Last Updated : 05 Aug, 2018 09:29 AM

 

Published : 05 Aug 2018 09:29 AM
Last Updated : 05 Aug 2018 09:29 AM

தாவியோடுகிறது தாமிரபரணி... கரைபுரள்கிறது காவிரி... வறண்டு கிடக்கிறதே வைகை!- ஆக்கிரமிப்புகளால் அழிந்துவரும் ஒரு நதியின் மூலம்...

தமிழகம் முழுக்க நம் நதிகளெல்லாம் பொங்கும் தருணத்தில் வைகை ஆறு மட்டும் வறண்டு கிடக்கிறது. தமிழகத்தின் பிரதான மேட்டூர் முதல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி வரையில் அத்தனை அணைகளும் நிரம்பி வழிகிறபோது, வைகை அணை தன் கொள்ளளவில் பாதியைக்கூட எட்டவில்லை. வைகை அணைக்கு முல்லை பெரியாற்றிலிருந்து தண்ணீர் வருகிறதே ஒழிய, வைகை ஆற்றிலிருந்து சொட்டுத் தண்ணீர்கூட வராததே இதற்குக் காரணம். தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற மிக நீளமான (258 கி.மீ.) நதி, தமிழகத்தின் 4-வது பெரிய நதி என்றெல்லாம் போற்றப்படும் இந்த நதியில் என்னதான் பிரச்சினை என்று அறிய அது உற்பத்தியாகும் மூலத்துக்கே சென்றோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருஷநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறந்த வீடு. கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேகமலையின் விளம்பிலிருந்து இறங்கும் அம்மா கஜம் ஆறு வெள்ளிமலையாறுடன் இணைகிறது. இதனுடன் கூட்டாறு என்ற இடத்தில் உடங்கலாறும் சேர்ந்த பிறகுதான் வைகை, பெரிய ஆறாகிறது. வனத்துறையினர் அனுமதியுடன் அப்பகுதிக்கும் சென்றோம்.

25 ஆக்கிரமிப்பு கிராமங்கள்!

ரிசர்வ் ஃபாரஸ்ட் எல்லையில் அமைந்துள்ள மஞ்சனூத்து செக்போஸ்ட்டில் நம்மை சோதித்தே உள்ளே அனுமதித்தார்கள். திடீரென சாலையின் இடதுபுறம் ஒரு கிராமம் தென்பட்டது. அந்த ஆக்கிரமிப்பை அரசாங்கமே ஊக்குவிக்கும் வகையில், தாய் திட்டத்தின் கீழ் அங்கு குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். “மேகமலை வன உயிரின சரணாலயம் உருவானபோது காட்டுக்குள் பாரம்பரியமாக வசித்த பளியர் இன மக்களையே நாங்கள் வெளியேற்றி, தனியாக காலனி வீடு கட்டிக்கொடுத்திருக்கிறோம் சார். ஆனால், இந்த அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மலைக்குச் சம்பந்தமே இல்லாத மக்களையெல்லாம் காட்டை ஆக்கிரமிக்க உடந்தையாக இருக்கிறார்கள். வாலிப்பாறைக்கு மேலே மட்டும் சுமார் 25 ஆக்கிரமிப்பு கிராமங்கள் இருக்கின்றன. அறியாத ஜனங்கள். அதிரடி நடவடிக்கை எடுத்தால், அரசியல்வாதிகள் தலையிடுவார்கள். எங்களால் ஒரு விஷயத்தை மட்டும்தான் செய்ய முடிந்திருக்கிறது. இந்தக் கிராமங்களுக்கு மின்இணைப்போ, செல்போன் இணைப்போ வராதபடி பார்த்துக்கொள்கிறோம். ஆனால், அதுபற்றி இந்தப் பகுதி எம்எல்ஏக்கள் அடிக்கடி சட்டசபையில் குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் அந்த அலுவலர்.

