ஏன் இந்த அமைதி?

ஏன் இந்த அமைதி?
Updated on
3 min read

சமீப கால இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மாபெரும் தேர்தல் வெற்றியை மோடி அரசு பெற்ற பிறகு, இந்திய அரசியல் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது. மோடியின் மகத்தான வெற்றிக்குப் பின், ‘மதச்சார்பற்ற அரசியல்’ என்ற தத்துவமே வீழ்ந்துபோய்விட்டதாக எல்லோரும் நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. மேலும், மோடி அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பதே தவறு என்று நினைக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

டெல்லியில் ‘மகாராஷ்டிர சதன்’ என்ற மகாராஷ்டிர மாநில அரசின் இல்லத்தில் ரமலான் நோன்பில் இருந்த ஒரு இஸ்லாமிய அரசு ஊழியரின் வாயில் சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் பலாத்காரமாகச் சப்பாத்தியைத் திணித்ததைத் தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் எத்தனை எதிர்க் கட்சித் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள் என்பதைக் கணக்கெடுத்துப் பார்த்தாலே நான் சொல்வதன் உண்மை தெரியும்.

ஊடகங்களும்கூட இந்த மனநிலையை நோக்கி நகர்வதாக நான் கருதுகிறேன். ராஜபக்சவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமியையும் சேஷாத்திரியையும் கண்டித்துக் குரல் எழுப்பிய தமிழகக் கட்சிகளும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருந்த ‘பட்டியலின மற்றும் மலைவாழ் மக்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சீர்திருத்த’ சட்ட முன்வடிவை நாடாளுமன்ற சபாநாயகர் ஓசையின்றி நிலைக்குழுவுக்கு அனுப்பிக் கிடப்பில் போட்டபோது ஊடகங்களும் ஊமைகளாகிப்போனது ஏன்? “மோடியின் வெற்றி இஸ்லாமியர்கள் மீது விழுந்த அடி” என்று அசோக் சிங்கால் பேசியபோது ‘சிறுபான்மையினக் காவலர்கள்’ எங்கே போனார்கள்? சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 60 ஊராட்சிகளில் இந்து மத வழிபாடுகளைத் தவிர, வேறு மத வழிபாடுகள் நடத்தக் கூடாது - வேற்று மதத்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்று ஊராட்சி மன்றங்களே தீர்மானம் நிறைவேற்றி, அதை மாநில அரசின் சட்டத்தின் ஒத்துழைப்போடு அமல்படுத்தும்போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்புகிற தெய்வங்களை வழிபட்டு, அவர்கள் மதிக்கிற மதங்களைப் பின்பற்ற உரிமை உண்டு என்று உத்தரவாதம் கொடுத்திருக்கும் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் ‘பாதுகாவலர்கள்’ எங்கே போனார்கள்? ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தூங்கியதிலிருந்து, ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்பு என்பது உட்பட இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை தினசரி விடாமல் ‘விவாதக் கச்சேரி’ நடத்தும் தேசியத் தொலைக்காட்சிகள், இதைப் பற்றியெல்லாம் ஏன் விவாதிப்பதில்லை?

“உத்தரப் பிரதேசத்தில் சஹரான்பூரில் நடக்கும் வகுப்புவாதக் கலவரங்களை ஒடுக்குவதற்கு ஒரே வழி 2002-ல் குஜராத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள்தான். அந்த நடைமுறைகளைப் பாரதம் முழுவதும் விஸ்தரிக்க வேண்டும்” என்று பாஜகவின் அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஜி. ரவி பகிரங்கமாகத் தனது ட்விட்டரில் பதிவுசெய்யும்போது, மனித உரிமை ஆர்வலர்கள் எங்கே போனார்கள்?

மத்திய அரசின் அதிகாரிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது, இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடும்போதும், சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகள் ‘சமஸ்கிருத வார’த்தைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டபோதும் தமிழ்த் தேசியம் பேசும் புரட்சியாளர்கள் எங்கே போனார்கள்?

இந்தியா என்றைக்கும் மாறாது

அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் பொதுநல ஊழியர்களும் ஊடக நண்பர்களும் நடந்து முடிந்த தேர்தல்களில் வெற்றி தோல்விகளின் காரணங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் தோற்றுப்போனதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அது இந்திய தேசத்தின் எதிர் காலத்தின் மிகப் பெரும் அவலம். மதச்சார்பற்ற அரசியல் தோற்கவும் இல்லை. அதை மக்கள் நிராகரிக்கவும் இல்லை. அதை நிராகரிக்கும் மனநிலை இந்திய மக்களின் மரபணுக்களில் ஒருநாளும் இருந்ததில்லை. இனி, இருக்கப்போவதும் இல்லை.

