

விவசாயியின் மகன்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கருப்பக் கவுண்டரின் கடைக்குட்டியாக 1954 மே 12-ல் பிறந்தவர் கே.பழனிசாமி. ஒரு அண்ணனும் அக்காவும் உண்டு. தாயார் தவசாயம்மாளுக்கு இப்போது 90 வயது. மனைவி ராதா. ஒரே மகன் மிதுன். பொறியியல் பட்டதாரியான மிதுனின் திருமணத்தை 2013-ல் நடத்திவைத்தவர் ஜெயலலிதா.
அரசியல் அடையாளம்
சிலுவம்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த பழனிசாமி, பிறகு ஈரோடு வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்தவர். மாணவப் பருவத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அதிமுக தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டிலேயே (1974) சொந்த ஊரில் கழகக் கிளையைத் தொடங்கி, அதன் செயலாளரானார். தொடர்ந்து, எடப்பாடி ஒன்றிய இளைஞரணி நிர்வாகியானார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெ அணியின் பக்கம் நின்றார். அதன் பலனாக 1989 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். லட்சம் பழனிசாமிகளைக் கொண்ட கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி என்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
ஓராண்டு எம்பி
1998-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றவர் பழனிசாமி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம்வகித்த அதிமுக, தனது ஆதரவை விலக்கிக்கொண்டதால் அரசு கவிழ்ந்தது. இவரது எம்பி பதவியும் பறிபோனது. 1999 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டபோது வெற்றி கிடைக்கவில்லை. 2004 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஒருவேளை அந்தத் தேர்தல்களில் வென்று டெல்லி சென்றிருந்தால், மாநில அரசியலில் இன்றைக்கு அடைந்திருக்கும் உயர்வை இழந்திருக்கவும் சாத்தியமுண்டு.
சளைக்காத காத்திருப்பு
1990-ல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அதிமுக இணைச் செயலாளரான பழனிசாமி, பிறகு சேலம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட ஆவின் தலைவர், அறங்காவலர் குழுத் தலைவர் என்று படிப்படியாக வளர்ந்தார். 1991-ல் இரண்டாம் முறையாக எம்எல்ஏ ஆனார். சேலத்தில் செல்வகணபதி, செம்மலை என்று ஏற்கெனவே அதிகமுவின் மூத்த தலைவர்கள் இருந்ததால் பழனிசாமியின் அமைச்சர் கனவு பலிக்கவில்லை. 1996 சட்ட மன்றத் தேர்தலில் தோல்வி. 2001-ல் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு எடப்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டது. 2006-ல் எடப்பாடி சட்ட மன்றத் தொகுதியிலும் தோல்வி. ஆனாலும், கட்சிப்பணியில் தீவிரமாக இருந்தார். தன் தருணத்துக்காகச் சளைக்காமல் காத்திருந்தார் பழனிசாமி!
நால்வரணியில் ஒருவராக...
அதிமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக நீடிக்க சசிகலாவையும் மீறி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததும் ஒரு காரணம். அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரானார். ‘அதுக்குள்ள அம்மா இடத்துக்கு வந்திட்டார்ப்பா’ என்று கட்சியினர் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருக்க, இன்னும் வேகமாக வளர்ந்தார் பழனிசாமி. கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் நால்வரணியிலிருந்து கே.பி.முனுசாமி நீக்கப்பட்டபோது, அந்த இடமும் இவரைத் தேடிவந்தது. செல்வாக்கும் வளர்ந்தது.
அசைக்க முடியாத அமைச்சர்
2011 சட்ட மன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வென்றார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார். பதவியில் நீடிக்கிறோமா, இல்லையா என்று அமைச்சர் பெருமக்கள் அன்றாடம் பத்திரிகை வாசித்துத்தான் தெரிந்துகொள்ள முடியும் என்றிருந்த சூழலில், ஜெயலலிதா அமைச்சரவையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். இடையில் ஆனந்தனிடம் இருந்து பறிக்கப்பட்ட வனத் துறையும் இவர் கைக்கு வந்துசேர்ந்தது. 2015-ல் கட்சியின் தலைமை நிலையச் செயலாளரானார்.
தேடி வந்த முதல்வர் பதவி
2016 தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி தொடர்ந்தபோது, நெடுஞ்சாலைத் துறையுடன் பொதுப்பணித் துறையும் கைவசமானது. ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அதிமுகவின் அதிகார மையத்துக்கு இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, ‘அறிவிக்கப்படாத’ பொருளாளர் பொறுப்பும் பழனிசாமியைத் தேடிவந்தது. கட்சியின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமக்கிற முக்கியப் பொறுப்பு அது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளுக்குப் பிறகு, சசிகலா சிறைக்குச் செல்ல, தமிழக முதல்வரானார். பின்னர், சாவகாசமாக சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, பன்னீர்செல்வத்துடன் கைகோத்தார். கட்சியிலும் இணை ஒருங்கிணைப்பாளரானார். இன்று கட்சியும் ஆட்சியும் இவர் கையில்!
நேரம் தவறாதவர்
உணவுக் கட்டுப்பாடு, நேரம் தவறாமையைத் தவறாமல் கடைப்பிடிப்பார். அமைச்சர்களுக்கான வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கும் அவர், வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் ‘8’ போட்டு நடக்கிறார். அசைவமும் உண்டு என்றாலும், பெரும்பாலும் சைவப் பிரியர். நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தினமும் சேர்த்துக்கொள்வார். தொலைக்காட்சியில் செய்திகள் மட்டுமின்றி, ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம்.
இணைந்த கரங்கள்
துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் உரசல் என்ற செய்திகள் ஒருபுறம் வந்துகொண்டே இருந்தாலும், அவருடன் நெருக்கமான உறவைப் பராமரிக்கிறார் பழனிசாமி. தன்னைப் பார்க்க வருகிற கட்சி நிர்வாகிகளிடம் எல்லாம், “ஓபிஎஸ்ஸைப் பார்த்துட்டீங்களா?” என்று கேட்பதும், பார்க்கவில்லை என்று சொல்பவர்களிடம் “அவரையும் பார்த்திடுங்களேன்” என்று சொல்வதும் பழனிசாமியின் வழக்கம். அமைச்சர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ள அதே நேரத்தில், “உங்க மாவட்டத்துல இருந்து எந்தப் பிரச்சினையும், அதிருப்தியும் வராமப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிடுகிறார். ஜெயலலிதா அமைத்த அமைச்சரவையை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பதும் இவரது புத்திசாலித்தனம்.
கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு
இளம் வயதில், உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் ‘வேகம்’ காட்டி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார். அப்போது அதிமுக அமைச்சராக இருந்த சு.முத்துசாமிதான் பிரச்சினையைப் பேசித் தீர்த்து பழனிசாமியைக் காப்பாற்றினார். பிற்காலத்தில் முத்துசாமி திமுகவில் சேர்ந்துவிட்டார் என்றாலும், அவரது மனைவி இறந்தபோது கட்சி வேறுபாட்டைக் கடந்து, அவரது வீட்டுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார்.
உலா வரும் உற்சவர்
சென்னையை மையம் கொண்டிருந்த தமிழக அரசியல், பழனிசாமிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் விரிந்திருக்கிறது. ஊர் ஊராக நடத்தப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள், கொங்கு மண்டலத்துக்கு வெளியேயும் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதும், எந்த ஊருக்குச் சென்றாலும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வதும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.
தொகுப்பு: எஸ்.கோவிந்தராஜ், கே.கே.மகேஷ்