Published : 17 Aug 2014 09:06 AM
Last Updated : 17 Aug 2014 09:06 AM

தத்தளிக்கும் ‘படகு மக்கள்

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கையை நாடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் இலங்கை அகதிகள்.

கப்பல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகளைக் காவல்துறை கைதுசெய்தது என்று ஊடகங்களில் அடிக்கடி தென்படும் செய்திகளை எந்த முணுமுணுப்பும் இன்றிக் கடந்துவிடுகிறோம். பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவைக் கப்பலில் கடந்து செல்வதில் உள்ள ஆபத்துகளையும் சட்டச் சிக்கல்களையும் தாண்டி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் நோக்கி அகதிகளை இழுப்பது எது?

1970-களில் வியட்நாம் போருக்குப் பிறகு, பல நெருக் கடிகள் காரணமாக லட்சக் கணக்கில் நாட்டை விட்டு வெளியேறினார்கள் மக்கள். பல நாட்கள் படகுகளில் பயணித்து, தெற்காசியாவின் பல நாடுகளை அகதிகளாகச் சென்றடைந்தார்கள். நோய், பசி, கடல் கொள்ளையர்கள் என்று பல தடைகளைக் கடந்து அவர்கள் படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 20 லட்சம் மக்கள் வெளியேறி யதாகவும் அவர்களுள் இரண்டு முதல் நான்கு லட்சம் மக்கள் வரை கடல் பயணத்தில் இறந்திருக்கலாம் என்றும் தரவுகள் சொல்கின்றன. எஞ்சியிருப் பவர்கள், வரலாறு குத்திய ‘வியட்நாம் படகு மக்கள்' என்கிற முத்திரையோடு இன்று உலகெங்கிலும் வளர்ந்த நாடுகளில் வசித்துவருகிறார்கள். வியட்நாம் படகு மக்களின் துயரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை, கப்பல் வழியாக ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளைச் சென்றடைய வேண்டும் என்று தவிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரம்.

ஏஜெண்ட் என்னும் கடவுள்

“நான் யாழ்ப்பாணத்திலிருந்து தொண்ணூறுல தமிழ் நாட்டுக்கு வந்தோம். வந்தபோது எப்படி இருந்தோமோ அப்படியேதான் இருக்கிறோம். ஆனா, ஆஸ்திரேலியா போன பொடியன்கள் கையளவு பெரிய போனோட திரியிறாங்க” என்று குரலில் ஏக்கம் வழிய மகனை அணைத்தபடி சொல்கிறார் 34 வயது ரஞ்சனி. ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லும் ஏஜெண்டைப் பார்த்துவிட ரஞ்சனி எடுக்கும் முயற்சிகள் இன்னமும் பலனளிக்கவில்லை.

இங்கு ஏஜெண்ட் என்பவர் கடவுள்போல. அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்சி தந்துவிட மாட்டார். அகதிகளுள் ஒருவரைத் தேர்வுசெய்து, அவர் மூலமாகவே கப்பலுக்கான பிற ‘பயணிகளை'த் தேர்ந்தெடுக்கும் வேலை நடைபெறும். சட்டவிரோதமானது என்பதால், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான எல்லா வேலைகளும் ரகசியமாகவே நடைபெறும். “உண்மையில ஏஜெண்டுனு ஒருத்தர் இருக் காரான்னே எனக்குத் தெரியல. கையில இருக்கிற கொஞ்சம் காசை இவங்களை நம்பித் தரவும் தயாரில்லை” என்று ஏஜெண்டைச் சந்திப்பதற்கான தனது பிடிவாதத்துக்குக் காரணம் சொல்கிறார் ரஞ்சனி.

ஷெல்லடிச்ச வாழ்க்கை

ஆஸ்திரேலியாவை நோக்கிய பயணத்தைப் பற்றி அங்கு சென்றவர்களிடமிருந்து நிறைய தெரிந்துவைத்திருக்கிறார் ரஞ்சனி. “முதல்ல ஒரு வாரம் தலைசுத்தல், வாந்தி எல்லாம் இருக்கும். அப்புறம் சரியாயிடும். சரியா 13-வது நாள் ஆஸ்திரேலியாவுல இறங்கிடலாம். அங்க வீடு கொடுத்து மாசாமாசம் சம்பளமும் கொடுப்பாங்க. இங்க போல பத்துக்குப் பத்து வீடு இல்ல. ஆட்கள் எவ்வளவு பேர் இருக்காங்களோ அதுக்கு ஏத்த மாதிரி பெரிய வீடு. பிள்ளைங்களுக்குப் படிப்பும் சொல்லித்தர்றாங்க. இங்க இஞ்சினியரிங் படிச்சிட்டு பெயிண்டிங் வேலதான் பார்க்க முடியுது. அங்க அப்படி இல்ல. இதுக்கு மேல என்ன வேணும்?” என்று கண்களில் கனவு விரியப் பேசுகிறார்.

