Published : 10 Oct 2018 09:27 am

Updated : 10 Oct 2018 09:27 am

 

Published : 10 Oct 2018 09:27 AM
Last Updated : 10 Oct 2018 09:27 AM

இந்திய ரூபாய் மீண்டும் சர்வதேச பயன்பாட்டுக்கு வருமா?

இந்தியாவின் ரூபாய் ஒருகாலத்தில் பல நாடுகளில் செல்லுபடியானது என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம். ஜாவா, போர்னியோ, மகாவ், மஸ்கட், பாஸ்ரா, ஜான்சிபார் ஆகிய நகரங்களில் வாணிபத்துக்கு ரூபாய் ஏற்கப்பட்ட காலம் உண்டு. வளைகுடா நாடுகளில் ஐந்து நூற்றாண்டுகள் இந்திய ரூபாய் புழங்கியது. 1970-கள் வரையில் வளைகுடா ரூபாயை ஓமான் பயன்படுத்தியது.

காலனிய ஆட்சியில் ரூபாய்


ஐந்தாவது ஜார்ஜ் 1911-ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மன்னராகப் பதவியேற்ற பிறகு, புதிய ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. மொகலாயர் கால ரூபாயின் மதிப்பையொட்டியே காலனியாதிக்க ரூபாயும் வணிகர்களாலும் அங்கே குடியேறியவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. சிந்து, இலங்கை, பர்மா ஆகியவை இந்தியப் பிரதேசத்துடன் சேர்க்கப்பட்டதால் வளைகுடாவில் ரூபாய்க்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான இந்திய வர்த்தகச் சமூகங்கள் அங்கே வாணிபத்தில் ஈடுபட்டதால் ரூபாயை எளிதாக அந்தந்த நாட்டு நாணயத்துக்கு ஈடாக மாற்றிக்கொள்ள முடிந்தது.

துபாயிலும் இதர வளைகுடா நாடுகளிலும் ரிசர்வ் வங்கியில் அச்சடிக்கப்பட்ட ‘வளைகுடா ரூபாய்’ பரிவர்த்தனைகளில் 1966 வரையில் செல்லுபடியானது. 1950-கள் தொடங்கி 1970-கள் வரையில் கொங்கணக் கடலோரத்தில் தங்கக் கடத்தல் அதிகளவில் நடந்தது. வளைகுடா நாடுகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி மலிவாகத் தங்கத்தை வாங்கி, இந்தியாவுக்குக் கடத்திவந்து நல்ல விலைக்கு விற்று லாபம் ஈட்டினர். 1965 பாகிஸ்தான் போருக்குப் பிறகு பணமதிப்புநீக்க நடவடிக்கையை இந்திய அரசு எடுத்த பிறகே அந்த நாடுகள் சொந்த நாட்டு செலாவணிகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இப்போதும்கூட நேபாளமும் பூடானும் இந்திய ரூபாயைப் பயன்படுத்துகின்றன.

சரியும் மதிப்பு

ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு தொடர்ந்து கவலை தருகிறது என்றாலும், ஒரு விஷயம் உறுதி. ‘வாட்ஸ்அப்’ தகவல்கள் கூறுவதைப் போல, ‘ஒரு டாலருக்கு ஒரு ரூபாய்’ என்ற சமநிலையில் ரூபாய் மதிப்பு என்றுமே இருந்ததில்லை. 1947-ல் ஒரு டாலரின் மதிப்பு ரூ.3.30. 1966-ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கையால் அது ரூ.7.50 ஆனது. 1995-ல் ரூ.32.40 ஆனது. ரூபாய் மதிப்பிழந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. பாகிஸ்தான், சீனாவுடன் நடந்த போர்கள், ஐந்தாண்டு திட்டங்களைச் செயல்படுத்த வெளிநாடுகளிடம் வாங்கிய கடன்கள், அரசியல் ஸ்திரமற்ற நிலை,

