Published : 30 Oct 2018 09:36 AM
Last Updated : 30 Oct 2018 09:36 AM

ரஜினி - திமுக:  உறவும் உரசலும்!

கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவுக்கும் ரஜினிக்குமான உறவு ஏற்றமும் இறக்கமுமாகச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், சமீபத்தில் திமுகவின் ‘முரசொலி’ நாளிதழில் ‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்’ என்ற பெயரில் கேள்வி - பதில் பாணியில் வெளியான கட்டுரை, சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினியிடமிருந்தும் அவரது ரசிகர்களிடமிருந்தும் வந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து,  ‘கட்டுரை சில நல்ல மனதைப் புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இனி, அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று ‘முரசொலி’யில் திருத்தம் வெளியிடப்பட்டிருந்தாலும், திமுக – ரஜினி இடையிலான பிளவை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன என்றே பேசப்படுகிறது.

ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கு முழுத் தகுதி ஆகிவிடாது என்று ரஜினி சொன்னதை விமர்சித்த ‘முரசொலி’ கட்டுரை,  ‘முப்பது, நாற்பது ஆண்டுகள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்குத் தகுதியாகிவிடுமா?’ என்ற தொனியில் கேள்வி எழுப்பியது. கார்ப்பரேட்டுகளின் துணையோடு ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக விமர்சிக்கும் அந்தக் கட்டுரை, திராவிட எதிரிகளின் கைப்பாவையாக ரஜினி செயல்படுகிறார் என்ற காட்டமான விமர்சனத்தையும் முன்வைத்தது. கடந்த முப்பதாண்டுகளில் ரஜினியை விமர்சித்து இப்படியொரு கருத்து திமுக தரப்பிலிருந்து வெளிவந்திருப்பது இதுதான் முதன்முறை.

பரஸ்பர ஆதரவு

“ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!” - தொண்ணூறுகளின் மத்தியில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி முன்வைத்த முழக்கத்தை யாரும் மறந்துவிட முடியாது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா வீழ்த்தப்பட்டு, கருணாநிதி முதலமைச்சரான பிறகு அவருடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார் ரஜினி. பின்னாளில் ஜெயலலிதாவுடன் சமாதானம் செய்துகொண்ட பிறகும்கூட, தென்னிந்தியாவின் மூத்த தலைவர் என்று கருணாநிதியைப் பெருமிதத்துடன் அழைக்கத் தவறியதில்லை.

நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது தவித்துப்போன ரஜினி, முதலமைச்சர் கருணாநிதியிடம் உதவி கோரினார். வீரப்பனுடன் பேச்சு நடத்த முதலில் நக்கீரன் கோபாலும், பிறகு பழ.நெடுமாறனும் செல்வது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியிடம் பேசினார். காவிரி விவகாரத்தை முன்வைத்து தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கும் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ரஜினிக்குத் துணையாக இருந்தார் கருணாநிதி. திரைப்பட நட்சத்திரங்கள் நெய்வேலியில் போராட்டம் நடத்த முடிவெடுத்த நிலையில், 2002 அக்டோபர் 13 அன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் ரஜினி. அப்போது திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவளித்தார். இப்படிப் பல்வேறு தருணங்களில் இரு தரப்பிலும் நெருக்கம் தொடர்ந்தது.

தொடக்கப் புள்ளி

ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக ஆறு தொகுதிகளில் போட்டியிட்டபோது, பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ரஜினி. காரணம், ரஜினிக்கும் பாமகவுக்குமான பழைய பகை. “பாமக போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் பாமகவை எதிர்த்தும் மற்ற தொகுதிகளில் அவரவர் மனசாட்சிப்படியும் வாக்களிக்கலாம்” என்றார் ரஜினி. ரஜினியின் இந்த முடிவு திமுக கூட்டணிக்கு எதிரானது என்றே பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலின் முடிவில் பாமக ஆறு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

2006-ல் முதல்வர் கருணாநிதிக்குத் திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா நடத்தினர். அப்போது மேடையில் பேசிய நடிகர் அஜீத், விழாக்களில் பங்கேற்கச்சொல்லி நிர்ப்பந்திக்கப்படுவதாக வருத்தப்பட்டார். அப்போது கருணாநிதியின் அருகில் அமர்ந்திருந்த ரஜினி, சட்டென்று எழுந்து நின்று கைதட்டி அஜீத்தின் பேச்சை வரவேற்றார். இது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகு, கருணாநிதி – ரஜினி நட்பில் பெரிய விரிசலும் இல்லை, நெருக்கமான பிணைப்பும் இல்லை.

இந்தப் பின்னணியில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மு.க.ஸ்டாலின் திறமையான நிர்வாகி என்றதோடு, “ஸ்டாலினைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டால், இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று துக்ளக் ஆசிரியர் சோ சொல்வார்” என்று சொன்னார். இதை, ஸ்டாலின் மீதான பாராட்டாக எடுத்துக்கொள்வதா அல்லது ஸ்டாலினைச் சுதந்திரமாகச் செயல்பட கருணாநிதி விடவில்லை என்கிற விமர்சனமாக எடுத்துக்கொள்வதா என்ற குழப்பம் உருவானது.

1996 தேர்தலின்போது முதல்வர் நாற்காலி தன்னைத் தேடி வந்ததாகவும் ஆனால் அந்த நாற்காலி வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாகவும் சமீபகாலமாக ரஜினி பேசியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றிக்கு அவரது ஆதரவு துணைபுரிந்ததில் சந்தேகமில்லை. எனினும், முதல்வர் வாய்ப்பு என்பதெல்லாம் அதிகப்படியானது என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆசியும் அதிருப்தியும்

இதற்கிடையே, அரசியலில் இறங்குவது குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசிவந்த ரஜினி, திடீரென ஒருநாள் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். “எனது அரசியல் பிரவேசம் பற்றி கருணாநிதியிடம் கூறினேன். அவரிடம் ஆசி பெற்றேன்” என்றார். ஆனால், அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ முயற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதைகள் எல்லாம் நாட்டுக்கே தெரியும்” என்றார். ஆனால், அதன் பிறகும் முரசொலி பவள விழாவுக்கு ரஜினிக்கு அழைப்புவிடுத்தது திமுக. அந்த மேடையில் ஸ்டாலினுக்கு இருபுறமும் ரஜினியும் கமலும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பிறகு, கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்கு நேரில் வந்து ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய ரஜினி, மு.க.அழகிரியையும் தனியாகச் சந்தித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் அழகிரி பெயரை முதலில் சொன்ன ரஜினி, அதன் பிறகே ஸ்டாலின் பெயரைச் சொன்னார். அதுவும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

கருணாநிதி மரணத்துக்குப் பிறகு நடந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ரஜினி, “கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருடைய இறுதிச் சடங்கின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டாமா?” என்று கேட்டதோடு, “மெரினாவில் இடம் கொடுப்பதற்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீட்டுக்குப் போயிருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்” என்றார். இப்படிப் போய்க்கொண்டிருந்த உறவில்தான், ‘முரசொலி’ கட்டுரை மேலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்வினையாக, “என்னையும் ரசிகர்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது” என்று ரஜினி கூறியிருக்கிறார். போர் வரும்போது பார்க்கலாம் என்று சொன்னார் ரஜினி. தற்போது போர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது, பார்க்கலாம்!

- ஆர்.முத்துக்குமார். எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x