Published : 11 Oct 2018 09:33 AM
Last Updated : 11 Oct 2018 09:33 AM

தினகரன் யார் பக்கம்?

ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிரி, பிரதமர் மோடியின் தீவிர எதிர்ப்பாளர், பாஜகவைக் கொள்கைரீதியாக எதிர்ப்பவர் என்பதெல்லாம் டிடிவி தினகரன் மீது வைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் பார்வைகள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி சமீபத்திய நக்கீரன் கோபால் கைது வரை தினகரன் எடுத்த நிலைப்பாடுகளும் முன்வைத்த கருத்துகளும் எடுத்துவைத்த வாதங்களும் மேற்கண்ட பார்வைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட திசையில்தான் பயணித்துவருகின்றன.

முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். ஓபிஎஸ்ஸின் மெரினா தியானத்துக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் மீதான டெல்லியின் பார்வை முற்றிலும் எதிர்மறையாகவே இருந்தது. அதன் நீட்சியாகவே இரட்டை இலை முடக்கம், அதிமுக அணிகள் உருவாக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பதெல்லாம் நடந்தேறின. அதன் உச்சம்தான், தினகரன் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது.

ஜாமீனில் வெளியே வந்த தினகரன், பாஜகவையும் மத்திய அரசையும் மிகத் தீவிரமாக எதிர்த்தார். அந்த எதிர்ப்பின் வீரியத்தைப் பார்த்து அடுத்து வரவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவு எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்தது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் தனித்தனியே ஆதரவு கோரிய பாஜக, தினகரன் தரப்பை அணுகவே இல்லை. ஆனாலும், சசிகலாவின் உத்தரவின்படி தங்கள் ஆதரவு எம்பிக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்றார்  தினகரன். அதன்மூலம், வெளிப்பார்வைக்கு பாஜகவை எதிர்த்துவிட்டு, முக்கியமான தருணத்தில் பாஜகவைப் பகைத்துக்கொள்ளாமல் காய் நகர்த்துகிறார் தினகரன் என்ற விமர்சனம் எழுந்தது.

அதேபோல, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்புப் போராட்டத்தைத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகம் வந்த மோடியின் விமானம் தரையிறங்க முடியாத அளவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. GoBackModi என்கிற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.

அதுநாள் வரை மோடியின் எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தினகரனோ ‘‘தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியான தீர்வாகாது. ஆகவே, பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்றார். ஆக, தேர்தல் என்று வரும்போது பாஜகவைப் பகைத்துக்கொள்ள தினகரன் விரும்பவில்லை, போராட்டம் என்று வரும்போதும் மோடியை எதிர்க்க தினகரன் விரும்பவில்லை என்பது வெளிப்படையானது.

அடுத்து, ஓபிஎஸ்ஸுடனான சந்திப்பு சர்ச்சை. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்திவருவதாகச் சொன்ன ஓபிஎஸ்ஸுடன் தினகரன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார், சசிகலா சிறையிலிருக்கும் நிலையில், ஓபிஎஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் துளியும் உறுதிகுலையாமல் இருக்கிறார் தினகரன் என்பதுதான் ஊடகங்களில் உருவாக்கப்பட்ட பிம்பம். ஆனால், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘தர்ம யுத்தம்’ நடந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஓபிஎஸ்ஸைச் சந்தித்துப் பேசியிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை ஓபிஎஸ்ஸும் உறுதிசெய்திருக்கிறார்.

இதன்மூலம், வெளியில் காட்டிவரும் எதிர்ப்புக்கு மாறாக, அதிமுகவுக்குள் இன்னும் ரகசிய பேரங்கள் நடத்திவருகிறார் தினகரன் என்பது அம்பலமானது. இதோடு நில்லாமல், 2018 செப்டம்பர் இறுதியிலும்கூட ஓபிஎஸ் – தினகரன் சந்திப்புக்கான முயற்சிகள் நடந்ததாகச் சொன்ன தினகரன், அதுபற்றிய உண்மைகளை இன்னும் மூன்று மாதங்களில் ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார் என்றும் அப்படி ஒப்புக்கொள்ளவைக்கும் அளவுக்கு என்னிடம் ரகசியங்கள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார்.

ஆக, ரகசியச் சந்திப்பு என்று சொல்லி ஓபிஎஸ்ஸைச் சந்தித்ததைப் பொதுவெளியில் சொன்னதோடு, ஓபிஎஸ் குறித்த ரகசியங்கள் தன்வசம் இருப்பதாகப் பொதுவெளியில் வைத்து தினகரன் சொல்வது என்ன மாதிரியான அரசியல் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இறுதியாக, ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். அந்தக் கைது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் முயற்சி என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வெளியிட்டபோது, தினகரனின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது.

‘‘ஆளுநரைப் பற்றி அவதூறாகச் செய்தி வெளியிட்டால் கைது செய்யத்தான் செய்வார்கள். இதில் தவறு இருப்பதாகக் கருதவில்லை’’ என்றார் தினகரன். அதோடு நிறுத்தவில்லை. ‘‘என்னைப் பற்றியும் நக்கீரன் கோபால் அவதூறாக எழுதினார்.  தனால் அவர் மீது வழக்குத் தொடுத்து ஆறுமாதம் தண்டனை பெற்றுக்கொடுத்தேன். இப்போது நக்கீரன் கோபால் மேல்முறையீடு செய்திருக்கிறார். இப்போது நான் நினைத்தால் அந்த வழக்கைத் துரிதப்படுத்த முடியும்’’ என்றும் கூறியிருக்கிறார்.

அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு பிரச்சினையிலும் தனித்த பார்வை கொண்டிருப்பதும் எதிர்பார்க்கக்கூடியது. தினகரன் விஷயத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் மீனுக்குத் தலையும் பாம்புக்குத் வாலையும் காட்டுகிறவராக இருக்கிறார் என்பது. பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு மாறுபட்ட ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள தினகரன் முற்படுகிறார். ஆனால், அவருடைய அரசியல் இன்று எந்தவிதத்திலும் அவர்களிடமிருந்து மாறுபட்டதாக இல்லை!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x