ஊற்றுக்கண்ணிலேயே தண்ணீர் திருட்டு!

வைகையின் மூலத்தை நோக்கிய எங்கள் பயணம் கடுக்காகளம் என்ற இடத்தைத் தாண்டி, வனத்துறையின் வேட்டைத்தடுப்பு முகாமை அடைந்தது. அதற்கு மேல் வாகனத்தில் செல்ல முடியாது என்பதால், ஆற்றையொட்டி மண் சாலை வழியாக நடக்கத் தொடங்கினோம். திடீரென ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுபோல ஒன்று தென்பட, அது எஸ்டேட்டுக்குச் செல்லும் சாலை என்றனர் வனத்துறையினர். வைகையின் மூலத்தில் எஸ்டேட்டா என்று வாய்பிளக்க, “சுமார் 20 எஸ்டேட்கள் இருக்கின்றன” என்றார்.

முதலில் தென்பட்டது மதுரையை ஆண்ட மன்னன் பெயரிலான எஸ்டேட். வனத்துறையினருடன் சென்றதால் உள்ளே நுழைய தடை இல்லை. கிட்டத்தட்ட 3,500 ஏக்கர் பரப்புக்கு விரிந்துள்ள இந்த எஸ்டேட்டில் காபி, கிராம்பு போன்ற தோட்டப்பயிர்களே அதிகம் உள்ளன. நிறைய சில்வர் ஓக் மரங்களும் இருந்தன. பலாவைத் தவிர இயற்கைத் தாவரங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. காட்டுக்குள்ளிருந்து இறங்குகிற பல சிற்றோடைகள் இந்த எஸ்டேட்டைத் தாண்டித்தான் வைகையை அடைய வேண்டும். ஆனால், இவர்கள் வழியிலேயே சிறு அணைபோல தடுப்பு ஏற்படுத்தி அதில் மிக நீளமான குழாய்களைச் செருகியுள்ளனர். அந்தக் குழாய்கள் வழியாக எஸ்டேட்டின் பல்வேறு பகுதிக்கும் பாசனம் நடக்கிறது. தவிர, எஸ்டேட்டின் மேடான பகுதியில் 30 அடி நீளம், 15 அடி அகலம், 12 அடி ஆழம் கொண்ட பெரிய சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதில் சிற்றோடைத் தண்ணீர் தானாக வந்துவிழுகிறது. வறட்சிக்காலங்களில் இதில் இருந்து டீசல் மோட்டாரைப் பயன்படுத்தி, பாசனம் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய ஆறாக இருந்தாலும் ஊற்றுக்கண்ணிலேயே கை வைத்துவிட்ட பிறகு அது எப்படிப் பெருக்கெடுத்து ஓடும்?

62 ஆயிரம் ஹெக்டேர்!

இங்குள்ள சுமார் 20 தனியார் எஸ்டேட்களின் மொத்தப்பரப்பு 62 ஆயிரம் ஹெக்டேர்! அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிற இடத்தையும் சேர்த்தால், 1 லட்சம் ஹெக்டேரைத் தாண்டிவிடும் என்கிறார்கள். ஆனால், இவற்றை மறு சர்வே செய்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வனத்துறையில் ஊழியர்களும் இல்லை. அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் இல்லை.

