதி ஆளுங்கட்சி நடத்தாமல் இருப்பதால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை. இதன் விளைவையும் மக்கள் அனுபவிக்கிறார்கள். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள்தான் உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். அரிசியை அரசாங்கம் கொடுத்தாலும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு அவரிடம் பணம் இருந்தால்தான் வாங்கிக்கொடுக்க முடியும். அந்த ஏற்பாட்டை அரசு செய்யவில்லை. பல இடங்களில் மக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மோதல்கள் நடந்திருக்கின்றன. இது அரசின் நிர்வாகத் தோல்வி.
அரசும் தன்னார்வலர் அமைப்புகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன?
உடனடித் தேவைகள் என்றால் குடிநீர், பால், மண்ணெண்ணெய் இவைதான். நிவாரண முகாம்களைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒரு வேளை உணவுதான் கொடுக்கப்படுகிறது. மக்கள் பசியில் வாடும்படி விடக் கூடாது. பல இடங்களில், மக்களை வீட்டுக்குக் கிளம்பச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இயல்புநிலை திரும்பும்வரை அவர்களை முகாமிலிருந்து காலி செய்யச் சொல்லக் கூடாது. வீடிழந்தவர்கள் எங்கே போவார்கள்? அடுத்தது, பாதிப்புகள் குறித்துக் கணக்கெடுக்கும் பணி. இந்தப் பணியை முழுமையாகச் செய்வார்களா என்று பயமாக இருக்கிறது. அதிகத் தொகை செலவாகிவிடக் கூடும் என்பதால், குறிப்பிட்ட தொகைக்குள் முடித்துவிட வேண்டும் என்று அரசு விரும்புவதை உணர முடிகிறது.
பல இடங்களில் ஆதார் அட்டைகள் கேட்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்களே?
ஆம், சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கிறபோது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு விவரங்களையெல்லாம் கேட்கிறார்கள். இவை மூன்றும் இல்லாதவர்கள்கூட இன்றைக்கும் கிராமங்களில் இருக்கிறார்கள். அப்படியானவர்களை, பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று எழுத முடியாது என்கிறார்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். இது அநியாயம். எல்லா கிராமங்களிலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் மூலமாகக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டால் இந்தத் தவறுகளைத் தவிர்க்கலாம். நிவாரணம் கொடுக்கும்போதும் அந்த முறையைக் கையாண்டால் நல்லது.
பாதிப்புகளிலிருந்து மீண்டுவருவதற்குத் தொலைநோக்குப் பார்வையில் அரசு என்னென்ன செய்ய வேண்டும்?
நிரந்தரமான, பாதுகாப்பான வீடுகளைக் கட்டிக்கொடுப் பதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்ட புயல் பாதுகாப்பகங்கள் பழுதடைந்த நிலையில் கிடக்கின்றன. அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். வீழ்ந்திருக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்திவிட்டு, மறு கன்று நட்டு வளர்த்துக் காய்ப்பு வருவதற்கு ஏழெட்டு ஆண்டுகளாகிவிடும். அதுவரை, தென்னை விவசாயிகளுக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது எப்படி என்கிற முறையில் அரசு யோசிக்க வேண்டும். தென்னை மட்டுமின்றி மற்ற மரங்களுக்கும் இது பொருந்தும்.