ஊடகங்கள் தினசரி அம்பலப்படுத்திய புரையோடிப்போன ஊழல், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், முடங்கிப்போன பொருளாதாரம், வணிகமயமான கல்வி, சீரழிந்துபோன தினசரி நிர்வாகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் மண்டிக்கிடக்கும் கருப்புப் பணம், அவர்களுக்குத் தரப்பட்ட அநியாய சலுகைகள், அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்கள், அதிகார மையங்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் இருக்கும் நெருக்கம், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களால் செயலற்றுப்போன அரசின் தலைமை, குடும்பங்கள் பங்கு வைத்துக்கொண்ட அரசு அதிகாரம், தரமற்றவர்களுக்கும்-தரங்கெட்டவர்களுக்கும் தரப்பட்ட அரசுப் பதவிகள்-அங்கீகாரங்கள், சிதைந்துபோன சட்டம்-ஒழுங்கு, முடங்கிப்போன நாடாளுமன்றம், பஜனை மடங்களாக மாறிப்போன சட்டமன்றங்கள், வளைந்துபோன நீதித் துறையின் துலாக்கோல், விலைபோன அரசு இயந்திரம்- இவற்றையெல்லாம் மோடி மாற்றிவிடுவார் என்று நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மதச்சார்பற்ற அரசியலை எதிர்த்து அவர்கள் வாக்களிக்கவில்லை. இதை நமது அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜனநாயக வெற்றிடம்

இந்தியத் தேர்தல் அரசியலில் நடந்துள்ள ஒரு ‘விபரீத விபத்தின்’ பரிணாமங்களை இந்திய அரசியல் கட்சிகள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று நான் அஞ்சுகிறேன். மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்துச் சென்ற காங்கிரஸ் கட்சிக்கு, எதிர்க் கட்சி எனும் அங்கீகாரத்தைக் கூடப் பெற முடியாத தோல்வி; உழைக்கும் வர்க்கத்தினர், அடித்தட்டு மக்கள் ஆகியோருக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவு; தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் ஆகியோரைத் தங்களது வாக்கு வங்கிகளாக வைத்திருந்த மாயாவதி, லாலு, நிதீஷ் குமார், முலாயம் போன்றோருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு; இந்தி பேசாத மக்களின் குரலாக ஒலித்த திமுக போன்ற இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள சறுக்கல் ஆகியவை நாடாளுமன்றத்தில் பெரும் வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. ஏறத்தாழ 80% இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்த அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத்துக்குள் இதுவரை பேசிவந்த கருத்துகளையும், சொல்லிவந்த தத்துவங்களையும் தற்போது அவையில் எடுத்து வைக்கக்கூட நாதியில்லை என்கிற நிலை இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி.

அதைவிடப் பேராபத்து ஒன்று உண்டு - நாடாளுமன்றத்துக்கு உள்ளேயாவது எதிர்க் கட்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவைக்கு வெளியே தேசம் முழுவதும் எதிர்க் கட்சிகளே இல்லாமல் இருப்பது ஜனநாயகத்தின் பெரும் அவலம். நாடாளுமன்றத்துக்குள்ளே அங்கீகாரம் பெற இன்னமும் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், மக்கள் மன்றத்தில் எதிர்க் கட்சி என்பது மக்கள் நினைத்தால் நாளையே வரும்! அது நாட்டுக்கும் நல்லது. மோடி அரசுக்கும் நல்லது!

தேவை ஆன்மப் பரிசோதனை

எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தோற்றதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் சரியான காரணங்கள் உண்டு. ஒவ்வொரு கட்சியும் தங்களைத் தாங்களே உள்ளே உற்றுப்பார்க்க வேண்டும். மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்ததால் தங்களுக்குத் தோல்வி என்று அவர்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொண்டால், அது சொந்த செலவில் தங்களுக்கு சூனியம் வைத்துக்கொண்ட கதையாக முடியும். பாஜகவுக்கும் மோடிக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் மாற்றாக எங்கெல்லாம் கட்சிகள் இருந்தனவோ அங்கெல்லாம் அவர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயங்கவில்லை. திரிணமூல் காங்கிரஸும், பிஜு ஜனதா தளமும், அதிமுகவும் இதற்குச் சரியான நிரூபணங்கள். மக்கள் தீர்ப்பின் மறுபக்கத்தைப் படியுங்கள்.

இறுதியாக, எங்கள் பிரதமரே! தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது ‘ஹிந்து ராஷ்டிரம்’ அல்ல! அது அப்பழுக்கற்ற ‘ராமராஜ்யம்!’

- பீட்டர் அல்போன்ஸ்,மூத்த தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in