Last Updated : 11 Aug, 2014 08:34 AM

 

Published : 11 Aug 2014 08:34 AM
Last Updated : 11 Aug 2014 08:34 AM

இந்த உலகுக்கும் அப்பால்...

பூமியைத் தவிர, வேறு கிரகங்களில் உயிரினம் ஏதும் இருக்கிறதா என்று அக்கறையாகத் தேடும் முதல் தலைமுறை நாம்தான் என்கிறார் சாரா சீகர். இவர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். “நம்முடைய சூரியக் குடும்பத்தைத் தாண்டி, அருகில் உள்ள நூற்றுக் கணக்கான நட்சத்திரங்களில் உயிரினம் ஏதும் இருக்கிறதா என்று தீவிரமாக ஆராயும் கட்டத்தில் இருக்கிறோம்; இன்னும் ஓரிரு தசாப்தங்களில் அவற்றைக் காணும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கக்கூடும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சாரா சீகர்.

ஒளியாண்டுகளைக் கடந்து…

நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா? நாம் தயாராக இருப்பதாக விண்வெளி வீராங்கனை ஜோசிலின் பெல் பர்னல் நினைக்கவில்லை. அடுத்த 20 ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகளுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களுடன் அல்லது மனிதனுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்புகிறார். ஆனால், அந்தச் சந்திப்புக்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்று கூறும் அவர், அவர்களைப் பார்த்தால், நாம் என்ன சொல்வதாக இருக்கிறோம் என்று கேள்வி எழுப்புகிறார். சூரியக் குடும்பத்தில் உள்ள பூமிக்கும் அருகில் உள்ள நட்சத்திரங்களுக்கும் உள்ள இடைவெளியே பல ஒளியாண்டுகளாக இருக்கிறது (ஒளியாண்டு = 9,46,073,04,72,580 கிலோ மீட்டர்). நாம் அனுப்பும் ரேடியோ சமிக்ஞைகளாக இருந்தாலும், அந்த நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வெளியிடப் படும் ரேடியோ சமிக்ஞையாக இருந்தாலும், போய்ச் சேரவும் வந்துசேரவும் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளாகின்றன.

அப்படியே நாம் சிக்னல்களைப் பெற்றுவிட்டாலும், உடனே அவர்களுடன் உரையாடலில் இறங்கிவிடப் போவதும் இல்லை. வேற்றுக் கிரகங்களில் வாழும் மனிதர்களிடமிருந்து வரக்கூடிய ரேடியோ சமிக்ஞைகளுக்காகத் தினந் தோறும் இடைவிடாமல் கண்காணிப்பு தொடர்கிறது. குரலாகவோ சூசகமான சமிக்ஞையாகவோ ஒளி அடையாளமாகவோ வேறு எதுவாகவோ விண் வெளியின் எந்தத் திசையிலிருந்தாவது, ஏதாவது வருகிறதா என்று நவீனக் கருவிகள் உதவியோடு தொடர்ந்து தேடுகின்றனர். ஆனால், இதுவரையில் ஒரு முனகல் சத்தம்கூட எங்கிருந்தும் வரவில்லை. 1967-ல் துடிப்பு விண்மீன்களை (பல்சர்) பெல் பர்னல் பார்த்ததே இதுவரை பெரிய மகிழ்ச்சி கலந்த பரபரப்புடன் பேசப்படுகிறது.

அசரீரியுடன் பேசுகிறோமா?

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்ற தனிமை உணர்வைப் போக்க, அசரீரியுடன் பேசுவது போன்ற முயற்சி இது. ஒருவேளை நாம் வேற்றுக் கிரகவாசிகளைக் கண்டுபிடித்தால், அது அவர்கள் அனுப்பும் ரேடியோ சமிக்ஞைகள் மூலமோ, வாழ்த்துச் செய்திகள் மூலமோ நிச்சயம் இருக்க முடியாது. அவர்கள் நம்மைக் கடந்துபோன பாதையில் விட்டுச்செல்லும் சில தடயங்கள் மூலம்தான் அவர்கள் வந்தார்கள், போனார்கள் என்பதை நாம் ஊகிக்க முடியும். பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கிரகங்களில் சுமார் 1,800-ஐ மட்டுமே, கருவிகளின் உதவியுடன் ஓரளவுக்கு நாம் அடையாளம் கண்டிருக்கிறோம். நாசாவிலிருந்து 2009-ல் ஏவப்பட்ட நவீன விண் நோக்கியால்தான் இந்த வாய்ப்பும் நமக்குக் கிடைத்தது. 2018-ல் நிறுவப்படவுள்ள ஜேம்ஸ் வெப் விண்நோக்கி, மேலும் பல தகவல்களை நிச்சயம் நமக்கு அளிக்கும். இப்போதுள்ள ஹப்பிளுக்குப் (விண்ணோக்கி) பதில் ஜேம்ஸ் வெப் அந்தப் பணியைச் செய்யவிருக்கிறது.

பிற கிரகங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள ரசாயனக் கூட்டுக் கலவைகளை நாம் பார்க்கும் விதத்தில் வெளிப்படுத்தி, அதன் மூலம் தங்களுடைய இருப்பை வேற்றுக் கிரக மனிதர்கள் தெரிவிப்பார்கள் என்று நம்பலாம். நிச்சயம் அந்தக் கூட்டுப்பொருள்களை நம்முடைய ஆய்வகங்களிலோ வேறு எங்கோ நம்மால் தயாரிக்க முடியாது. வேற்றுக் கிரகத்தில் வசிக்கும் நம்மைப் போன்ற அல்லது நம்மைவிடப் புத்திசாலித்தனமான மனிதர்கள் நம்முடைய கிரகத்தை ஆராயும் வாய்ப்புபெற்றால், இங்கே ஏராளமான மக்கள் வாழ்வதை நிச்சயம் ஊகிப்பார்கள். ஒரு கிரகத்தில் வாழும் மக்கள், அதன் சுற்றுப்புறத்தில் ரசாயனச் சமநிலையொன்றை நிச்சயம் ஏற்படுத்துகிறார்கள். அதைப் பார்க்கும் பிற கிரகத்து மனிதர்கள், அங்கே உயிரினங்கள் வாழ்வதை அடையாளம் கண்டுவிடுகிறார்கள்.

இசையா இம்சையா?

இன்னொரு கிரகத்தில் மனிதர்கள் இருந்தால், அவர்கள் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று இயல்பாக எண்ணுகிறோம். எனவே, அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஆக்சிஜனும் தண்ணீரும் பிற கிரகங்களில் இருக்கிறதா என்று பார்க்கிறோம். இருந்தால் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன என்று ஊகிக்க இடமிருக்கிறது. உயிர் என்பதற்கும் மனிதன் என்பதற்கும் நிச்சயமான வரையறை இதுதான் என்று கூறிவிட முடியாது. உயிர் என்பதும் இசை அல்லது கலாச்சாரம் என்ற சொல்லைப்போல. நமக்கு இசையாக இருப்பது மற்றவர்களுக்கு இம்சையாக இருக்கலாம். நம்முடைய கலாச்சாரம் மற்றவர்களுக்குக் கலாச்சாரமாகத் தெரியாமல்கூட இருக்கலாம். அப்படியும் இன்னொரு கிரகத்தையும் நம்மைப் போன்ற இன்னொரு உயிரியையும் பார்த்துவிடத் துடிக்கிறோம் என்பதே உண்மை.

தி கார்டியன்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x