போர் முடிந்த நிலையிலும், இலங்கைக்குத் திரும்பிப் போக வேண்டும் என்று இவர்களில் பெரும்பாலானவர்கள் நினைப்பதில்லை. “ரெண்டு வருசத்துக்கு முன்னாடி யாழுக்குப் போனேன். ஒரு வருசத்துக்கு மேல நிக்க முடியல. ஷெல்லடிச்சு இடிஞ்ச வீட்டைக் கட்ட பணம் வேணும். அங்க எவ்வளவு முயற்சி எடுத்தும் வேலை கிடைக்கல. திரும்ப முகாமுக்கே வந்துட்டேன்” என்கிறார் ரஞ்சனியின் உறவினர் சிவராசா. சிவராசா திரும்பி வந்த பிறகு, அவரது முகாமில் உள்ளவர்களுக்கு இலங்கை செல்ல வேண்டும் என்று தோன்றுவதில்லை. “தொண்ணூறுல நான் கிளம்பினபோது ஆர்மிக்கும் பொடியங்களுக்கும் சரியான சண்டை. கூட்டம் இருக்கிற இடமா பார்த்துக் குண்டு போடுவாங்க. சோறாக்கி வெச்சா அதுல ஷெல்லடிக்கும். முள்வேலி குத்திக் கிழிக்கும். முடியாமதான் இந்தியா வந்தோம். இங்க ஷெல் இல்ல, குண்டு இல்ல, வாழ்க்கையும் இல்ல. ஆஸ்திரேலியாவுக்குப் போற மக்கள் சொல்ற கதைகளக் கேட்டா ஆசையா இருக்கு” என்கிறார் ரஞ்சனி.

இந்த ஏக்கமும் ஆசையும்தான் பல ஏஜெண்டுகளுக்கு முதலீடு. கப்பல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குப் போக நபருக்கு ஒரு லட்சம் வரை வசூலிக்கிறார்கள் ஏஜெண்டுகள். எப்போது வேண்டுமானாலும் காவல் துறையினரிடம் சிக்கலாம் என்பதால், கொடுத்த பணமும் நிச்சயமில்லை. கார் ஓட்டுநரான கணவர் கொண்டுவந்த பணத்தில் சேர்த்து வைத்து, அதைக் கொண்டு முகாமில் கொடுத்த வீட்டை விரிவுபடுத்திக்கொண்ட விமலா, வசதியான அந்த வீட்டை முகாமில் இன்னொருவருக்கு விற்றுத்தான் ஆஸ்திரேலியா போவதற்கு ஏஜெண்டிடம் பணம் கொடுத்தார். “இப்போ அக்காவோட பத்துக்குப் பத்து வீட்டுல இருக்கேன்” என்ப வருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

அலைந்ததுதான் மிச்சம்

ராணியின் நிலை இதைவிட மோசம். வளமான வாழ்க்கை காத்திருக்கிறது என்று கணவருக்கு ஆசை காட்டி, சீட்டு சேர்ந்து ஏஜெண்டிடம் லட்சம் ரூபாய் முன்பணம் கட்டி யிருக்கிறார் ராணி. “நாகப்பட்டினம், கடலூர், காரைக் கால் என்று ஒன்றரை மாதம் கடற்கரையோரங்களில் மூன்று சிறிய குழந்தைகளோடு அலைந்ததுதான் மிச்சம். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் கப்பலக்கூட கண்ணுல காட்டல” என்கிறார். லட்ச ரூபாய் தொலைந்த கோபத்தில், கணவர் வேறு முகாமில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தவர் என்பதால், வர வேண்டிய உதவித்தொகை இரண்டு மாதங்கள் வராமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் ராணி. “ஒரு பிள்ளைன்னா யாருகிட்டேயாவது கையேந்தலாம். மூணு பிள்ளைங்களுக்குச் சோறு போடுங்கன்னு எங்க போயி கேட்க?” என்று கதறும் கண்களில் இப்போதும் ஓரமாய் மின்னுகிறது ஆஸ்திரேலியக் கனவு. “இங்க பாருங்க, இவனப் படிக்க வைக்க முடியலன்னு இந்த வருஷம் அரசாங்கப் பள்ளியில சேர்த்துட்டோம். இங்கிலீஷ் மீடியம்ல படிச்சிட்டு அவனுக்கு இங்க புடிக்கல. ஆஸ்திரேலியான்னா எனக்கு இந்தக் கவல இல்ல” என்று மகனைக் காட்டிச் சொல்கிறார்.

இந்தியாவில் என்ன இருக்கு?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முயற்சியில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் ஆள் அரவமற்ற கடற்கரை யோரம் படகில் ஏற்றப்பட்டு, பின்னர் நடுக்கடலில் கப்பலுக்கு மாற்றப்படுகிறார்கள். கப்பல் பயணத்தின் அழுத் தம் தாங்காமல் சிலர் இறந்த கதைகளும் இவர்களை வந்தடை கின்றன. ஆனால், எல்லா பயங்களையும் சிக்கல்களையும் கடந்து நிற்கிறது ஆஸ்திரேலியக் கனவு. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பு வதைப் பற்றிய செய்திகளும் இவர்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.

“ஆஸ்திரேலியாவுக்கு இனி யார் வேணும்னாலும் போகலாம், பிரச்சினை இல்லைனு ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்க, தமிழ்நாட்டுல எல்லா முகாம்களும் காலியாகிடும். இந்தியாவுல என்ன கிடக்கு எங்களுக்கு? அதான் செத் தாலும் பரவாயில்லனு கிளம்புறாங்க. உங்களுக்குத் தெரிஞ்ச ஆஸ்திரேலியாகாரங்க யாராவது இருந்தா சொல்லுங்க, எங்கட உழைப்பைப் பத்தி அவங்களுக்குத் தெரியாது. வாய்ப்பு கிடைச்சா அவங்களுக்கு ரொம்ப நன்றியுள்ள வங்களா இருப்போம்” என்று கை பற்றி நெகிழ்கிறார் ரஞ்சனி.

இடையில் இருக்கும் கடல், கண்ணீர் தொலைவுதான் அவர்களுக்கு. எனினும், கடலைக் கடப்பதைவிடக் கண் ணீரைக் கடப்பதுதான் அவர்களுக்குப் பெரும் சிரமமாக இருக்கிறது.

(அகதிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன; அவர்கள் தங்கியிருக்கும் முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.)

- கவிதா முரளிதரன்,
தொடர்புக்கு: kavitha.m@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x