

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வாய்ப்பு குறைந்த ஒரு சமூகத்திலிருந்து வந்தவர். பெண்கள் திருமணம் செய்துகொள்ளவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. டாக்டர் ரெட்டியின் தளர்வுறாத ஆற்றலும் துணிச்சலும், அவர் வழியில் குறுக்கிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு, 1912-ல் இந்தியாவில் முதல் பெண் மருத்துவராகவும் 1927-ல் சட்ட சபையில் தலைமை வகித்த முதல் பெண்ணாகவும் வரலாற்றில் இடம்பெற உதவின.
அவர் சட்டசபை உறுப்பினராகவும் சமூக சீர்திருத்த வாதியாகவும் கல்வியாளராகவும் விளங்கியவர். சமுதாய அடிநிலை மக்களின் உயர்வுக்குப் பெரிதும் உழைத்தவர். நேர்மையற்ற, அநீதியான தேவதாசி முறையை நீக்கியதும், குழந்தைகளைக் கொடுமைக்கு ஆட்படுத்தும் வழக்கத்தைத் தடுத்ததும், பெண்களின் திருமண வயதை உயர்த்தியதும் மற்றும் பலவும் அவர் தந்த கொடையாகும்.
சட்டசபை உறுப்பினராகவும் பெண்களை ஆற்றல் மிக்கவர்களாக ஆக்கும் ஆர்வலராகவும் இருந்தார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
அவர் நினைவாக இன்றும் உயிர்த்துடிப்புடன் இயங்கிவரும் அவ்வை இல்லமும், பள்ளிகளும் ஆதர வற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாதி, மத எல்லைகளைக் கடந்து 1930-ல் அவர் உருவாக்கிய முதல் இல்லமாகும்.
டாக்டர் ரெட்டியின் மற்றொரு கொடை, சென்னை புற்றுநோய் நிறுவனத்தைத் தோற்றுவித்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968-ல் மறைந்தபோது அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வானொலியில் ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் டாக்டர் சரோஜினி நாயுடுவும் இல்லாமல்போயிருந்தால், நாம் இன்று இத்தகைய உயர்பதவிகளில் அமர்ந்திருக்க இயலாது’ எனப் பாராட்டினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968 ஜூலை 22-ம் நாள் மறைந்தபோது, உலகம் அந்த உன்னதமான பெண்மணிக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து மரியாதை செலுத்தியது.
- டாக்டர் வி. சாந்தா, தலைவர், புற்றுநோய் நிறுவனம், சென்னை