“எல்லாத்துக்கும் காரணம் கண்டமனூர் (வருஷநாடு) ஜமீன்தான். வருஷநாடு, மேகமலை மட்டுமின்றி கேரள எல்லை வரைக்கும் உள்ள காடுகளும், மலைகளும் அந்த ஜமீனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கிட்டத்தட்ட 2,500 சதுர கிலோ மீட்டர் பரப்பு! ஊதாரித்தனமாகச் செலவழித்து, ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டவே வழியில்லாமல் போய்விட்டார் ஜமீன்தார். கடைசியில், ஜமீன் சொத்துகள் ஏலம்போயின. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரஸ்டன்சிபாய் பட்டேல் சகோதரர்கள் அந்த இடத்தை வெறும் ஐந்தரை லட்சத்துக்கு ஏலமெடுத்தார்கள். இது நடந்தது 1922-ல். அதன் பிறகுதான் மலைக்குள் இருந்த காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு எஸ்டேட்கள் உருவாகின. ஜமீன் குடும்பத்தினர் வழக்குப்போட்டு சொத்துகளை மீட்கப் பார்த்தார்கள். வழக்கு செலவுக்காக மீதிச் சொத்தையும் இழந்தார்களே தவிர எதையும் மீட்கவில்லை. அப்படி மீட்டிருந்தால், 1952-ல், ஜமீன் ஒழிப்புச்சட்டம் வந்தபோது மொத்தக்காடும் அரசு வசம் வந்திருக்கும்” என்றார்  வன அதிகாரி.

“வைகையில் நீர்வரத்து குறைந்துபோனதற்குக் காரணம், காடு அழிப்புதான். வைகை நீர்ப்பிடிப்பு பகுதியும், பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியும் ஒரே மலைத்தொடரில்தான் இருக்கின்றன. பெரியாறில் வருடம் முழுக்கத் தண்ணீர் வருகிறது. இங்கு மட்டும் ஏன் மழை பெய்வதில்லை என்று சிந்தித்தாலே பாதித் தீர்வு கிடைத்துவிடும். முதலில் எஸ்டேட்கள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த வேண்டும். பிறகு, மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்டு, அவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்த வேண்டும்” என்கிறார் வைகையின் மூலத்தைக் காப்பதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் இயற்கை ஆர்வலர் மருத்துவர் சி.பி.ராஜ்குமார்.

புலிகள் சரணாலயம் வருமா?

காட்டையும், ஆற்றையும் காப்பாற்ற வனத்துறையினரே பரிந்துரைக்கும் ஒரே திட்டம், மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்றுவதுதான். இதற்கு முன்னுதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை! “தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிற மேற்குத் தொடர்ச்சி மலையில், 1970-களுக்குப் பிறகு காடு அழிப்பு மிக மோசமாக நடைபெற்றதால், ஒரு கட்டத்தில் அந்த ஆறும் வறண்டுவிட்டது. ஆண்டு முழுக்கத் தண்ணீர் ஓடும் அந்த நதி, கோடைகாலத்தில் 4 மாதம் வறண்டுபோகத் தொடங்கியது. இந்த நிலையில்தான் 1980-ல் முண்டந்துறை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இதனால் காடு பாதுகாக்கப்பட்டதோடு, காட்டை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மாற்று வாழ்வாதார ஏற்பாட்டுக்கு நிறைய நிதியும் ஒதுக்கப்பட்டது. 1990-க்குப் பிறகு தாமிரபரணி மீண்டும் வற்றாத ஜீவநதியாக மாறிவிட்டது” என்கிறார் முன்பு முண்டந்துரை புலிகள் காப்பக இயக்குநராக இருந்து, தற்போது கோவை மாவட்ட வன அதிகாரியாக இருக்கும் டி.வெங்கடேஷ்.

இதுபற்றி தமிழக வனத்துறை அமைச்சரும், வைகையால் பயன்பெறும் பகுதியைச் சேர்ந்தவருமான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, “மேகமலையைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மக்களைப் பாதிக்காதவாறு அதை எப்படிச் செயல்படுத்துவது என்று யோசித்துவருகிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். கமிஷன் வரும் என்றால்தான் எந்த வேலையும் வேகமாக நடக்கும்போல! ஆறும், புலியும் கமிஷன் தருமா என்ன?

-கே.கே.மகேஷ், தொடர்புக்கு:magesh.kk@kamadenu.in

நாளை வெளிவரும் ‘காமதேனு’ இதழிலிருந்து சிறு பகுதி...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x