

சில மாதங்களுக்கு முன்னால் சென்னையில் இயங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிறுவிய அவ்வை இல்லத்தில் படிக்கும் பெண் குழந்தைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் ஆதர வற்றவர்கள். மற்றவர்கள் எளிய குடும் பங்களிலிருந்து வந்தவர்கள். 12-ம் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லத் தயாராக இருப்பவர்கள். நம்பிக்கையோடு எதிர்காலத்தை அவர்கள் வரவேற்றது எனக்கு அசாதாரண நிறைவை அளித்தது.
இந்தியாவுக்கே முன்மாதிரி
80 ஆண்டுகளுக்கு முன்னால் இதே வயதுள்ள, ஆதரவற்ற ஏழைப் பெண் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு 60% கூட இருக்காது. உயிர் மிஞ்சியிருந் தால் நிச்சயம் திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்திருக்கும். அந்தக் காலகட்டத்தின் முக்கியமான தலைவர்கள் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அடிமைத் தனத்தில் ஆணிவேர் என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. இந்தப் புரிதல் இருந்த மிகச் சிலரில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இன்று தமிழகத்தின் பெண்கள் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு அடி கோலியவர் முத்துலட்சுமி ரெட்டி என்று கூறலாம்.
முத்துலட்சுமி ரெட்டி மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், மிகச் சிறந்த எழுத் தாளர் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை இலக்கியத் தரத்துக்கு உதாரண மாகக் கொள்ள முடியாது. ஆனால், நூல் முழுவதும் ததும்பி வழியும் உண்மையும் நேர்மையும் அதை முக்கியமான படைப் பாக ஆக்குகிறது.
19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் பெண்களின் நிலை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் பெண்களின் நிலை, எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய முக்கியமான ஆவணமாக இந்தப் புத்தகத்தைக் கொள்ளலாம்.
தடைகளைத் தாண்டி…
முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல் மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. பெரிய வளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டுக் கல்லூரியில் சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை. அவர் கூறுகிறார்:
இந்தியாவின் பெரிய நகரங்களில் 1,000 பிறப்புக்கு இறப்பு (ஒரு வயதுக்குள்) 350-லிருந்து 400 வரை. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான். அறியாமை, வறுமை, சுத்தமின்மை, குறைந்த கல்வியறிவு, சுகாதாரக் கட்டுப் பாடுகள்பற்றிய அறியாமை ஆகியவையே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று கொள்ள வேண்டும். எனவே, இலவசக் கட்டாய ஆரம்பக் கல்வி, இந்தியாவின் எல்லா இடங்களிலும் அவசரத் தேவையாக இருக்கிறது.
சிசுக்களுக்குப் பால் வேண்டும். உழைக் கும் பெண்களின் குழந்தைகளுக்குக் காப்பகங்கள் வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகள் வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் முத்துலட்சுமி. மகாத்மா காந்தியிடம் மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அவர், பெண்ணின் திருமண வயதை 16 வயது வரை உயர்த்தத் தனது உறுதியான ஒப்புதலை காந்தி அளித்ததையும், தேவதாசி முறையை அவர் கடுமையாக எதிர்த்ததையும் நன்றியோடு நினைவுகூர்கிறார்.
நாம் எங்கிருந்தோம், எங்கு வந்திருக் கிறோம் என்பதை அறிந்துகொள்ள உதவி யாக இருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. புத்தகத்தின் தமிழ் வடிவம் இதற்கு முன் வரவில்லை என்பது வியப்பை அளிக்கிறது. எனவே, மொழிபெயர்ப்பைச் செய்த பேராசிரியர் ராஜலட்சுமிக்கு நாம் எல்லோரும் கடன்பட்டிருக்கிறோம். மொழி பெயர்ப்பு, எளிமையான தமிழில் எல்லோ ருக்கும் புரியும்படி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் இன்று நம்மிடையே இருந் திருந்தால், புத்தகம் மிகச் செம்மையாக வந்திருப்பதுகுறித்து மகிழ்ச்சி அடைந் திருப்பார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை, வெளியீடு: அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை, சென்னை. தொடர்புக்கு: 044 - 24421113
- பி.ஏ. கிருஷ்ணன், புலிநகக்கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com