Last Updated : 04 Aug, 2018 09:23 AM

 

Published : 04 Aug 2018 09:23 AM
Last Updated : 04 Aug 2018 09:23 AM

எழுத்துதான் எனது அடையாளம்!- கண்டராதித்தன் பேட்டி

தமிழ் பக்தி இலக்கியமும் ராமாயணமும் வீட்டிலேயே புழங்கிய பின்னணியில் மரபு கொடுத்த செழுமையுடன் கவிதைகளை எழுதிவருபவர் கண்டராதித்தன். 1990-களின் இறுதியில் வெளிவந்த முதல் தொகுதியான ‘கண்டராதித்தன் கவிதைகள்’ நூல் அவரது வித்தியாசமான கூறுமுறை காரணமாகவே கவனம் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இவரது ‘திருச்சாழல்’ கவிதைத் தொகுதி பரவலான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பழந்தமிழ்க் கவிதை மரபும் தெரிந்து புதுக்கவிதையிலும் பங்களிப்பு செலுத்திய சாதனையாளர்களான க.நா.சு., நகுலன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், ந.ஜயபாஸ்கரன் என்ற தொடர்ச்சியில் கண்டராதித்தனுக்கும் இடமுண்டு. விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் சிறந்த கவிஞருக்கான குமரகுருபரன் நினைவு விருதை சமீபத்தில் பெற்றிருக்கிறார்.

ஏன் எழுதுகிறீர்கள்?

பால்யகாலம் முதல் தொன்மப் பாடல்களையும், கதைகளையும் கேட்டும், வாசித்தும் வளர்ந்ததால் இயல்பாக எழுத்துலகுக்குள் வர முடிந்தது. எனது இந்த வாழ்விலிருந்து எழுத்தை நீக்கிவிட்டால் பல கோடி பேரில் நானும் ஒருவன் என்பதாக அடையாளமற்றிருக்கிறேன். இந்த எழுத்து எனக்கு ஒரு தனித்த அடையாளத்தைத் தருகிறது. ஏற்கெனவே இருக்கும் வார்த்தைகளிலிருந்துதான் எழுதுகிறேன் என்றாலும் எழுத்து என்னைத் தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. இதில் உண்மை உண்டோ இல்லையோ மனம் இதை ஏற்கும் பக்குவத்துக்கு வந்துவிட்டது. மேலும், இந்த இக்கட்டான வாழ்க்கைச் சூழலில் ஓரளவுக்காவது ஆசுவாசமாக இருப்பதற்கும், மனச்சமநிலை கொள்ளவும் எனக்கு எழுத்து மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

எந்த நேரம் எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது?

இரவு 10 மணிக்குப் பிறகும், அதிகாலைப் பொழுதுகளும்தான் கவிதை எழுதுவதற்கு உகந்ததாக இருக்கிறது. நள்ளிரவும், அதிகாலையும் பரபரப்பின்றி, இரைச்சலின்றி இருப்பதால் அந்தப் பொழுதுகள் எனக்கு பாந்தமானவை. மேலும், பகல் பொழுதின் வேலைகளை என்னால் திட்டவட்டமாக வரையறுத்துக்கொள்ள முடிவதில்லை என்பதும், நிச்சயமான பணிச்சூழல் இல்லாததும் காரணங்களாக இருக்கக்கூடும். தவிரவும், லௌகீக விஷயங்களின் பொருட்டு குறைவாகவே எழுதுவதற்கான சாத்தியங்கள் வாய்க்கின்றன. நீள் கவிதைகளைத் தவிர மற்ற கவிதைகளை ஏறக்குறைய மனதுக்குள் முழு வடிவமடைந்ததும் எழுதிவிடுகிறேன். தனித்த பயணங்களின்போது எழுதவிருக்கும் கவிதை குறித்து அரூபமான வடிவுக்கு வர முடிகிறது.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

அவ்வளவு எளிதில் தன் எழுத்தின் மீது எழுத்தாளருக்கு அதீத திருப்தி இருக்க முடியுமா? தன் எழுத்தின் மீது எப்போதும் ஒரு திருப்தியின்மையும், அதே அளவில் வாஞ்சையும் இருக்கும் என்பதே உண்மை. மற்றவர்கள் அவ்வளவாகக் குறிப்பிடப்படாத தன் படைப்பாக்கத்தை சவலைப்பிள்ளையை அரவணைப்பதுபோல அணைப்பது படைப்பாளியின் இயல்பு. மற்ற கவிஞர்களுடன் ஒப்பிடும்போது எனது பங்களிப்பு மிகச் சிறிதுதானெனினும் மனது ஒரு முழுநேர எழுத்தாளனாகவே கருதிக்கொள்கிறது. வாழ்க்கையைப் பூர்த்தியாக்கும் எழுத்தை எழுதியிருக்கிறேனா என்பதை இந்த அளவிலான பங்களிப்பில் சொல்வது முறையாகாது. இதைவிடவும் சிறந்த படைப்புக்களுக்கான காலமும், மனதும் இருக்கிறது.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