1973-ல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி என்று நீளமாகப் பட்டியலிடலாம். பொதுத் தேர்தலுக்கு முன் ரூபாயின் செலாவணி மதிப்பு சரிவது என்பது வரலாற்றில் இதுவரை ஆறு முறை நிகழ்ந்துள்ளது. மாலின் குப்தா, விஷால் சாப்ரியா 2013-ல் வெளியிட்ட தரவுகள் இதைத் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு வீழ்ந்துகொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பைச் சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் பல வழிகள் இருக்கின்றன. அன்னியச் செலாவணி சந்தையில், கையிருப்பில் உள்ள டாலரை விற்பது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து டாலர்களைத் திரட்ட கடன் பத்திரம் வெளியிடுவது (2013-ல் மேற்கொள்ளப்பட்டது) அதில் சில. நான் கூடுதலாக என்ன சொல்வேன் என்றால், அமெரிக்க டாலரை வர்த்தகப் பரிமாற்றத்துக்கு நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும். ரஷ்யா போன்ற நட்பு நாடுகளுடன் நம்முடைய ரூபாயையே மாற்றுச் செலாவணியாக ஏற்பதற்கு உடன்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் கவனமாகக் குறைக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் நிதியை ஊதாரித்தனமாகச் செலவழிக்கக் கூடாது. ஒரு நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குப் பதிலாக நாம் ஒரு பொருளைத் தர முடியாவிட்டால் ரூபாயை பரிமாற்றச் செலாவணியாக மாற்ற முடியாது. ரூபாயின் மதிப்பு குறைந்தால் இறக்குமதிச் செலவு அதிகரித்து பிரச்சினையை மேலும் தீவிரமாக்கிவிடும்.

ஏன் வரிக் குறைப்பு முக்கியம்?

கறுப்புப் பணத்தை ஒழிக்க நான்கு நடவடிக்கைகள் அவசியம். முதலாவது, வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும், இரண்டாவது, முக்கியமான துறைகளைச் சீர்திருத்த வேண்டும், மூன்றாவது, ரொக்கமில்லா பரிமாற்றத்துக்கு ஊக்குவிப்பு தர வேண்டும், நான்காவது, வரி ஏய்ப்பு செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் – கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அதிகம் பேர் வரி செலுத்த முன்வருவார்கள், வரி வருவாய் பெருகும். ரூபாயின் மதிப்பு உயர இதுவும் உதவும்.

பிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு விகிதங்களில் வரியைப் பகிர்ந்துகொள்ள உடன்பாடு காண்பதும் உதவும். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணம், இந்தியத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் பணம் ஆகிய தகவல்கள் முழுமையாகத் திரட்டப்பட்டுத் தொகுக்கப்பட வேண்டும். இவை வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தரப்பட வேண்டும்.

கூட்டணிப் பரிமாற்றம்

முக்கியமாக, இந்திய ரூபாயைச் சர்வதேசச் செலாவணிகளில் ஒன்றாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீனத்தின் யுவான் இன்று பல நாடுகளில் டாலரைப் போலவே மாற்றுச் செலாவணியாக ஏற்கப்படுகிறது. பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் ரொக்கத் தொகுப்பில் யுவானைச் சேர்க்க வேண்டும் என்று

2015-ல் விடாப்பிடியாக வலியுறுத்தி சீனம் சாதித்தது. இந்திய ரிசர்வ் வங்கி ‘மசாலா கடன் பத்திரங்கள்’ உள்ளிட்டவை மூலம் இதைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துவருகிறது. 1991-க்கு முன்புவரை, நேரடியாக மாற்றத்தக்க செலாவணியாக அனுமதிக்கப்படாத ரூபாய், அந்நிலையிலிருந்து பிறகு மீண்டது. ஆயினும் உலக வர்த்தகத்தில் பயன்படும் 10 செலாவணிகளில் ஒன்றாக ‘ரூபாய்’ இன்னும் ஏற்கப்படவில்லை.

ரூபாயின் செலாவணி மதிப்பை உயர்த்த மந்திரக் கோல் எதுவும் இல்லை. ஆனால் ரூபாயை மாற்றத்தக்க செலாவணியாக ஏற்க மறுக்கும் நிறுவனங்களின் பிடிவாதத்தைப் புரட்டிப்போட வேண்டும். முன்பிருந்ததைப் போல சர்வதேச வர்த்தகத்தில் ரூபாய் அப்படியே ஏற்கப்பட அதன் பயன்பாட்டின் மீதுள்ள தடைகளை அகற்ற வேண்டும்!

- பெரோஸ் வருண் காந்தி,

சுல்தான்பூர் பாஜக எம்.பி.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x