எந்தத் திட்டமிடலுமின்றி எழுதிக்கொண்டி ருப்பதால் சென்றுசேர வேண்டிய இலக்குகளின்றி இருக்க முடிகிறது. மேலும், இதன் மூலம் கிடைக்கும் அடையாளம், அங்கீகாரம் போன்றவற்றை நம்பிக்கொண்டிருப்பதில்லை. கிடைத்தாலும் சுமந்து திரிவதில்லை. இதனால், சோர்வடைய வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனாலும் அரசியல், சமூக மாற்றங்கள் மனதளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கெல்லாம் எதிர்வினையாற்ற முடியாத மனநிலை வாய்த்திருப்பதும், உடனடி அங்கீகாரத்துக்கான பாவனைகளைக் காணும்போதும் மனச்சோர்வாக உணர்வேன்.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

எண்ணற்ற நண்பர்களிடமிருந்து அறிவுரைகள் பெற்றிருக்கிறேன். குறிப்பாக கோணங்கி, பா.வெங்கடேசன், அசதா, ஸ்ரீநேசன் போன்றோர் கறாராகவும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எழுதும் தருணத்தில் அவற்றை நினைப்பதில்லை. பல நேரங்களில் சிறந்த அறிவுரையே நம்மைப் பலவீனமாக்கிவிடும் வாய்ப்புள்ளது. ஆனாலும் அணுக்கமான நண்பர்களும், எழுத்தாளர்களும் எழுத்து குறித்து தொடர்ந்து தனிப்பட்ட முறையில் என்னுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும், ஏற்றுக்கொள்ள முடிகிற விஷயங்களைத் தவிர என் எழுத்தை நானே தீர்மானிக்கிறேன்.

இலக்கியம் தவிர்த்து - இசை, பயணம், சினிமா, ஓவியம்... - வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைதான் நகரச் சூழலுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். கிராமத்தில் தேவையான விஷயங்களோடு மட்டும் இருந்துவிடுவது வாடிக்கை. தமிழிசைப் பாடல்களைக் கேட்கும்படியான வாழ்க்கைச் சூழல் உள்ளதால் தினந்தோறும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். தருமபுரம் சுவாமிநாதன், மழையூர் சதாசிவம், மயிலை ஓதுவார் சற்குருநாதன் ஆகியோரின் குரல்களுடனும், எல்லா காலத்திலும் ஊர்ப்புறத் தலங்களில் தன்போக்கில் பாடும் ஓதுவார்களிடமும் மனமொன்றி இருக்க முடிகிறது. இணைய வசதிகள் பெருகியதற்குப் பிறகு இந்துஸ்தானி, கர்நாடக இசையைக் கேட்பதுண்டு. ஹிந்தோளம், மல்லாரி ராகங்கள் எனக்குப் பிடித்தமானவை. 1980-களுக்கு முந்தைய சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் உட்புற மடிப்புகளின் வழி எளிய மனிதர்களைக் காண்பதும் எனக்குப் பிடித்தமானது. அவ்வப்போது இங்குள்ள குளக்கரைகள், அரசமரங்கள், பறவைகள், ஏரிகள், பாழடைந்த வீடுகள், வெற்றுப் பாதைகள், பிரம்மாண்டமான கல்மலைகள், காப்புக்காடுகள், தொல்குடிகளின் வாழ்விடங்கள் என பயணிப்பதுண்டு. எப்போதாவது வடஇந்தியப் பகுதிகளில் பயணப்படுவதுண்டு. பெரும்பாலும் தனியாக. நீண்ட தனிமையான பயணங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், தெளிவானதாவும் மாற்றுகிறது. அந்த அளவில் அது எழுத்துக்கும் உபயோகமாகிறது.

இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

தொடர்ந்து வாசிக்கப் புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும் நிலையில் இதுவொரு முடிவிலி என்றே சொல்லலாம். புத்தகங்கள் புதியதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆக, ஒவ்வொரு மனநிலையிலும் ஒவ்வொரு வகைப்பட்ட புத்தகங்களை வாசிக்கத் தோன்றுகிறது. வாசிப்பின் வேட்கை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அடிப்படையான ஒழுக்க நெறிகள், நம்பிக்கைகள், கலாச்சாரப் பிடிப்புகள் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகியிருக்கும் காலமிது. எனவே, எல்லோருக்கும் ஏதோவொரு கருத்தாக்கத்துடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ தொடர்புள்ளது. எனவே, இலக்கியத்தில் இதன் தாக்கம் வெளிப்படுவது இயல்பானதாகிறது. தனது பழக்கவழக்கங்கள், வாழ்வு நெறிமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுடன் இலக்கிய வாசிப்பும் சற்று பண்படுத்தவும், செம்மைப்படுத்தவும்கூடும். முழுமுற்றாக இலக்கியம் ஒருவரைப் பண்படுத்தச் சாத்தியமில்லை. மிகச் சிறந்த மாமனிதர்கள் என்று நாம் நம்பிக்கொண்டிக்கும் பலரும் சராசரியான வாழ்வியல் நெறிகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடமிருந்து வெகுதொலைவில் நிற்கிறார்கள். இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். நற்பண்புடையவர்களைத் தற்போது கீழ்மையானவர்களாக, எள்ளலுக்குரியவர் காளகப் பார்க்கிறார்கள். இந்த மனநிலையைச் சரியாக்குவது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x